மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் ஒன்று – அவரிடம் சொல்

பிலி. 4:6-7—நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். 7அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

நம் கர்த்தர் ஒவ்வொருவருடனும்
அனுதாபம் கொள்ள முடியும்

கர்த்தர் மனிதர்களிடம் பேசிய பல சம்பவங்களை வேதம் பதிவுசெய்கிறது. ஆனால், கர்த்தரிடம் எதையாவது சொல்லும்படி மனிதர்கள் அவரிடம் செல்லும் பல சம்பவங்களை வேதம் பதிவுசெய்யவில்லை. நம் கர்த்தர் மனிதர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரரான கர்த்தர். மனிதர்கள் தாங்கள் கூற விரும்புவதை எளிதாகக் கர்த்தரிடம் கூற முடியும். அவரிடம் எந்த வார்த்தைகளையும் சொல்ல முடியும். மத்தேயு 14:1-12, மாற்கு 6:30-32 ஆகியவற்றிலிருந்து, நமக்கான கர்த்தரின் அனுதாபத்தை நாம் பார்க்க முடியும். பல நேரங்களில் நாம் பாடுகளை எதிர்கொள்கிறோம். பல நேரங்களில் நாம் சந்தோஷப்படுகிறோம். பல நேரங்களில் நம் துக்கத்தை அல்லது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள ஒருவர் நமக்குத் தேவை, ஆனால் நம்மால் அப்படி ஒருவரைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.

அவர் நமக்காகக் கரிசனைப்படுகிறார்

பல நேரங்களில் கர்த்தர் மகா பெரியவர் என்று நாம் நினைக்கிறோம். நம் கர்த்தர் மகா பெரியவர்தான், ஆனாலும், அவர் சிறிய காரியங்களைப் புறக்கணிப்பதில்லை. அவரிடம் நாம் சொல்லுகிற காரியமும் மகா பெரியதாக இருக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர் செவிகொடுக்கமாட்டார் என்றும் நாம் நினைக்கிறோம். நம் கர்த்தர், சிறிய காரியங்களை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை என்பதை நாம் அறிவதே இல்லை. கர்த்தர் இதற்குச் செவிகொடுக்கமாட்டார் என்ற அளவுக்கு மிகவும் சிறியது எதுவுமில்லை. அவர் எல்லாவற்றுக்கும் செவிகொடுக்கச் சித்தமாயிருக்கிறார். நம்மைக் குறித்த எல்லாவற்றுக்கும் செவிகொடுக்க அவர் சித்தமாயிருக்கிறார். அவர் தம் சீஷர்களுக்குச் செவிகொடுக்க சித்தமாயிருந்தார்; அவர் யோவானின் சீஷர்களுக்கும் செவிகொடுக்கச் சித்தமாயிருந்தார். யோவானின் சீஷர்கள் நீண்ட காலமாக தங்களது போதகனைப் பின்பற்றினர். அவர்களுக்கும் யோவானுக்கும் இடையில் இருந்த பாசத்தை எவரும் எளிதாய்க் கற்பனை செய்து பார்க்க முடியும். அவர்களது போதகன் கொல்லப்பட்டபோது, அவர்கள் எப்படி மனமுடையாமல் இருந்திருக்க முடியும்? அவர்கள் ஏரோதைப் பற்றி புகார்செய்ததாக வேதம் கூறவில்லை, அவர்கள் நாள் முழுவதும் அழுதனர் என்றும் அது கூறவில்லை. அவர்கள் யோவானின் சரீரத்தைப் புதைத்துவிட்டு, இயேசுவிடம் அதைக் கூற வந்தனர்.

அவர் எல்லாவற்றுக்கும் செவிகொடுக்கச் சித்தமாயிருக்கிறார்.

நாம் கர்த்தருடன் ஒரு முழுமையான விதத்தில் உரையாடி, நம் இதயத்தை அவரிடம் ஊற்றும்போது, கர்த்தருடனான நம் அந்நியோன்னியம் ஒரு படி அதிக நெருக்கமாகிறது, நாம் அவரை இன்னும் சிறிது அதிகமாக அறிகிறோம். அவருடன் இந்த நேரங்களிலுள்ள நெருக்கமான தொடர்பு, அவருடன் நம் சாதாரண ஐக்கியத்தை விட பல நூறு மடங்கு சிறந்தது. இந்தத் தொடர்புகளால் நாம் ஜீவனில் முன்னேறுகிறோம். நாம் நமது பிரச்சினைகளைக் கர்த்தரிடம் கொண்டுவந்து, அவற்றைக்குறித்து அவரிடம் சொல்ல வேண்டும். அவரால் நமக்கு ஆறுதலளிக்கவும், நமக்கு உதவவும் முடியும். கர்த்தருக்கு முன்பாக ஒருவன் ஒருபோதும் கண்ணீர் சிந்தியதில்லை என்றால், அவன் கர்த்தருடன் தன் மகிழ்ச்சி அல்லது துக்கத்தைப் பகிர்ந்து கொண்டதேயில்லை என்றால், தன் தனிப்பட்ட காரியங்களைக்குறித்து அவன் கர்த்தருடன் உரையாடியதேயில்லை என்றால், அவன் கர்த்தருடன் எந்த நெருங்கிய ஐக்கியமும் கொண்டதில்லை; அவனுக்கு அவருடன் எந்த ஆழமான பரிச்சயமும் இல்லை. உங்களுக்காக ஜெபிக்க மற்றவர்களைக் கேட்கவோ, உங்களுக்கு உதவ மற்றவர்களைக் கேட்கவோ கூடாது என்று நாம் கூறவில்லை. எல்லாவற்றையும் கர்த்தரிடம் கூறுவதின்மூலம் மட்டுமே ஒருவன் கர்த்தரை நெருங்கிச் சேரமுடியும் என்றே நாம் கூறுகிறோம்.
யோவானின் சீஷர்கள் தங்களது துக்கங்களைக் கர்த்தரிடம் கூறியவுடனே, எல்லாப் பிரச்சினையும் மறைந்துபோனது. நாம் அவரிடம் என்ன சொன்னாலும், அவர் கேட்பார். ஒருவரும் எல்லாருடனும் அனுதாபங்கொள்ள முடியாது. நம் கர்த்தர் எல்லாருடனும் அனுதாபங்கொள்ள முடியும். நம் ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் அவர் அனுதாபங்கொள்கிறார். நம் எல்லாருடைய விவகாரங்களுக்கும் அவர் அக்கறை செலுத்துகிறார். அவரது இதயத்தில், வேறு யாருடைய விவகாரங்களும் இல்லை, நம்முடையது மட்டுமே உள்ளது என்பதுபோல தோன்றுகிறது. அவர் நம் துயரங்கள் எல்லாவற்றையும் சுமக்கிறார். நாம் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், அவர் நம்முடன் அனுதாபங்கொண்டு, நமக்காக நம் துக்கத்தைச் சுமப்பார்.

அவரது பிரசன்னம் நம் பலத்தைப் புதுப்பிக்கிறது

கர்த்தர் தம் சீஷர்களுக்குச் செவிகொடுத்த பிறகு, என்ன செய்தார்? அவர் அவர்களிடம், “வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறுங்கள்” என்று கூறினார் (மாற்கு 6:31). அவர்களுக்குச் சற்று ஓய்வு தருவதற்காகவே கர்த்தர் இதைச் செய்தார். நாம் கவலையடைந்து, மனம் அழுந்தியிருக்கும்போது, பலமுறை தனிமையாக ஒரு வனாந்தரமான இடத்திற்கு ஓய்வெடுக்கச் செல்கிறோம். வேறு எந்த வழியும் இல்லாதபோது, நாம் ஓய்வெடுக்க தனியாக ஓர் அவாந்தரமான பகுதிக்குச் செல்கிறோம். ஆனால், இத்தகைய நேரங்கள் பெரும்பாலும், நாம் அங்கு செல்வதற்கு முன் இருந்ததைவிட அதிகக் கலக்கமடையச் செய்கின்றன. வெறுமனே, ஓய்வெடுக்க வனாந்தரத்திற்குச் செல்லும்படி நம் கர்த்தர் அந்தச் சீஷர்களிடம் கூறவில்லை; அவர் அவர்களைத் தம்மோடுகூட போகும்படிச் சொன்னார். கர்த்தருடைய பிரசன்னம் அவர்களுக்கு இனிமையான ஓய்வைத் தந்தது, அவர்களது பலத்தைப் புதுப்பித்தது. (CWWN, vol. 18, “Tell Him,” pp. 327-331)
References: CWWN, vol. 18, “Tell Him”; Lessons on Prayer

என்னே நல் நண்பர் இயேசு
ஜெபம்—கர்த்தரிடம் கூறுதல்
789
1 என்னே நல் நண்பர் இயேசு, நம்
பாவம், துக்கம் சுமக்க!
யாவும் தேவனிடம் சொல்லி
ஜெபித்தல் என்னே பாக்யம்!
சமாதானம் இழந்து, வீண்
வலி நாம் சுமப்பதேன்?
யாவும் தேவனிடம் சொல்லி,
ஜெபிக்காததினால்தான்.

2 துன்பங்கள் சோதனைகளா?
எங்கேனும் தொல்லையுண்டா?
நாம் சோர்ந்திடக் கூடாதென்றும்,
ஜெபத்தில் எடுத்துச் செல்.
நம் துக்கம் சுமக்கும் இம் மெய்
நண்பர் போல் கண்டதுண்டா?
இயேசு நம் குறை அறிவார்,
ஜெபத்தில் எடுத்துச் செல்.

3 பலவீனம், கடும் பாரம்,
மா கவலைப் பளுவா?
இரட்சகர் நம் அடைக்கலம்,
ஜெபத்தில் எடுத்துச்செல்;
நண்பர் கைவிட்டிகழினும்,
ஜெபத்தில் எடுத்துச்செல்;
தம் கரத்தில் ஏந்திக் காப்பார்,
அங்கு ஆறுதல் காண்பாய்.

 

Jump to section