மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் பத்து – சாத்தானுக்கு எதிர்த்துநிற்றல்

1 பேது. 5:8-9—தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 9விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.

ஒன்று பேதுரு 5:8-9 கூறுகிறது, “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்.” சாத்தானை எதிர்த்து நிற்பதற்கான வழி விசுவாசத்தினால்தான் உள்ளது என்பதை தேவனுடைய வார்த்தை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.

கர்த்தருடைய வெளியரங்கமாகுதல் பிசாசின் கிரியைகளை அழிப்பதற்காக இருக்கிறது என்பதை விசுவாசித்தல்

தேவ குமாரன் பூமிக்கு வந்திருக்கிறார்; அவர் வெளியரங்கமாக்கப்பட்டார். அவர் பூமியிலிருந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் அவர் பிசாசின் கிரியையை அழித்தார். பெரும்பாலும் சாத்தானின் வேலை தெளிவாக இல்லை; அவன் இயற்கையான நிகழ்வுகளுக்குப்பின் மறைந்து கொள்கிறான். எனினும், ஒவ்வொரு முறையும் கர்த்தர் அவனைக் கடிந்துகொண்டார். பேதுருவின் பேசுதலை அவர் கடிந்துகொண்டபோதும் (மத். 16:22-23), பேதுருவின் மாமியின் காய்ச்சலை அவர் கடிந்துகொண்டபோதும் (லூக். 4:39), காற்றையும் அலைகளையும் அவர் கடிந்துகொண்டபோதும் அவர் கடிந்துகொண்டது சாத்தானையே என்பது தெளிவு. பிசாசு பல இயற்கையான நிகழ்வுகளுக்குப்பின் மறைந்திருந்தாலும், கர்த்தராகிய இயேசு அவனைக் கடிந்துகொண்டார். கர்த்தர் சென்ற இடமெல்லாம், பிசாசின் வல்லமை நொறுக்கப்பட்டது. இதனால்தான், “நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” (மத். 12:28) என்று அவர் கூறினார். வேறு வார்த்தைகளில், கர்த்தர் சென்ற இடமெல்லாம் சாத்தான் துரத்தப்பட்டான், அதோடு தேவனின் இராஜ்ஜியம் வெளியரங்கமாக்கப்பட்டது. கர்த்தர் இருந்த இடத்தில் சாத்தானால் இருக்க முடிய வில்லை. இதனால்தான் பிசாசின் கிரியைகளை அழிக்க தாம் வெளியரங்கமாக்கப்பட்டதாக அவர் கூறினார். [1 யோ. 3:8]. பூமியில் தம்மை வெளியரங்கமாக்கியதில் கர்த்தர் பிசாசின் கிரியைகளை அழித்தது மட்டுமல்லாமல், தம் நாமத்தில் பிசாசுகளைத் துரத்த அவர் தம் சீஷர்களுக்கு அதிகாரமும் கொடுத்தார் என்றும் நாம் விசுவாசிக்க வேண்டும். “இதோ சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்” (லூக். 10:19) என்று கர்த்தர் கூறினார். தம் பரமேறுதலுக்குப் பின்பு பூமியில் தம் வேலையைச் சபை தொடர்ந்து செய்யுமாறு அவர் தம் நாமத்தைச் சபைக்குத் தந்தார். கர்த்தர் பிசாசுகளைத் துரத்த பூமியில் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தினார். இந்த அதிகாரத்தை அவர் சபைக்கும் கொடுத்தார்.

பிசாசிடம் என்ன இருக்கிறது என்பதையும், நம்மிடம் என்ன இருக்கிறது என்பதையும் நாம் வேறுபடுத்திக்காண வேண்டும். பிசாசிடம் இருப்பது வல்லமை. நம்மிடம் இருப்பது அதிகாரம். சாத்தானிடம் இருப்பதெல்லாம் வல்லமை மட்டுமே. ஆனால், சாத்தானின் வல்லமை முழுவதையும் ஜெயங்கொள்ளக்கூடிய அதிகாரத்தைக் கர்த்தராகிய இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார். வல்லமை அதிகாரத்தை மேற்கொள்ள முடியாது. தேவன் நமக்கு அதிகாரம் தந்திருக்கிறார், சாத்தான் நிச்சயமாகத் தோற்றுப்போவான்.

கர்த்தருடைய மரணம் சாத்தானை
அழித்துவிட்டது என்பதை விசுவாசித்தல்

சிலுவையில் கர்த்தருடைய மரணம் நம் பாவங்களை மட்டுமல்ல, முழுப் பழைய சிருஷ்டிப்பையும் அகற்றுகிறது. நம் பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டுவிட்டான். சாத்தான் மரணத்தின் மூலம் ஆளுகைசெய்தாலும், எவ்வளவாய் அவன் மரணத்தின் மூலம் ஆளுகைசெய்கிறானோ, அவ்வளவாய் அவனுடைய விதி மோசமாகிறது, ஏனெனில், அவனுடைய ஆளுகை மரணத்தோடு நின்றுவிடுகிறது. நாம் ஏற்கெனவே மரித்துவிட்டதால், மரணம் இனி நம்மைத் தன் கொடுக்கைக் கொண்டு கொட்ட முடியாது. அவனுக்கு நம்மீது இனியும் ஆளுகை இல்லை.

கிறிஸ்துவுடனான நம் சிலுவை மரணம் ஒரு நிறைவேற்றப்பட்ட உண்மை; இது தேவனின் செய்கை. கர்த்தருடனான நம் மரணம், வருங்காலத்திற்குரிய ஒன்று என்று வேதம் கூறவில்லை. இது ஒரு நாள் நாம் அடைய எதிர்நோக்குகிற ஏதோவொரு அனுபவமல்ல. மரணத்தை நாடும்படி வேதம் நமக்குக் கூறவில்லை. நாம் ஏற்கெனவே மரித்துவிட்டோம் என்று அது நமக்குக் காண்பிக்கிறது. ஒரு நபர் இன்னும் மரணத்தை நாடிக் கொண்டிருந்தால் அவன் மரிக்கவில்லை. எனினும், நமக்கான கிறிஸ்துவின் மரணம் ஒரு ஈவு என்பதுபோல அதேவிதத்தில் அவருடனான நம் மரணம் தேவனிடமிருந்து வரும் ஒரு ஈவு. ஒரு மனிதன் இன்னும் சிலுவை மரணத்தை நாடினால், அவன் மாம்சீக தளத்தின்மீது நிற்கிறான், மாம்சீக தளத்தின்மீது நிற்கிறவர்கள் மேல் சாத்தானுக்கு முழுக் கட்டுப்பாடு இருக்கிறது. நாம் கர்த்தரின் மரணத்தில் விசுவாசிக்க வேண்டும். நம் சொந்த மரணத்திலும் நாம் விசுவாசிக்க வேண்டும். நமக்காக கர்த்தர் மரித்த மரணத்தில் நாம் விசுவாசிப்பதுபோல, அவரில் நாம் மரித்த மரணத்தையும் நாம் விசுவாசிக்க வேண்டும். இரண்டும் விசுவாசத்தின் செயல்களாகும், அவை ஒன்றுக்கும் மனித நாடுதல்களோடு எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த உண்மைகளை உணர்ந்தறிய நாம் போராடும்வரை, சாத்தானின் தாக்குதலுக்கு நாம் நம்மைத் திறந்து வைக்கிறோம். நிறைவேற்றப்பட்ட உண்மைகளை நாம் பிடித்துக்கொண்டு, இவ்வாறு அறிக்கையிட வேண்டும்: “கர்த்தருக்கு ஸ்தோத்திரம், கர்த்தருக்கு நன்றி; நான் ஏற்கெனவே மரித்துவிட்டேன்.”

கர்த்தருடைய உயிர்த்தெழுதல் சாத்தானை வெட்கப்படுத்திவிட்டது என்பதை விசுவாசித்தல்

கொலோசெயர் 2:12 கூறுகிறது, “ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்…”வசனம் 15 கூறுகிறது: துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, “வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.” “நீங்கள் கிறிஸ்துவுடனேகூட…மரித்ததுண்டானால்” என்று வசனம் 20 கூறுகிறது, “நீங்கள் கிறிஸ்துவுடனேகூட எழுந்ததுண்டானால்…” என்று 3:1 கூறுகிறது. இந்த வசனங்கள் உயிர்த்தெழுதலோடு ஆரம்பித்து, உயிர்த்தெழுதலோடு முடிகின்றன; இடையிலுள்ள வசனங்கள் சிலுவையிலுள்ள வெற்றியைப் பற்றி பேசுகின்றன. நாம் உயிர்த்தெழுதல் என்ற நிலையில் நிற்கிறோம், நாம் சிலுவையில் வெற்றிசிறக்கிறோம்

நம் ஜீவன் ஓர் உயிர்த்தெழுந்த ஜீவனாக இருப்பதால், நம்மால் சாத்தானை எதிர்த்து நிற்க முடியும். இந்த ஜீவனுக்கு சாத்தானுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை. நம் ஜீவன் தேவனின் ஜீவனிலிருந்து வருகிறது; இது மரணத்திலிருந்து வெளியே வருகிற ஒரு ஜீவன். சாத்தானின் வல்லமை மரணம்வரை மட்டுமே செல்கிறது. அது நமக்குச் செய்யமுடிந்ததெல்லாம், மரணம் என்ற இந்தப் பக்கத்திற்கு உட்பட்டிருக்கிறது. ஆனால் நம் ஜீவன் மரணத்திலிருந்து வெளியே வந்துவிட்டது. அவனால் தொட முடியாத ஒரு ஜீவன் நம்மிடம் இருக்கிறது. நாம் உயிர்த்தெழுதலின் தளத்தில் நிற்கிறோம், நாம் சிலுவையினூடாக வெற்றியோடு திரும்பிப் பார்க்கிறோம்.

எதிர்நோக்குதல் என்ற தளத்தில் நாம் சாத்தானோடு இடைபட முடியாது. கர்த்தருடைய தளமாகிய, உயிர்த்தெழுதலின் தளத்தில் மட்டுமே நாம் நிற்க முடியும். இது மிகவும் அடிப்படையான ஒரு கோட்பாடு.

கர்த்தருடைய பரமேறுதல் சாத்தானின் வல்லமைக்கு மிகவும் மேலாக இருக்கிறது என்பதை விசுவாசித்தல்

“கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி…இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும்…, எல்லா நாமத்திற்கும் மேலாய்… அவரை உன்னதங்களில் தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரும்படிச்செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,…சபைக்கு அவரை எல்லாவற்றிக்கும் மேலான தலையாகத் தந்தருளினார்” என்று எபேசியர் 1:19-23 கூறுகிறது. கர்த்தராகிய இயேசு உன்னதங்களில் ஏற்கெனவே அமர்த்தப்பட்டுவிட்டார், அவர் சாத்தானின் வல்லமை அனைத்துக்கும் வெகு மேலாக இருக்கிறார் என்பதே இதன் பொருள்.

“கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடுகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடுகூட உட்காரவும் செய்தார்” என்று எபேசியர் 2:7 கூறுகிறது. இதுவே நம் நிலை, இதுவே ஒரு கிறிஸ்தவனின் நிலை. கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார்; அவர் சாத்தானின் வல்லமை அனைத்துக்கும் மேலாக உன்னதங்களில் அமர்ந்திருக்கிறார். நாம் கிறிஸ்துவோடுகூட எழுப்பப்பட்டு, சாத்தானின் வல்லமை அனைத்துக்கும் மேலாக உன்னதங்களில் அவரோடுகூட அமர்த்தப்பட்டிருக்கிறோம்.

“நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்க திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்… சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும்” என்று எபேசியர் 6:11 மற்றும் 13 கூறுகிறது. நாம் கர்த்தரோடுகூட உன்னதங்களில் அமர்த்தப்பட்டிருக்கிறோம் என்று அதிகாரம் 2 நமக்குக் காண்பிக்கிறது. நாம் உறுதியாக நிற்க வேண்டும் என்று அதிகாரம் 6 நமக்குக் காண்பிக்கிறது. அதிகாரம் 2 நாம் உட்கார வேண்டும் என்று கூறுகிறது, இப்படியிருக்க அதிகாரம் 6 நாம் நிற்க வேண்டும் என்று கூறுகிறது. உட்காருவதின் பொருள் என்ன? உட்காருவதென்றால் இளைப்பாறுவது என்று பொருள். கர்த்தர் ஜெயங்கொண்டுவிட்டார் என்பதும், நாம் இப்போது அவருடைய வெற்றியில் இளைப்பாற முடியும் என்பதுமே இதன் பொருள். இதுவே கர்த்தரின் வெற்றியைச் சார்ந்திருப்பதன் பொருள். நிற்றல் என்பதின் அர்த்தம் என்ன? ஆவிக்குரிய யுத்தம் தாக்குகிற காரியமல்ல, மாறாக தடுக்கிற காரியம் என்பதே நிற்றல் என்பதின் அர்த்தமாகும். நிற்பதின் அர்த்தம் தாக்குவதல்ல; அதன் அர்த்தம் தடுப்பதே. கர்த்தர் முழுவதும் ஜெயித்துவிட்டதால், நாம் மீண்டும் தாக்கத் தேவையில்லை. சிலுவையின் வெற்றி முழுமையானது, கூடுதல் தாக்குதல் தேவையில்லை.

கிறிஸ்தவ யுத்தம் தோல்வியைத் தடுப்பதைப் பற்றிய காரியம்; இது வெற்றிக்காக சண்டையிடுவதைப் பற்றிய காரியமல்ல. நாம் ஏற்கெனவே ஜெயங்கொண்டுவிட்டோம். வெற்றி என்ற நிலையிலிருந்து நாம் சண்டையிடுகிறோம், நம் வெற்றியைப் பராமரிக்க நாம் சண்டையிடுகிறோம். வெற்றிபெறுவதற்காக நாம் சண்டையிடவில்லை. வெற்றியிலிருந்து நாம் சண்டையிடுகிறோம்; வெற்றி என்பது நம் கைகளில் உள்ள ஒன்று. எபேசியரில் பேசப்பட்டுள்ள யுத்தம் ஜெயங்கொள்பவர்களின் யுத்தம். சண்டையிடுவதின் மூலம் நாம் ஜெயங்கொள்பவர்களாவதில்லை. இந்த இரண்டு காரியங்களுக்கிடையிலுள்ள வித்தியாசத்தை நாம் வேறுபடுத்த வேண்டும்.

“என்னை விட்டு அகன்றுபோ!” என்று
எல்லாச் சூழ்நிலைகளின் கீழும்
சாத்தானிடம் கூற கற்றுக்கொள்ளுதல்

நாம் கர்த்தராகிய இயேசுவின் வேலையைக்கொண்டு சாத்தானின் வேலையை எதிர்கொள்கிறோம். கர்த்தருடைய வெளியரங்கம், மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் ஆகியவை மூலம் நாம் சாத்தானை எதிர்த்து நிற்கிறோம். இன்று நாம் கர்த்தரின் நிறைவேற்றப்பட்ட வேலையின்மீது நிற்கிறோம்…இந்தக் காரியத்திற்கு உண்மையில் வெளிப்பாடு தேவை. நாம் கர்த்தருடைய வெளியரங்கத்தைப் பார்க்க வேண்டும். நாம் அவருடைய மரணத்தையும், உயிர்த்தெழுதலையும், பரமேறுதலையும் பார்க்க வேண்டும். நாம் இந்தக் காரியங்கள் யாவற்றையும் அறிய வேண்டும்.“என்னை விட்டு அகன்றுபோ!” என்று எல்லாச் சுற்றுச்சூழலின்கீழும் நாம் சாத்தானிடம் கூற வேண்டும். நம் அனைவரிடமும் இப்பேர்ப்பட்ட ஒரு விசுவாசம் இருக்குமாறு தேவன் நம்மீது கிருபையாயிருப்பாராக. நமக்காகக் கர்த்தர் நிறைவேற்றியிருக்கிற நான்கு காரியங்களிலும் நமக்கு விசுவாசம் இருப்பதாக, சாத்தானை எதிர்த்து நிற்கவும் நம்மீதான அவனது வேலையை நிராகரிக்கவும் பலமான விசுவாசத்தை நாம் பயிற்சி செய்வோமாக. (CWWN, vol. 50, “Messages for Building Up New Believers,” pp. 733-742)
References: CWWN, vol. 50, “Messages for Building Up New Believers,” ch. 43; Life-study of 1 Peter, msg. 33

இயேசுவின் நாமம் ஆதாரம்

ஆவிக்குரிய யுத்தம்—தேவனுடைய சர்வாயுதத்துடன்

887
1 இயேசுவின் நாமம் ஆதாரம்,
அதுவே நம் வெற்றி;
கர்த்தாவே உம்மை நம்புவோம்,
எங்களையே அல்ல.
எம் ஆயுதம் மாம்சமல்ல,
ஆவியின் பட்டயம்,
கர்த்தரில் யுத்தம் செய்திட,
சர்வாயுதம் தரிப்போம்.

2 சத்துரு சதி செய்தாலும்,
நிற்போம் ஒருமையில்!
யுத்தம் கடுமையானாலும்,
கர்த்தரில் எதிர்ப்போம்!
பயத்தினால் நீ பின்னிட்டால்,
அவன் வீழ்த்திடுவான்.
சோதரரை சோர்வாக்காதே,
நீயும் தளராதே.

3 தன் காலம் கொஞ்சம் அறிவான்,
சாத்தான் சீறுகிறான்,
நம்மை பலவீனமாக்க
யுத்தம் முன் சதிசெய்வான்.
சோதனைகள் ஏராளமே,
பாடும் கடுமையே,
பாதாளம் எதிர்க்கிறது
இன்னும் தீவிரமாய்.

4 இந்த நிர்பந்த நேரத்தில்,
நம் நிலைப்பாடென்ன?
சாத்தான் பட்சிக்கையில், நாம் நம்
இன்பம் நாடுவோமோ?
அல்லது மா போராட்டத்தில்,
வீராய் சகிப்போமோ?
ஜீவன், சாவு, எது வெல்லும்?
பாராட்டை பெறுவார் யார்?

5 கர்த்தர் கிறிஸ்துக்கென்று நிற்போம்,
அவர் மேற்கொள்பவர்!
வலி சகிப்போம் அவர்க்காய்
யுத்தம் ஓயும்வரை.
விரைவாய் வெற்றி காண்போம் நாம்,
கர்த்தர் மீண்டும் வருவார்;
இன்றவர்க்காய் பாடுபட்டால்,
அவரோடாள்வோம் நாம்

Jump to section