மேய்த்துப்பேணுதல்

திரட்டு 1

உயர்வான சுவிசேஷம்

பாடம் ஏழு – கிறிஸ்து ஆவியானவரே

1 கொரி. 15:45—கடைசி ஆதாம் ஜீவன்-தரும் ஆவியானார்.

2 கொரி. 3:17—கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுண்டு.

இயேசு கிறிஸ்து தேவ குமாரனாகவும், மனித இனத்தின் இரட்சகராகவும் இருக்கிறார். அவர் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்திற்கு வந்து, பூமியில் ஒரு மெய்யான மனிதனாக வாழ்ந்தார். அவரது வாழ்க்கை, ஒழுக்கநெறியின் அதிஉயர்ந்த தரத்தை எடுத்துக்காட்டி விளக்குகிற ஒரு பூரண மனித வாழ்வாக இருந்தது. முப்பத்து மூன்றரை ஆண்டுகள் பாவமற்ற மனித வாழ்க்கைக்குப் பிறகு, முழு மனித இனத்தின் பாவத்தையும் எடுத்துப் போட, அவர் சிலுவையில் அறையப்பட்டார் (யோ. 1:29). மனித இனத்தை மீட்கும் இந்த அற்புதமான வேலையை அவர் நிறைவேற்றியப் பிறகு, என்ன நிகழ்ந்தது என்பதை நாம் பார்ப்போம்.

உயிர்த்தெழுந்த கிறிஸ்து ஆவியானவராக
நம் ஆவிக்குள் வாழ்தல்

கிறிஸ்து மரணத்திற்குள் மூன்று நாட்கள் சென்றார், ஆனால் அவர் அங்கேயே தங்கிவிடவில்லை என்று வேதம் கூறுகிறது. மூன்றாம் நாளில் அவர் ஆவிக்குரியரீதியிலும், பெளதிகரீதியிலும் உயிர்த்தெழுந்தார் (1 கொரி. 15:3-4). அவரைப் பார்த்தவர்களும் அவரோடு பேசியவர்களும், அவருடன் நடந்தவர்களும் என்று அவரது உயிர்த்தெழுதலுக்குத் திரளான சாட்சியாளர்கள், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக அசைக்கப்படாது நிலைத்திருக்கும் ஒரு வரலாற்று உண்மைக்கு ஒரு பலமான சாட்சியாக உள்ளனர் (வவ. 5-7). சாக்ரடீஸ் மரித்தார்; நெப்போலியன் மரித்தார்; மகா அலெக்ஸாண்டர் மரித்தார்; காரல் மார்க்ஸ் மரித்தார்; மற்றும் முகமது, புத்தர், கன்ஃபூசியஸ் யாவரும் மரித்தனர். ஆனால், இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார். அவரது கல்லறை காலியான கல்லறையாக இருக்கிறது, இன்றைக்கும் அவர் கோடிக்கணக்கான மக்களின் ஆவிக்குள் வாழ்கிறார்.

ஆவியானவரைப் புரிந்துகொள்வதற்கு அதிசிறந்த வழி, எடுத்துக்காட்டுடன் விளக்குவதே. உங்களைச் சுற்றி இருக்கும் காற்றைப் பரிசீலியுங்கள். அது எங்கும் இருக்கிறது, எல்லாருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. நீங்கள் கிழக்கிலோ மேற்கிலோ, ஒரு மூடப்பட்ட அறையிலோ சந்தையிலோ, எங்கிருந்தாலும் சரி, காற்று எப்போதும் உங்களுடன் இருக்கிறது. வேதம் ஆவியானவரைக் காற்றுடன் ஒப்பிடுகிறது. உண்மையில், கிரேக்க மொழியில் ஆவியானவர் என்பதற்கான வார்த்தை நியூமா என்பதாகும், இது “சுவாசம்” அல்லது “காற்று” என்றுகூட மொழிபெயர்க்கப்படலாம். கர்த்தர் உயிர்த் தெழுந்த அன்று மாலையில், அவர் தமது சீஷர்களிடத்தில் வந்து, அவர்களிடம் விசித்திரமான ஒன்றைச் செய்தார்: அவர் அவர்களுக்குள் சுவாசித்து ஊதி, “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” (யோ. 20:22) என்று கூறினார். அவர் சீஷர்களுக்குள் ஊதிய தெய்வீக சுவாசம், ஜீவன்-தரும் ஆவியாக உயிர்த்தெழுதலிலுள்ள சாட்சாத்து அவர்தாமே.

ஆவியானவர் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், நிறைவானதாகவும் ஆக்குதல்

கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது, அவர் சீஷர்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அவர் கலிலேயாவில் இருந்தபோது, அவரால் எருசலேமில் இருக்க முடியவில்லை. அவர் காலத்தாலும், இடத்தாலும் வரம்புக்குட்படுத்தப்பட்டார். அவர் எல்லா நேரங்களிலும் எல்லா மக்களிடத்திலும் இருக்க முடியவில்லை.

சுவாசிப்பதைவிட அதிக எளிமையானது வேறு எதுவுமில்லை. ஒரு நபர் ஆழமான பல இரகசியங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால், அவன் மனிதனாக இருக்கும் வரைக்கும் சுவாசிக்க முடியும். சுவாசித்தல் என்பது பிரபஞ்சளாவிய உயர்ந்த ஆற்றல்; எந்த உயிரினத்தாலும் சுவாசிக்க முடியும். எவரும் தம்மைப் பெற்றுக்கொண்டு, தம்மை அனுபவிக்குமாறு, கிறிஸ்து தம்மை இவ்வளவு கிடைக்கக் கூடியவராக ஆக்கினார்.

மனிதர்கள் ரப்பர் டயர் போன்றவர்கள், ஆவியானவர் காற்றைப் போன்றவர். பலர் தங்கள் வாழ்க்கைகளில் “காற்றுபோன டயர்களை” கொண்டு வாழ்கின்றனர்; அவர்கள் குண்டும்குழியுமான வழியிலே வாழ்க்கை பயணத்தில் தளர்ந்துபோய், சிரமத்திற்குள்ளாகின்றனர். நமக்குத் தேவையானது பரலோக காற்றே—கிறிஸ்துவின் ஜீவன்-தரும் ஆவியே. நம்மிடம் அவர் இருக்கும்போது, நம் பயணம் சுலபமாக இருக்கும், நாம் பரலோக நியூமாவால் நிரப்பப்படுவோம்.

ஆவியானவர் மூலம் அன்பு, ஒளி, சத்தியம், மகிழ்ச்சி, வல்லமை, மற்றும் தேவனின் எல்லா குணாம்சங்களையும் நாம் பெற்றிருக்கிறோம். நம்மில் ஆவியானவர் இல்லாவிட்டால், நம் வாழ்க்கைகள் இருளும், பெலவீனமும், தடுமாற்றமும் நிறைந்ததாக இருக்கும். ஆனால், ஆவியானவர், மூவொரு தேவனை நமக்குப் பிரயோகித்து, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், நிறைவானதாகவும் மாற்றுகிறார்.

தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ அவை யாவற்றையும் அனுபவிக்க கர்த்தரின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுதல்

ஒரு நபர் கர்த்தராகிய இயேசுவில் விசுவாசிக்கும்போது, ஆவியானவர் அந்த நபருக்குள் வந்து, அவனுடன் வாழ்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஆவியுடனேகூட இருக்கிறார் என்று 2 தீமோத்தேயு 4:22 கூறுகிறது. நாம் தேவனைக் கண்டுபிடிப்பதற்குப் பரலோகத்திற்குச் செல்ல தேவையில்லை, அவரைத் தொடுவதற்குப் பூமியில் எந்தப் புனித யாத்திரையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. இப்போது, மிகப் பரிசுத்தமான இடம் நம் ஆவியில் உள்ளது. ஒரு வீட்டில் மின்சார இணைப்பு பொருத்தப்பட்ட பின்பு, ஒரு நபர் செய்ய வேண்டியதெல்லாம், மின்விசையை அழுத்த வேண்டியது மட்டுமே. இந்தப் பிரபஞ்சத்தில் ஆவியானவர் “பொருத்தப்பட்டுள்ளார்”—கிறிஸ்து எல்லா வேலைகளையும் நிறைவேற்றியிருக்கிறார், அவர் ஜீவன்தரும் ஆவியாக இப்போது எல்லா இடங்களிலும் இருக்கிறார். நாம் கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடும்போதெல்லாம், நம் ஆவி “முடுக்கப்படும்,” அப்போது தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அவை யாவற்றையும் நாம் அனுபவிக்க முடியும்.

இன்னும் மற்றொரு எடுத்துக்காட்டின் மூலம் ஆவியானவரின் பரமஇரகசியத்தை நாம் விளக்க முடியும். ஒருநாள் கோடை காலத்தில் ஒரு தர்பூசணியை சந்தையிலிருந்து வாங்கி வந்தேன். அது பெரியதாக இருந்தது, அதை வீட்டிற்குக் கொண்டுவர மிகவும் சிரமப்பட்டேன். அந்தத் தர்பூசணியைச் சாப்பிட்டு, ஜீரணம் செய்வதே என் நோக்கம். இதைச் செய்ய, முதலில் நான் அதைத் துண்டு துண்டாக வெட்ட வேண்டியிருந்தது. பின்பு அதை இன்னும் எளிமையாகப் பெற்றுக்கொள்ள, அந்தத் தர்பூசணி துண்டுகளைச் சாறாகப் பிழிந்தேன். அந்தப் பெரிய தர்பூசணியானது, சாறு மூலமாக எனக்கு மிகவும் அனுபவமகிழத்தக்கதாக ஆனது. ஆதியில் தேவன் பரலோகத்தில் இருந்தார். அவரை அந்த வெட்டப்படாத, பெரிய தர்பூசணிக்கு நாம் ஒப்பிட முடியும். ஒருநாள் அவர் மனிதனானார், சிலுவையில் அறையப்பட்டார். அவரது சிலுவை மரணத்தின்மூலம் அவர் “துண்டுகளாக வெட்டப்பட்டார்.” ஆனால், அந்த வழிமுறை அத்துடன் நின்றுவிடவில்லை; அவரது மரணத்துக்குப் பிறகு அவர் உயிர்த்தெழுந்து, ஆவியானவரின் உருவுக்கு மாறினார். இது அந்தத் தர்பூசணித் துண்டுகளைச் சாறாகப் பிழிவதைப் போன்றது. ஆவியானவர் தர்பூசணி சாறு போல இருக்கிறார். இந்த வழிமுறை மூலமாக தேவன் நமக்கு அணுகத்தக்கவராக மாறினார். இன்று நாம் ஆராதிக்கிற தேவன் “வெட்டப்படாத” தேவன் அல்ல. அவர் “வழிமுறையினூடாய்ச் சென்ற” தேவன். வேறு வார்த்தைகளில் சொன்னால், ஜீவன்-தரும் ஆவியாகும்படி, அவர் ஒரு வழிமுறையினூடாய்ச் சென்றிருக்கிறார். நாம் இப்போது அவரை வந்தடைவதற்கு வியர்வை சிந்தி, போராட அவசியமில்லை; அவர் நமக்கு மிக எளிதாக அனுபவித்து மகிழக்கூடியவராகவும், நாம் அணுகக்கூடியவராகவும் மாறியிருக்கிறார்.

ஆவியானவரை இலவசமாகப் பருக இயலுதல்

யோவான் சுவிசேஷத்தில், அந்த நாளின் மாபெரும் மதப் பண்டிகையின் முடிவில், கிறிஸ்து எழுந்துநின்று, ஒருவன் தாகமாயிருந்தால், அவன் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன் என்று கூறினார் (7:37). பின்பு கிறிஸ்து, “வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்” என்றார் (வ. 38)…இங்கே ஆவியானவர் “ஜீவத் தண்ணீருள்ள நதிகளுக்கு” ஒப்பிடப்படுகிறார். கிறிஸ்து இந்த வார்த்தைகளைப் பேசிய நேரத்தில், இந்த ஜீவத்தண்ணீர் இருக்கவில்லை, ஏனென்றால் அவர் தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்மூலம் பதனிடப்பட்டிருக்கவில்லை. ஆனால், அவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அந்தப் பதனிடப்படுதல் முழுமையடைந்தது, இன்று ஆவியானவர் ஜீவத்தண்ணீராக இங்கே இருக்கிறார். இப்போது, நாம் ஆவியானவரை இலவசமாகப் பருக முடியும். இந்த ஜீவத்தண்ணீர் நம் உள்ளான தாகத்தை முழுவதுமாகத் தணிக்கிறது. (Christ Is Spirit and Life, pp. 1-9)

References: Christ Is Spirit and Life; CWWN, vol. 27, “The Normal Christian Faith,” ch. 4; CWWL, 1983, vol. 1, “The Five Great Mysteries in the Bible,” chs. 3, 4

கர்த்தாவே, ஆவியானீர், உம்
கிறிஸ்துவை அனுபவித்தல்—ஆவியானவராக – 493*

1 கர்த்தாவே, ஆவியானீர், உம்
ஜீவன் தந்து, உயிர்ப்பிக்க,
உம் ஐசுவரியங்களால் பெலன்,
தருகின்றீர், மாமகிமையே!

2 கர்த்தாவே, ஆவியானீர், உம்
பெலத்தால் விடுவிக்கின்றீர்;
விடுதலை தரும் ஜீவ
விதி சீராக்கி நடத்துதே.

3 கர்த்தாவே, ஆவியானீர், நீர்
மறுசாயலாக்குகின்றீர்,
ஒத்த சாயலாக்குகின்றீர்
உம் ஒளியால் பிரகாசிப்பிக்கின்றீர்.

4 கர்த்தாவே, ஆவியானீர், நீர்
என் ஆவியில் வசிக்கின்றீர்;
என் ஆவியுடன் கலக்கின்றீர்,
ஒரே ஆவியாய் ஆகின்றோம்.

5 என் ஆவியால் உம்மைத் தொட
உம் ஆவியில் நான் நடக்க,
உம் நிஜத்தினால் ஜீவிக்க, என்
ஆவியை இயக்கப் போதியும்.