மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் எட்டு – பசியுள்ளவர்களை நன்மைகளால் நிரப்பினார்

லூக். 1:53—பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.

லூக்கா 1:53, “பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்” என்று கூறுகிறது. தேவனின் கிருபை, ஒருவகையான நபருக்கு—பசியுள்ளவனுக்கு—ஒதுக்கப்பட்டுள்ளது என்று இந்த வசனம் நமக்குக் காட்டுகிறது. வேடிக்கை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மட்டுமே ஒருவர் கூடுகைக்கு வந்தால், அவர் எதையும் பார்க்கவோ எதையும் கேட்கவோ மாட்டார். ஒரு நபர் விரும்புவதெல்லாம் ஏதோ வேத அறிவு மட்டுமே என்றால், அவனது நிஜமான ஆவிக்குரிய பிரச்சினைகள் தீர்க்கப்படாது. ஓர் அழுத்துகிற உள்ளார்ந்த தேவையுடன் இருக்கிறவர்களும், தேவனைச் சந்திக்கத் தீர்மானமுள்ளவர்களும் மட்டுமே அவரது ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். ஆவிக்குரிய முன்னேற்றம் நம் பசியை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் உணர வேண்டும்.

பரிசுத்த ஆவி நம்மை வெறுமையாக்குதல்

நம் அனுபவத்தில் பரிசுத்த ஆவி நம்மை வெறுமையாக்க முடியும் என்பது ஓர் அற்புதமான விஷயம். பல உண்மையான கிறிஸ்தவர்கள் இத்தகைய அனுபவத்தினூடாகக் கடந்துசென்றுள்ளனர். முதலில் நாம் ஒரு கிறிஸ்தவனாக ஆனபோது, எல்லாவற்றிலும் நாம் நம்மை நல்லவர்கள், திறமையானவர்கள் என்று கருதினோம். ஆனால் சில காலம் கழித்து நாம் வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கை கிறிஸ்தவ தரத்திற்குக் குறைவாக இருந்தது என்பதை நாம் கவனித்தோம்; நாம் தோல்வியடைந்தோம், இனிமேல் தொடர்ந்து செல்ல முடியாது என்பதை உணர்ந்தோம். இதன் விளைவாக, நாம் அதிருப்தியாக உணர்ந்தோம், நம்மை நிரப்பவும், நம்மைக் கீழ்ப்படிதலுள்ளவர்களாக ஆக்கவும் நாம் ஜெபித்தோம். பின்பு தேவன் தாங்கமுடியாத, விருப்பமற்ற சூழ்நிலைகள் நம்மீது வரும்படி கட்டளையிட்டார். ஆனாலும் தேவனின் கிருபையினால் இறுதியில் நாம் அவற்றை ஜெயங்கொண்டோம். பிறகு சாட்சிபகிர நம்மிடம் ஏதோவொன்று இருந்தது, நாம் ஜெயங்கொண்டோம் என்று நம்மால் சொல்ல முடிந்தது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நாம் ஜெயங்கொண்டோம் என்றும், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில், தேவன் நம்மை நிரப்பினார் என்றும் நம்மால் கூறமுடிந்தது. அந்தக் கட்டம் முதல் நாம் ஜெயங்கொள்பவர்களாக இருந்தோம் என்று எண்ணியிருக்கக் கூடும். ஆனால் வியக்கத்தக்க வகையில், சிறிது காலத்திற்குப்பின், அந்த வெற்றி தொலைந்து போனது, மீண்டும் தோல்வி வந்தது. ஜெயங்கொள்வது மிகவும் எளிது என்று நாம் எண்ணினோம், ஆனால் எல்லா பலமும் போய்விட்டதாகவும், மீண்டும் நமக்கு முன் புதிய தடைகள் இருப்பதாகவும் தோன்றியது. நமக்கு முன் ஒரு சுவர் இருப்பதுபோல் தோன்றியது; நாம் எந்த வழியையும் கண்டுபிடிக்க முடியவில்லை, அதைக் கடந்துசெல்ல எந்த வழியும் இருப்பதாகவும் தோன்றவில்லை. இதைத் தொடர்ந்து, நம் முந்தைய வெற்றி தொலைந்து போனது என்றும், நாம் இனியும் தேவனால் நிரப்பப்படவில்லை என்றும் நாம் கூறினோம்.

அவர் நம்மை நம் முடிவுக்குக் கொண்டுவரும் போதெல்லாம், நம் முன்னேற்றம் ஆரம்பித்தல்

நம் சுற்றுச்சூழல்களில் கர்த்தரால் கட்டளையிடப்பட்ட எல்லாம் நம்மில் ஒரு தேவையை உருவாக்கி, அதை நம் கடந்தகால அனுபவத்தைக்கொண்டு ஜெயங்கொள்ள முடியாது என்று நம்மை உணர்த்துவதற்காக இருக்கிறது என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்வோமாக. கடந்தகால வெற்றிகள் மாறாமல் இருக்கின்றன, ஆனால் கடந்தகால வெற்றிகள் மூலம் புதிய சிரமங்களை ஜெயங்கொள்ள முயற்சிப்பது ஒருபோதும் பலன் தராது. பலர் தங்கள் கடந்தகால வெற்றிகளைப் பார்க்கின்றனர், ஏன் இப்போது தங்களால் ஜெயங்கொள்ள முடியவில்லை என்று ஆச்சரியப்படுகின்றனர். சகோதர, சகோதரிகளே, நாம் ஒரு காரியத்தை உணர்ந்தறிய வேண்டும், நாம் நேற்றைய மன்னாவை வைத்திருக்க தேவன் விரும்பவில்லை. ஒவ்வொரு புதிய கஷ்டத்துடனும், இதற்கு முன் நாம் ஒருபோதும் உணர்ந்திராத ஒரு புதிய தேவை எழுகிறது. சகோதர, சகோதரிகளே, கர்த்தரைப் பற்றிய ஒரு புதிய அறிவு இல்லாமல், அவரின் ஒரு புதிய தரிசனம் இல்லாமல், நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அவர் நம்மை நம் முடிவுக்குக் கொண்டு வரும் போதெல்லாம், “என்னால் இதைச் செய்ய முடியாது!” என்று கதறும்நிலையில் நாம் இருப்பதைக் காணும்போதெல்லாம், நம் முன்னேற்றம் ஆரம்பித்துவிட்டது. அப்போது தேவன் நம்மில் தமக்கான ஒரு வாஞ்சையை எளிதில் உருவாக்க இயலும். நம் பசி இவ்வித அனுபவத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்பது நமக்குத் தெளிவாக இல்லையா?
ஓர் உண்மையான விதத்தில் நீங்கள் அவரை நாடுவதைப் பார்க்க தேவன் வாஞ்சிக்கிறார். எனவே, அவர் உங்களுக்கு முன் சோதனைகளையும், சிரமங்களையும் வைக்கிறார். இந்தக் காரியங்கள் உங்களுக்கு முன் இருக்கும்போது, நீங்கள் நேர்மையானவிதத்தில் அவரையே நாட வேண்டும். உங்களுக்கு நிஜமாகவே அவரது வல்லமை தேவைப்படும்போது, அவரில்லாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை நீங்கள் உணந்தறிவீர்கள்.

நிரப்பப்படும்படியாக நாம் தொடர்ந்து
காலியாக்கப்படுவதற்கான தேவை

சகோதர, சகோதரிகளே, நாம் வெறுமையாகும்போதெல்லாம், கர்த்தர் நம்மை நிரப்புவார்….2 இராஜாக்கள் 4இல் உள்ள கதை, ஒரு முக்கிய ஆவிக்குரிய கோட்பாட்டை நமக்குக் காட்டுகிறது…அந்தப் பெண்ணிடமும் அவளது மகன்களிடமும் என்ன இருந்தது? அவர்களிடம் ஒரு குடம் எண்ணெய் மட்டுமே இருந்தது. அதே ஒரு குடம் எண்ணெய் பிற்பாடு பல காலி பாத்திரங்களுக்குள் ஊற்றப்பட்டது. ஆரம்பத்தில் அவளிடம் இருந்த சிறிதளவு எண்ணெய் மிகமுக்கியமானது. வேதத்தில், எண்ணெய் பரிசுத்த ஆவியைப் பிரதிநிதிப்படுத்துகிறது. யாருக்குள் ஆவியானவர் எற்கெனவே தங்கியிருக்கிறாரோ அவர்கள் மீது மட்டுமே பரிசுத்த ஆவி வேலைசெய்கிறார்.

அந்த விதவையிடம் வெகுசில பாத்திரங்கள்தான் இருந்தன என்பதே அவளின் பிரச்சனை. எலிசா அவளிடம், “நீ போய், உன்னுடைய அயல்வீட்டுகாரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி, உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை” என்றான் (வவ. 3-4). அந்தப் பெண் என்ன செய்தாள்? “அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள். அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று” (வவ. 5-6). அவள் வெறுமையான பாத்திரங்களைக் கடன்வாங்க வேண்டியிருந்தது—இது நம்முள் பரிசுத்த ஆவிக்கான வெறுமையான அறையின் தேவையைப் பற்றிப் பேசுகிறது. அவள் சிலவற்றை மட்டும் கடன்வாங்க வேண்டியிருக்கவில்லை—எத்தனை பாத்திரங்கள் கிடைக்குமோ அவ்வளவு நல்லது என்பதே இதன் பொருள். ஒரே ஒரு வெற்று அறை மட்டுமல்ல, மாறாக பல வெற்று அறைகள் இருக்க வேண்டும்.

இன்னொரு மிக முக்கியமான காரியம் எண்ணெய் ஊற்றப்பட வேண்டியிருந்த இடமாகும். அது வீட்டில், கதவு மூடப்பட்ட நிலையில் ஊற்றப்பட வேண்டியிருந்தது. கதவை மூடுவதென்றால், அந்தப் பெண்ணையும், அவளது மகன்களையும், அந்த எண்ணையையும் அடைத்துவைத்தல் என்று பொருள். இது, நாமே நேரடியாகப் பரிசுத்த ஆவியுடன் இடைபட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. எல்லாம், நமக்கும் கர்த்தருக்கும் இடையே இருக்க வேண்டும். சிரமங்கள், வெற்றிகள் யாவும் தனிநபர் சார்ந்தவை.

நாம் நம்மை வெறுமையாக்குவதற்காக
தேவன் காத்திருத்தல்

நாம் இன்னொரு விலையேறப்பெற்ற காரியத்தைப் பரிசீலிக்க வேண்டும்: “அதற்கு அவன் [மகன்] அவளிடம் வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று.” பரிசுத்த ஆவி ஒவ்வொரு காலி பாத்திரத்தையும், கடைசி பாத்திரத்தையும்கூட நிரப்புவார். அங்கு இன்னும் அநேக காலி பாத்திரங்கள் இருந்திருந்தால், அதிக எண்ணெய் இருந்திருக்கும். வேறு பாத்திரங்கள் இல்லை என்பதே எண்ணெய் நின்றுவிட்டதற்கான காரணம் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். முதலில் நின்றுபோனது எண்ணெய் அல்ல, மாறாக முதலில் காலியானது வெறுமையான பாத்திரங்களே. சகோதர சகோதரிகளே, நாம் நம்மை வெறுமையாக்க தேவன் காத்திருக்கிறார்.

பரிசுத்த ஆவி நம்மை நிரப்புமாறு, நம்மில் அதி ஆழமாய்த் தோண்டவும், நம்மில் அதிக அறையை ஏற்படுத்தவும் நாம் கர்த்தரிடம் ஜெபிக்கவும், அவரிடம் வேண்டிக்கொள்ளவும் வேண்டும். பரிசுத்த ஆவியின் நிரப்புதல் நம் வெறுமையைச் சார்ந்துள்ளது. நான் மீண்டும் சொல்கிறேன்: நம் வெறுமை ஒரு தொடர்ச்சியான நிலையாக இருக்க வேண்டும். நாம் நம்மை வெறுமையாக்க முடியாவிட்டால், தேவன் நம்மை நிரப்ப முடியாது. பரிசுத்த ஆவி நம்முள் வெற்று அறைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவாய் வெற்று அறைகளை நாம் அவருக்குத் தருகிறோமோ, அவ்வளவாய் அவர் நம்மை நிரப்புவார். வெற்று அறை இருந்தால், பரிசுத்த ஆவியாலான அதிக நிரப்புதல் வரவிருக்கிறது என்பதே அதன் பொருள். ஆகையால், நிரப்புதலை நாம் நாடத் தேவையில்லை; நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்மை வெறுமையாக்குவதே. பரிசுத்த ஆவி மட்டுமே நிரப்புதலுக்குப் பொறுப்புள்ளவர்; நம் பொறுப்பு நம்மை வெறுமையாக்குவதே. நாம் நம்மை வெறுமையாக்க முடிந்தால், நம்மிடம் நிரப்புதல் இருக்கும். நிரப்புதலைக் குறித்து நம்மிடம் எந்த உணர்வும் இல்லாதிருக்கக் கூடும், ஆனால் நிரப்புதலைக் குறித்த உண்மை நிச்சயமாக நம்முடன் இருக்கும். (CWWN, vol. 37, pp. 132-140)

References: CWWN, vol. 37, ch. 22

அன்பின் ஆண்டவா, உம்மிடம்
வார்த்தையை ஆழ்ந்து படித்தல்—
வார்த்தையை உண்ணுதல்
812
1 அன்பின் ஆண்டவா, உம்-
மிடம் வந்தேன்; உம்மை
உண்டு பருகி இன்புற,
என் நெஞ்சம் வாஞ்சிக்கும்.

2 உம் முகம் காண்பதே,
என் நெஞ்சின் ஆவலே;
தாகம் தீரும்வரை உம்மைப்
பருக வாஞ்சிப்பேன்.

3 உம் முகம் கண்டிங்கு
அமர்வேன் அகலேன்;
கண்விலகாமல் காண்பதில்,
என் நெஞ்சம் பூரிக்கும்.

4 கர்த்தாவே, நீரே என்
கிருபை இவ் ஐக்கியத்தில்;
என் நெஞ்சம், ஆவி மகிழ்ந்து,
உம்மிலே ஒய்வுறும்.

5 வார்த்தையில் ஜெபத்தில்,
உம்மை நான் தேடுவேன்,
என்மூலம் நீர் பாயும்வரை
நான் இங்கு தங்குவேன்.

 

Jump to section