மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் பதினொன்று – உண்மை, விசுவாசம், அனுபவம்

எபே. 2:8—கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு.

தற்போதைய கிருபையின் யுகத்தில், எல்லாமும் “கிருபையினாலே” இருக்கிறது (எபே. 2:8). எல்லாமும் கிருபையினால் இருத்தல் என்பதின் அர்த்தம், எல்லாம் தேவனால் செய்யப்படுகிறது என்பதே. “கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்” என்பதால் மனிதன் இரட்சிக்கப்படுவற்கு எதையும் செய்ய வேண்டியதில்லை (ரோ. 4:4). தேவன் கிருபையின்படி மனிதனோடு இடைபடுகிறபடியால், சில உண்மைகள் இருக்கின்றன.

உண்மை

தேவன் மனிதனுக்காக எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டார். எல்லாம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், சில “உண்மைகள்” இருக்கின்றன. அவை இருக்கின்ற “உண்மைகளாக” இருப்பதால், ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருப்பதை மனிதன் நிறைவேற்ற வேண்டியதில்லை. தேவனுடைய வேலைகள் அனைத்தும் முழுமையானவை.

எனினும், தேவனுடைய கிருபை ஒரு நீதியான கிருபை. இதனால்தான், “உண்மைகளுடன்” மனித ஒத்துழைப்பிற்கான தேவை இன்னும் இருக்கிறது. இது எவ்விதமான ஒத்துழைப்பு? இது அவர் செய்துமுடித்திருப்பதுடன் எதையும் கூட்டுவதல்ல, மாறாக தேவன் செய்துமுடித்தது நிஜம் என்பதை மனிதன் ஒப்புக்கொள்ளச் செய்வதாகும். இதுவே விசுவாசம்.

விசுவாசம்

விசுவாசம் என்பது, தேவன் கூறியிருப்பதும் செய்திருப்பதும் உண்மை என்பதை ஒப்புக்கொள்வதாகும். விசுவாசம் என்பது உண்மைகளை ஏற்றுக் கொள்வதாகும், அதாவது, அவற்றை உண்மைகளாக ஒப்புக்கொள்வதாகும்.

விசுவாசம் என்பது ஒரு “பணமாக்குதல்.” வங்கியில் ஒருவன் ஒரு காசோலையைப் பணமாக்குதல் என்னும் அர்த்தத்தில் நான் “பணமாக்குதல்” என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். ஒருவர் உங்களுக்கு ஒரு காசோலையைத் தருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். வங்கியில் பணம் இருக்கிறது என்பது ஓர் உண்மை. பணத்திற்காக நீங்கள் காசோலையைப் பணமாக்குவது, காசோலையில் எழுதப்பட்டிருக்கும் தொகை எதுவானாலும் அந்தத் தொகை வங்கியிலுள்ளது என்னும் உண்மையை ஒப்புக்கொள்வதாகும். “பணமாக்குவதற்கு” விசுவாசம் தேவை. விசுவாசத்தைக் கொண்டு, ஒருவர் பணமாக்கவும், இவ்வாறு பயன்படுத்துவதற்கான பணத்தைப் பெறவும் முடியும். இப்போது, பணத்தைச் செலவுசெய்வது, “அனுபவமாக” இருக்கிறது. வங்கியில் பணம் இருப்பது “உண்மை,” காசோலையைப் பணமாக்குவது “விசுவாசம்,” அந்தப் பணத்தைச் செலவுசெய்வது “அனுபவம்.” தேவனுடைய கிருபையில், அவர் மனிதனுக்காகச் செய்திருப்பவை உண்மைகள். ஆனால் மனிதன் இன்னும் இந்த உண்மைகளை அனுபவமாக்க வேண்டும்.

அனுபவம்

தேவனுடைய கிருபையை அனுபவமாக்குவதென்றால், தேவன் மனிதனுக்காக நிறைவேற்றியிருக்கிற உண்மைகளை விசுவாசத்தால் கோருவதாகும். இந்த உண்மைகள் தேவனால் நிறை வேற்றப்பட்டிருக்கின்றன. மனிதனுக்குத் தேவைப்படுவது விசுவாசமே. உண்மைகள் தேவனுக்குரியவை, அனுபவம் மனிதனுக்குரியது. இவ்வாறு, தேவனுடைய உண்மைகள் மனிதனின் அனுபவமாவதே விசுவாசம். வேதம் நமக்குக் காட்டுவது, “உண்மை, விசுவாசம், அனுபவம்” அவ்வளவே.

உண்மை எதிர் அனுபவம்

நாம் உண்மைக்கும் அனுபவத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் குறித்து மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இந்த இரண்டு காரியங்களும் இரண்டு வெவ்வேறு அம்சங்கள். முதலாவது சங்கதியில், அது தேவன் நமக்காக நிறைவேற்றியிருப்பதாகும்; அது தேவன் நமக்குத் தந்திருக்கும் நிலையாகும். இரண்டாம் சங்கதியில், அது நாம் நடைமுறைப்படுத்துவதாகும்; அது தேவன் நமக்குத் தந்திருப்பதை அனுபவித்துமகிழும் நம் அனுபவமகிழ்ச்சியாகும். தற்போது, விசுவாசிகள் அத்தியந்தத்திற்குச் செல்லும் தன்மையுள்ளவர்களாக இருக்கின்றனர். சிலர் (உண்மையில் பெரும்பான்மையினர்) கர்த்தராகிய இயேசுவில் தங்களுக்கு இருக்கும் ஐசுவரியங்களை அறியவில்லை. கர்த்தராகிய இயேசு நிறைவேற்றியிருக்கிற எல்லாமும் ஏற்கெனவே அவர்களுடையதாக இருக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை. அவர்கள் கிருபையை நாடிப்பெற திட்டமிடுகின்றனர், வழிவகுக்கின்றனர். அவர்கள் தேவனுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் தங்களது புதிய ஜீவனின் நாட்டத்தைத் திருப்திப்படுத்துவதற்கும் தங்கள் சொந்த பலத்தால் எல்லாவித நீதியையும் செய்வதற்கும் முயற்சிக்கின்றனர். மற்றவர்கள் (வெறுமனே சிலர் அல்ல) தாங்கள் தேவனுடைய கிருபையை மிகவும் நன்றாகவே புரிந்துகொள்வதாக எண்ணுகின்றனர். கர்த்தராகிய இயேசு அவர்களை ஒரு நிகரில்லாத நிலைக்கு ஏற்கனவே உயர்த்திவிட்டார் என்று அவர்கள் எண்ணுகின்றனர். அவர்கள் ஏற்கெனவே திருப்தியாக உள்ளனர், அவர்கள் கர்த்தராகிய இயேசுவிடமிருந்து பெற்றிருக்கும் கிருபையை அனுபவம்சார்ந்த விதத்தில் நடைமுறைப்படுத்த நாடுவதில்லை. இவ்விரண்டு விதமான மக்களும் தவறானவர்கள். அனுபவத்திற்கு அக்கறை செலுத்தி, உண்மைகளை மறந்துவிடுபவர்கள் நியாயப்பிரமாணத்தால் கட்டப்பட்டிருக்கின்றனர். உண்மைகளுக்கு அக்கறை செலுத்தி அனுபவத்தை இழிவாகக் கருதுகிறவர்கள், திளைப்பதற்கான ஒரு காரணமாக கிருபையை எடுத்துக் கொள்கின்றனர். ஒரு பக்கத்தில், ஒரு கிறிஸ்தவன் கர்த்தராகிய இயேசுவிலுள்ள தன் உன்னதமான நிலையை வேத வாக்கியங்கள் மூலம் புரிந்துக்கொள்ள வேண்டும். மறு பக்கத்தில், அவனது நடை அவனது அழைப்பின் கிருபையோடு பொருந்துகிறதா, இல்லையா என்பதை அவன் தேவனுடைய ஒளியின் கீழ் ஆராய வேண்டும்.

விசுவாசத்தைப் பயிற்சிசெய்வது தேவைப்படுதல்

தேவன் நம்மை அதி உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறார். கர்த்தராகிய இயேசுவுடனான நம் சேர்க்கை மூலம், கர்த்தருடைய நிறைவேற்றுதல்கள், வெற்றிகள் அனைத்தும் நம்முடையவையாகின்றன. இதுவே உண்மையில் நம் நிலை. கர்த்தராகிய இயேசுவின் நிறைவேற்றுதல்கள், வெற்றிகள் அனைத்தையும் எவ்வாறு நாம் அனுபவமாக்க முடியும் என்பதே இப்போது கேள்வி. உண்மைக்கும் அனுபவத்திற்கும் இடையில், அதாவது, உண்மை அனுபவமாக மாற்றப்பட முடிவதற்கு முன்பு, தேவன் நிறைவேற்றியவை மனிதனுடைய நடைமுறைப் பயிற்சியாக மாற்றப்பட முடிவதற்கு முன்பு, இன்னும் விசுவாசம் என்ற படி உள்ளது.
விசுவாசம் என்ற இந்தப் படி, சுதந்தரத்தைப் “பயன்படுத்துதல்” அல்லது “மேலாண்மைசெய்தல்” என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. கர்த்தர் நமக்கு ஓர் உயிலை விட்டுச் சென்றிருக்கிறார். அவர் மரித்திருக்கிறார், உயில் இப்போது அமலில் உள்ளது. நாம் இனியும் ஓர் அலட்சியமான அல்லது அக்கறையற்ற மனப்பாங்கைக் கொண்டிருக்கக் கூடாது. இதற்குப் பதிலாக நாம் சுதந்தரத்தின் ஆசீர்வாதத்தை, அனுபவித்து மகிழவோ, அனுபவமாக்கவோ கூடுமாறு நாம் பெற்றிருக்கும் சுதந்தரத்தைப் “பயன்படுத்துவதற்கு” நாம் எழும்ப வேண்டும்.

நமக்கு இப்போது தேவைப்படுவது தேவன் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருப்பதை விசுவாசத்தால் பயன்படுத்துவதே அன்றி வேறொன்றுமல்ல; கர்த்தராகிய இயேசுவில் தேவன் நமக்காக ஆயத்தப்படுத்தியிருப்பதை நாம் விசுவாசத்தால் “பணமாக்க” வேண்டும். ஓர் உயிலைச் சுதந்தரிக்கவிருக்கும் ஒருவர், அந்தச் சுதந்தரத்தை அனுபவித்துமகிழ்ந்து அனுபவமாக்க முடிவதற்கு முன்பு அவர் செய்ய வேண்டிய இரண்டு காரியங்கள் உள்ளன. முதலாவது, ஒரு சுதந்தரம் இருக்கிறது என்பதை அவன் விசுவாசித்தாக வேண்டும்…நம்மிடம் இந்த விசுவாசம் இல்லையெனில், நாம் எந்த ஆவிக்குரிய அனுபவங்களையும் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்பது மட்டுமல்லாமல், நாம் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்துகொண்டும் அவரது வேலையைச் சந்தேகித்துக்கொண்டும் இருக்கிறோம். இரண்டாவது, உலகிலுள்ளவர்கள் தங்கள் பெளதிக வலிமையைக் கொண்டு சுதந்தரத்தை மேலாண்மைசெய்கின்றனர். ஆனால் நாம் நம் ஆவிக்குரிய சுதந்தரத்தை மேலாண்மைசெய்ய, விசுவாசமாகிய, நம் ஆவிக்குரிய பலத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த ஆவிக்குரிய சுதந்தரம் ஏற்கெனவே நம்முடையதாக இருப்பதால், நாம் கர்த்தராகிய இயேசுவில் நம் சுதந்தரத்தைப் “பணமாக்குவதற்கும்,” பயன்படுத்துவதற்கும், மேலாண்மை செய்வதற்கும் விசுவாசத்தால் ஒரு படி கூடுதலாக முன்னேற வேண்டும்.

நடைமுறை

உண்மைகள் என்பவை, தேவனுடைய வாக்குத்தத்தங்கள், அவரது மீட்பு, அவரது வேலைகள், அவரது இலவசமான வரங்கள் ஆகியனவாகும். விசுவாசம் என்பது, மனிதன் தேவனில் விசுவாசிக்கிற, அவரது வேலையிலும் மீட்பிலும் நம்பிக்கை வைக்கிற, அவரது வாக்குத்தத்தங்களை உரிமைகோருகிற விதத்தைக் குறிக்கிறது. இது, ஒருவித கிரியை செய்தல் மற்றும் மனப்பாங்கு, இவற்றின் மூலம் தேவனுடைய உண்மைகள் மனிதனுடைய அனுபவமாக மாறுகின்றன.
அனுபவம் என்பது, விசுவாசிகள் தேவனில் விசுவாசிப்பதின் மூலம் பெறுகிற நேர்த்தியான வாழ்க்கையே. இது விசுவாசிகளின் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்படும் கிறிஸ்துவினுடைய ஜீவனின் வெளியாக்கமாகும். அனுபவம் என்பது, கிறிஸ்துவின் நிறைவேற்றங்கள் வெற்றிகள் அனைத்தின் உணர்ந்தறிதலாகும். இது தேவனுடைய உண்மைகளின் நடைமுறை பிரயோகித்தலாகவும், வெளியரங்கமாகுதலாகவும், வாழ்ந்து காட்டுதலாகவும் இருக்கிறது. வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள எல்லா பரிசுத்தவான்களுடைய வரலாறுகளும் இந்த வகையானவையே.

போதகர்களாக இருப்பவர்கள் மட்டுமல்லாமல், எல்லா விசுவாசிகளும்கூட உண்மை, விசுவாசம், அனுபவம் ஆகிய இந்த மூன்றின் பரஸ்பர உறவை அறிய வேண்டும். இல்லையெனில், அவர்கள் தங்கள் வாழ்க்கையிலும், தங்கள் போதனைகளிலும் குழப்பமடைவார்கள். மேலும், அவர்கள் தங்களது வேத வாசிப்பில் பல முரண்பாடுகளையும் வெளிப்படையான கருத்து வேறுபாடுகளையும் காண்பார்கள். (CWWN, vol. 1, “Fact, Faith, and Experience,” pp. 53-54, 56-59)

Reference: CWWN, vol. 1, “Fact, Faith, and Experience,” ch. 4

நான் விசுவாசிக்கிறேன்

கிறிஸ்துவை அனுபவித்தல்—
அவருடன் கலந்துறவாடுதல்

551
1 நான் விசுவாசிக்கிறேன்,
செம்மறிக்கு அல்லேலூயா!
வெளிப்பிரகாரம் கடந்தேன்,
தேவனுக்கு மகிமை!
நான் இயேசுவின் பக்கமே,
பலிபீடத்தால் சுத்தமே,
பாவத்திற்கு மரித்தேன்,

செம்மறிக்கு அல்லேலூயா!
அல்லேலூயா! அல்லேலூயா!
கிழிந்த திரை கடந்தேன்,
மங்கா மகிமை நுழைந்தேன்,
அல்லேலூயா! அல்லேலூயா!
இராஜ சந்நிதியில் வாசம் செய்கிறேன்.

2 இரத்தத்தாலே கழுவினார்,
செம்மறிக்கு அல்லேலூயா!
ஆசாரியனாக்கினார்,
தேவனுக்கு மகிமை!
அதிதூய ஸ்தலத்திலே,
இரவும் பகலும் வாழ்கிறேன்,
ஆவியின் பலத்தினால்,
செம்மறிக்கு அல்லேலூயா!

3 வெளித்திரை கடந்தேன் நான்,
செம்மறிக்கு அல்லேலூயா!
தேவ சுடர் மறைத்ததை,
தேவனுக்கு மகிமை!
தேவ பரிசுத்தத்துள்
இரத்தம் சேர்த்ததே என்னை,
பாவம், சுயம் சாகுதே,
செம்மறிக்கு அல்லேலூயா!

4 உட்திரை கடந்தேன் நான்,
செம்மறிக்கு அல்லேலூயா!
அதிதூய ஸ்தலத்தில் நான்,
தேவனுக்கு மகிமை!
இரத்தத்தின் வல்லமையால்
பரிசுத்தம் அடைகிறேன்,
கர்த்தரே என் உறைவிடம்,
செம்மறிக்கு அல்லேலூயா!

 

Jump to section