மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் பதினான்கு – உலகத்தை நேசிக்காதிருத்தல்

1 யோ. 2:15-16—உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவுக்கான அன்பில்லை. 16ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவையெல்லாம் பிதாவினாலுண்டானவையல்ல, அவை உலகத்தினாலுண்டானவை.

உலகம்—தேவன்-சிருஷ்டித்த மனிதனை
அபகரிக்க சாத்தானால் ஏற்படுத்தப்படுதல்

உலகம் என்பதற்கான கிரேக்க வார்த்தையான காஸ்மோஸ் என்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தம் உண்டு…யோவான் 1:29; 3:16; மற்றும் ரோமர் 5:12இல், இது சாத்தானின் தீய உலக அமைப்பிற்கான ஆக்கக்கூறுகளாக அவனால் கெடுக்கப்பட்டு, அபகரிக்கப்பட்ட விழுந்துபோன மனித இனத்தைக் குறிக்கிறது…யோவான் 15:19; 17:14, யாக்கோபு 4:4இல் உள்ளதுபோல, [1 யோ. 2:15] இல், இது ஒரு ஒழுங்கு, ஒரு ஒழுங்குமுறை, ஒழுங்கான ஏற்பாட்டைக் குறிக்கிறது, எனவே, இது (தேவனின் எதிரியாகிய சாத்தானால் உருவாக்கப்பட்ட) ஒழுங்குபடுத்தப்பட்ட முறையைக் குறிக்கிறது, பூமியைக் குறிக்கவில்லை. தம் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக பூமியில் வாழ தேவன் மனிதனைச் சிருஷ்டித்தார். ஆனால், தேவன்-சிருஷ்டித்த மனிதனை அபகரிக்க அவரது எதிரியான சாத்தான் மனிதர்களின் இச்சைகள், இன்பங்கள், தேடல்களிலும், உணவு, உடை, வீடு, போக்குவரத்து போன்ற வாழ்க்கைக்கு அத்தியாவசியங்களில் அவர்களது திளைத்தலும் கூட, அவர்களின் விழுந்துபோன சுபாவத்தின் மூலம் மதம், கலாச்சாரம், கல்வி, தொழில்துறை, வர்த்தகம், பொழுதுபோக்கு ஆகியவற்றைக் கொண்டு மனிதர்களை அமைப்புப்படுத்துவதால் இந்தப் பூமியில் ஓர் தேவனுக்கு எதிரான உலக அமைப்பை உருவாக்கினான். இத்தகைய ஒரு சாத்தானிய அமைப்பு முழுவதும் தீயவனில் விழுந்து கிடக்கிறது (1 யோ. 5:19). இப்படிப்பட்ட உலகத்தை நேசிக்காதிருப்பதே தீயவனை ஜெயங்கொள்வதற்கான தளம். அதைச் சிறிதளவு நேசிப்பதும்கூட, நம்மைத் தோற்கடித்து, நம்மை ஆக்கிரமிப்பதற்கான தளத்தைத் தீயவனுக்குக் கொடுக்கிறது.

உலகத்திலுள்ள காரியங்கள்
மாம்சத்தின் இச்சை

[ஒன்று யோவான் 2:16 கூறுகிறது, “ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.” சரீரத்தின் உணர்ச்சிப்பூர்வமான ஆசையாகிய மாம்சத்தின் இச்சை, முக்கியமாக சரீரத்துடன் தொடர்புடையது. நன்மை தீமையின் அறிவு விருட்சத்தின் கனி மனித இனத்திற்குள் நுழைந்திருந்ததால், நம் சரீரம் வீழ்ச்சியடைந்து, கெட்டுப்போனது. நம் முதல் பெற்றோரான, ஆதாம் ஏவாள் நன்மை தீமையின் அறிவு விருட்சத்தின் கனியில் பங்குகொண்டனர். இதன் விளைவாக, ஒரு தீய மூலக்கூறு மனித இனத்திற்குள் வந்தது, இப்போது இந்த மூலக்கூறு நம் பெளதிக சரீரத்தில் உள்ளது. ஒரு தீய, சாத்தானிய மூலக்கூறு மனித சுபாவத்தில் வசிக்கிறது என்பதை அனுபவத்திலிருந்து நாம் அறிகிறோம்.

கண்களின் இச்சை

கண்களின் இச்சை, கண்கள் மூலம் ஆத்துமாவின் உணர்ச்சிப்பூர்வமான ஆசையாகும். நன்மை தீமையின் அறிவு விருட்சத்தின் கனி மனித சரீரத்திற்குள் வந்தபோது, சரீரம் மாம்சமாக ஆனது. சரீரம் ஆத்துமாவைச் சூழ்ந்துள்ளதால், ஆத்துமா விழுந்துபோன சரீரத்தின் ஆதிக்கத்தின்கீழ் விழுந்தது. இதன் விளைவாக, நம் ஆத்துமாவும் கெட்டுப்போனது. எனவே, நம் உளவியல் ஆள்தத்துவமான ஆத்துமா, விழுந்துபோன சரீரத்தின் ஆதிக்கத்தின் நிமித்தம் இச்சைநிறைந்ததாக ஆனது.

ஜீவனத்தின் வீண்மகிமை

ஜீவனத்தின் வீண்மகிமை என்பது…பெளதிக பொருட்களைக் குறித்த வெற்று கர்வம், பெருமை, நம்பிக்கை, நிச்சயம், மற்றும் அதைக் காட்சியாக்குதலாகும். (Life-study of 1 John, pp. 170-174)

தேவனை நேசிப்பது மட்டுமே உலகத்திலிருந்து நம்மை விடுவிக்கக் கூடியதாக இருத்தல்

பல இளைஞர்களால் உலகத்தைக் கைவிட முடிய வில்லை. அவர்கள் ஒரு கூடுகையில் மற்றவர்களால் கிளர்ந்தெழுப்பப்படும்போது, அவர்கள் இனி உலகத்தை நேசிக்கமாட்டார்கள் என்பது போல் தோன்றுகிறது. வேறொரு நேரத்தில் அவர்கள் உலகத்திலிருந்து சிறிதும் பிரிக்கப்பட முடியாது என்பதுபோல் தோன்றுகிறது. உலகத்தை நேசிக்கும் இருதயத்தைத் கைவிட, நமக்குள் அதைவிட சிறந்ததொன்றை நாம் உடைமையாக்க வேண்டும். முன்பு ஒரு கலை கண்காட்சி இருந்தது. அந்தக் கலைப்படைப்புகளில் பெரும்பாலானவை தூரத்திலிருந்து பாராட்டப்பட கூடியவையாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட ஓவியம் மட்டும், அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள, அதை அருகிலிருந்து ஆராய்வது அவசியமாக இருந்தது. அந்த ஓவியத்தில், தன்னைச் சுற்றி தரையில் எல்லா அழகிய பொம்மைகள் இருக்கையில் அதை அறியாமல் நடுவில் அமர்ந்திருக்கும் ஒரு குழந்தை இருந்தது, அந்த ஓவியம் ஒரு கிறிஸ்தவனின் அனுபவத்தை மிகப் பொருத்தமாக விவரிக்கிறது. அந்தக் குழந்தையின் கவனம் ஜன்னல் நிலையின்மீது குவிமையங் கொண்டிருந்தது, அதனை நோக்கி அவன் தன் கண்களை உயர்த்தி, தன் கைகளை நீட்டியிருந்தான். இந்தக் காட்சி தொலைவிலிருந்து பார்க்கையில் குழப்பமாக இருந்தது, ஆனால் கவனமாக உற்றுநோக்கிய போது, ஜன்னல்நிலை மீது ஓர் அழகான புறா இருப்பதைக் காண முடிந்தது. அந்தச் சிறிய புறாவை அடையும்படி, அந்தக் குழந்தை தரையில் உள்ள எல்லாப் பொம்மைகளையும் கைவிட்டது என்பதை அந்தக் காட்சி விளக்கியது. ஒருவன் அதிசிறந்த ஒன்றுக்காக மட்டுமே இரண்டாம் பட்சமான ஒன்றை நிராகரிக்கிறான் என்பதே அந்த ஓவியத்தின் கருத்து. நாம் எதையும் தூக்கியெறிய வேண்டுமென்று தேவன் ஒருபோதும் கோருவதில்லை. அவர் அதைவிட சிறந்ததை நமக்கு முன் வைக்கிறார், அவ்வளவே. அதை அடையும்படி, நாம் மற்ற பல காரியங்களைப் புறத்தூண்டுதலின்றி கைவிட்டுவிடுவோம்.

இரண்டு மாதங்களாக என்னுடன் வாழ்ந்த ஓர் இளம் விசுவாசி, தன்னால் உலகத்தைக் கைவிட முடியவில்லை என்று என்னிடம் கூறினான். அவன் ஒரு முதிய விசுவாசியிடம், “இந்த உலகம் தரக்கூடிய அனைத்தையும் நீங்கள் ருசித்திருப்பதால், நீங்கள் அவற்றைத் துறக்க முடியும். ஆனால் என்னால் அப்படி முடியாது” என்று கூறினான். இந்த இளைஞன் தேவனை விசுவாசிப்பது குறித்து அறிந்திருந்தான், ஆனால் தேவனை நேசிப்பது பற்றி அறியவில்லை. தேவனில் விசுவாசிப்பது பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்க முடிகையில், தேவனை நேசிப்பதுதான் உலகத்திலிருந்து நம்மை விடுவிக்கும். சகோதர, சகோதரிகளே, தேவனின் அன்பு நமக்குள் நுழைய நாம் அனுமதிக்க வேண்டும். தேவனுடைய அன்பு நுழைந்தவுடனே, உலகம் நழுவிச் செல்கிறது.

கர்த்தராகிய இயேசுவை உணர்ச்சிபூர்வமாக நேசிப்பவராக இருத்தல்

“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக” என்று எபேசியர் 6:24 கூறுகிறது. இங்கு யாருக்குக் கிருபை அருளப்படுகிறது? அழியாமையில் கர்த்தரை நேசிக்கிறவர்களுக்கு தேவன் அதைத் தருகிறார். “நீங்கள் கர்த்தரில் விசுவாசிக்கிறீர்களா?” என்று மற்றவர்கள் உங்களிடம் கேட்டால், “நான் கர்த்தரை நேசிக்கிறவன்” என்று நீங்கள் பதிலளித்தால் முழு உலகமும் ஆச்சரியப்படும்.
“அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து” என்று ஒன்று பேதுரு 1:8 கூறுகிறது. நாம் அவரில் விசுவாசிப்பதால், நாம் அவரை நேசிக்கிறோம் என்று இந்த வசனம் கூறுகிறது. விசுவாசித்தல் மூலம் இந்த அன்பிலிருந்து என்ன பிறக்கிறது? அது சொல்லொண்ணாத மற்றும் மகிமையால் நிறைந்த மகிழ்ச்சியாகும்.

கடைசியாக, சகோதர சகோதரிகளே, அந்த முதிய விசுவாசி, புறப்பட்டுச் செல்கிற அந்த இளைஞனிடம் என்ன கூறினார் என்பதை நான் மீண்டும் கூற விரும்புகிறேன்: “நீ கர்த்தராகிய இயேசுவை உணர்ச்சிப்பூர்வமாக நேசிப்பவனாக இருப்பாயாக!” (CWWN, vol. 18, pp. 356-357, 362-363)

References: Life-study of 1 John, msg. 20; CWWN, vol. 18, pp. 355-363; CWWN, vol. 39, “Love Not the World,” chs. 1, 7

இயேசுவே, உம் அழகால் கவர்ந்தீர்
கிறிஸ்துவை அனுபவித்தல்—
அவரை நேசித்தல்

1159
1 இயேசுவே, உம் அழகால் கவர்ந்தீர்,
இதயம் உமக்காய்த் திறந்தேன்;
விடுதலை! மதக் கடன்கள் இல்லை!
உம்மில் நிலைப்பதே என் ஆவல்.
உம் மகிமை நோக்குகையில், உள்ளம்
தெய்வீக ஒளியால் நிரப்பும்;
உம் ஆவி என் ஆவியுடன் கலப்பீர்,
கர்த்தாவே, பூர்த்தியாய் நிரப்பும்.

2 ஜோதியே, தெளிந்த வானம் என்மேல்!
குமாரன், நீர் சிங்காசனத்தில்!
தூயா, நான் உம்மால் ஜொலிக்கும்வரை,
தேவ ஜூவாலை பட்சிக்கட்டுமே!
மகிமையில் உம்மைக் கண்டபோது,
வெட்கத்தில் மூழ்கிற்று என் சுயம்.
உம் நாம மதுரமெல்லாம் சுவைத்து,
நெஞ்சார நேசித்துத் துதிப்பேன்.

3 அரும் நாதா! உடைப்பேன் உமக்காய்
ஆனந்தமாய் நளத பரணி!
பிரியமே! உம் சிரசில் ஊற்றுவேன்,
உச்சிதம் உமக்காய் வைத்துள்ளேன்;
நேசா! என்னை வீணாக்குவேன் உம்மேல்;
உம்மை நேசித்தேன்! ஆ! திருப்தி!
மதுரமே, என்னுள் பொங்கும் அன்பால்,
விலையில்லா தைலம் தருவேன்.

4 கந்தவர்க்க மலைக்கு நீர் வாரும்;
ஏங்குகிறேன் உம் முகம் காண.
உம் மார்பில் என்றென்றும் ஓயும்வரை,
பருகும் என் நெஞ்சின் ஊற்றிலே.
தனித்தன்று, சுத்தரோடு உம்மை
மணவாட்டியாய்ப் போற்றுவேன்;
தீவிரியும்! என் அன்பு காத்திருக்கும்;
இயேசுவே, நீர் திருப்தியாவீர்!

 

Jump to section