மேய்த்துப்பேணுதல்

திரட்டு 1

உயர்வான சுவிசேஷம்

பாடம் பதின்மூன்று – இயேசு பாவிகளின் நண்பன்

மத். 11:19—மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப் பிரியனும் மதுபானப் பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்றார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.

சுவிசேஷங்களில் கர்த்தராகிய இயேசு பாவிகளின் நண்பனாக வழங்கப்படுகிறார், ஏனென்றால் வரலாற்றின்படி அவர் அவர்களின் இரட்சகராவதற்கு முன்பு, முதலில் அவர்களது நண்பனாக மனிதர்கள் மத்தியில் நடமாடுகிறவராகக் காணப்பட்டார். ஆனால், அவர் நம் இரட்சகராக ஆகுமாறு, அவர் இன்னும் முதலில் நம் நண்பனாகவே இருக்கிறார் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? அவரை இரட்சகராகப் பெற நாம் சம்மதிக்கிற—அல்லது உண்மையில் பெற முடிகிற—கட்டத்தை எட்டுவதற்குமுன், அவர் நம்மிடம் ஒரு நண்பனாக வருகிறார், இதன்மூலம் நமக்குத் தனிப்பட்ட சந்திப்பு தடுக்கப்படாமல், நாம் அவரை இரட்சகராகப் பெற வாசல் திறந்து வைக்கப்படுகிறது. இது ஒரு விலையேறப்பெற்ற கண்டுபிடிப்பு.

நான் இரட்சகரைப் பாவிகளின் நண்பனாகப் பார்த்தது முதல், வழக்கத்திற்குமாறான மற்றும் பிரச்சனைக்குரிய பலர் கர்த்தரிடம் நடத்தப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். ஓர் இடத்தில் ஒரு வாலிபப் பெண் வந்து, தான் இரட்சிக்கப்பட விரும்பவில்லை என்று கூறி என்னைத் தாக்கியதை நான் நினைவுகூருகிறேன். அவள், தான் இளையவள் என்றும், எனவே தான் சந்தோஷமாக காலம் கழிக்கவே உத்தேசிப்பதாகவும், தன் வழிகளை விட்டுவிட்டு சாந்தமாகவும் தெளிவாகவும் மாற விரும்பவில்லை என்றும், அப்படி மாறினால், வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது என்றும் கூறினாள். தன் பாவங்களைக் கைவிடும் எந்த நோக்கமும் இல்லை என்றும், இரட்சிக்கப்பட சற்றும் விருப்பம் இல்லை என்றும் அவள் கூறினாள்! அவள் ஒரு கிறிஸ்தவ மிஷன் பள்ளியில் வளர்க்கப்பட்டதால், அவள் சுவிசேஷத்தைக் குறித்து மிக அதிகமாய் அறிந்துகொள்ள நேரிட்டது, அதற்குப் பிரதிச்செயலாக அவள் சுவிசேஷத்தை எதிர்த்தாள். அவள் சிறிது நேரம் கிட்டதட்ட கடுமையாக கூச்சலிட்ட பிறகு, “நாம் ஜெபிக்கலாமா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவள், “நான் என்ன ஜெபிக்க வேண்டும்?” என்று வெறுப்புடன் கேட்டாள். “உன்னுடைய ஜெபத்திற்கு நான் பொறுப்பேற்க முடியாது, ஆனால், நான் முதலில் ஜெபிப்பேன், பிறகு நீ என்னிடம் சொன்னதையெல்லாம் கர்த்தரிடம் சொல்லலாம்” என்று நான் கூறினேன். அவள் ஆச்சரியத்துடன் பின்வாங்கி, “ஆ! அதை நான் செய்ய முடியாது” என்றாள். நானோ, “இல்லை, நீ அதைச் செய்ய முடியும்” என்று பதிலளித்தேன். “அவர் பாவிகளின் நண்பன் என்று உனக்குத் தெரியாதா?” என்று நான் கேட்டேன். இது அவளைத் தொட்டது. அவள் ஜெபித்தாள்—சிறிதும் பாரம்பரியமற்ற ஜெபத்தைச் செய்தாள்—ஆயினும், அந்நேரம் முதல் கர்த்தர் அவளது இருதயத்தில் வேலைசெய்தார், ஓரிரு நாட்களில் அவள் இரட்சிக்கப்பட்டாள்.

கர்த்தரைச் சந்திக்க மக்களை நடத்துதல்

பல வேளைகளில், வெறுமனே அறிவு மூலம் இரட்சிக்கப்பட்டிருப்பவர்கள் பெரிய “தலைகளாக” வளர்க்கின்றனர். அவர்கள் தங்களுக்குத் தேவன் அதிகமாய்த் தேவை என்று உணராமலேயே முன்னேறுவதுபோல் காணப்படுகின்றனர். அவர்களுக்கு எல்லாம் தெரியும், அவர்கள் பிரசங்கிப்பவர் வழங்கும் உண்மைகளை விமர்சிக்கவும்கூட தாங்கள் தகுதியானவர்கள் என்பதுபோல உணர்கின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் திக்குத் தெரியாத நிலைக்கு வந்து, ஏதோவொன்றைக் குறித்து கர்த்தரில் நம்ப வேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலைக்கு வரும்போது, அவர்களால் அப்படிச் செய்ய முடியாது. அவர்கள் அவருடன் ஒரு ஜீவிக்கும் தொடர்பில் இல்லை. எனினும், மிகச் சிறிதே அறிந்திருந்தும், தங்களைவிட்டு வெளியே வந்து ஜீவனுள்ள தேவனைத் தொட்டிருக்கிற, மிகக் கடுமையான சோதனையினூடாகவும் விசுவாசத்தில் முன்னேறி வளர்கிற, மற்றவர்களும் இருக்கின்றனர். இதனால்தான் அவரைச் சந்திக்க மக்களை நடத்துவதே, நம் முதல் இலக்கு.

ஜீவிக்கும் கர்த்தரே நம் இரட்சகராக ஆகிறார். இயேசு இனியும் சிலுவையிலறையப்பட்டவர் அல்ல, மாறாக ஆளுபவர், ஆகையால் இன்று இரட்சிப்பிற்காக, கர்த்தராக அவரில் விசுவாசிக்கும்படி சிலுவையின் அடிவாரத்துக்கு அல்ல, சிங்காசனத்தண்டையே நாம் செல்கிறோம். ஒருவேளை, மீட்புக்கும் இரட்சிப்பிற்கும் இடையேயுள்ள வேற்றுமையை நாம் அதிகத் தெளிவாகப் பார்க்க வேண்டும். மீட்பானது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிலுவையின்மேல் கர்த்தராகிய இயேசுவால் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இன்று நம் இரட்சிப்பு, காலத்தில் ஒரே முறையாகச் செய்துமுடிக்கப்பட்டுவிட்ட அந்த மீட்பின்மேல் சார்ந்திருக்கிறது.

இரட்சிப்பு தனிப்பட்ட மற்றும்
அகம்சார்ந்த அனுபவமாக இருத்தல்

தனிப்பட்ட, அகம்சார்ந்த அனுபவமாகவுள்ள இரட்சிப்பு, கர்த்தரின் மரணத்தைவிட, அவரது உயிர்த்தெழுதல்மீது சார்ந்திருக்கிறது என்று சொல்லப்படலாம். தேவனுக்குமுன் அனுபவம்சாரா பாவநிவிர்த்திக்கு, கிறிஸ்துவின் மரணம் அவசியமாக இருந்தது. ஆனால் இரட்சிப்பிற்கு, புதிய ஏற்பாடு அவரது உயிர்த்தெழுதலை நாம் விசுவாசிப்பதையே வலியுறுத்துகிறது, ஏனென்றால், அவரது மரணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கு உயிர்த்தெழுதலே நிரூபணம். நபர் ரீதியாக உயிர்த்தெழுந்து மகிமைக்குள் பரமேறிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நாம் விசுவாசிக்கிறோம், இப்போது நாம் பாவிகளை, இவருடனான நேரடி தொடர்புக்குள் கொண்டுவர நாடுகிறோம்.

இரட்சிப்பு என்பது புரிந்துகொள்ளுதல் அல்லது சித்தம் என்பதைப் பற்றிய காரியம்கூட அல்ல. நாம் பார்த்ததைப்போல, இது தேவனைச் சந்திப்பதைப் பற்றிய—மனிதர்கள் இரட்சகரான கிறிஸ்துவுடன் நேரடி தொடர்புக்குள் வருவதைப் பற்றிய—ஒரு காரியமாகும். அப்படியென்றால், இந்தத் தொடர்பைச் சாத்தியமாக்க, மனிதனுக்குத் தேவையான குறைந்தபட்ச கோரிக்கை என்ன?, என்று என்னிடம் கேட்பீர்கள்.

என்னுடைய பதிலாக, நான் உங்களை விதைப்பவனின் உவமைக்குத் திருப்ப விரும்புகிறேன். தேவன் கோருகிற அந்த ஒரு காரியம் இங்கு வெளிப்படையாக நமக்குச் சொல்லப்பட்டுள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாய் இருக்கிறார்கள்” (லூக். 8:15). தேவன் மனிதனிடம் கோருவது, “உண்மையும் நன்மையுமான இருதயமே”—அது உண்மையுள்ளது என்பதால், அது நன்மையானது. ஒரு மனிதன் இரட்சிக்கப்பட விரும்புகிறானா விரும்பவில்லையா என்பது காரியமல்ல, அவன் புரிந்துகொள்கிறானா புரிந்துகொள்ளவில்லையா என்பதும் காரியமல்ல; இதைக் குறித்து தேவனிடம் உண்மையாயிருக்க அவன் ஆயத்தமாயிருக்கும் பட்சத்தில், அவனைச் சந்திக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார். ஒரு பாவியின் இரட்சிப்புக்கான அடிப்படை கோரிக்கை, விசுவாசமோ மனந்திரும்புதலோ அல்ல, மாறாக தேவன்பட்சமான உண்மையான இருதயமே ஆகும். அவன் அந்த மனப்பான்மையில் வருவதைத் தவிர, வேறெதையும் தேவன் அவனிடம் கோருவதில்லை. பெரும் வஞ்சகத்தின் மத்தியில் கிடக்கும் அந்த நேர்மையின் பகுதிக்குள்தான் நல்ல விதை விழுந்து கனி தருகிறது. கர்த்தருடன் சிலுவையில் அறையப்பட்ட, முற்றிலும் உண்மையற்ற அந்த இரண்டு திருடர்களில், ஒருவனுக்குள் சிறிதளவு நேர்மையான வாஞ்சை இருந்தது. தேவாலயத்தில் ஜெபித்த அந்த வரி வசூலிப்பவன், கோணலான மனிதனாக இருந்தான், ஆனால், அவனில்கூட, தன் பாவத்தன்மையை அங்கீகரித்து தேவனிடம் இரக்கத்திற்காகக் கதறும் ஒரு நேர்மைத்தன்மை இருந்தது.

முன்னதாக எடுத்துரைத்த பல சம்பவங்கள் சுட்டிக்காட்டிருப்பதுபோல, ஒரு நேர்மையான இருதயத்துடன் முழங்காற்படியிட்டு, தான் இருக்கும் நிலையைக் கர்த்தரிடம் வெளிப்படையாகச் சொல்லி ஜெபிக்கும்படி, நாம் ஒவ்வொரு பாவியையும் உற்சாகப்படுத்த வேண்டும். கிறிஸ்தவர்கள் என்ற முறையில், நாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க வேண்டும் என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது (யோவான் 14:14; 15:16; 16:23, 24), இது, வார்த்தைகளாலான ஒரு சூத்திரம் அல்ல, மாறாக அவரில் விசுவாசிக்கும் ஒரு கிரியை என்றே இதை நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால், பாவிகளைப் பொறுத்தவரை, இது வேறுபடுகிறது. ஏனென்றால், இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கப்படாமலேயே தேவன் கேட்கும் ஜெபங்கள் உள்ளன. அப்போஸ்தலர் 10:4இல் தேவதூதன் கொர்நேலியுவிடம்: “உன் ஜெபங்களும், உன் தருமங்களும், தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது” என்று கூறுகிறான். இருதயத்திலிருந்து ஓர் உண்மையான கதறுதல் இருந்தால், தேவன் அதைக் கேட்கிறார். ஒரு பாவியின் இருதயம் தேவனைத் தொட முடியும்.

உதவிசெய்கிறவர் அருகில் இருத்தல்

பேதுருவால் மேற்கோள் காட்டப்பட்ட யோவேலின் வார்த்தைகள், “கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்” என்று கூறுகிறது (அப். 2:21). இது எப்படி சாத்தியம்? எப்படியெனில், (அதே தீர்க்கதரிசனத்திலிருந்து பேதுருவால் மேற்கோள் காட்டப்படுகிறபடி): “மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” என்னும் இன்னொரு வாக்குத்தத்தத்தைத் தேவன் நிறைவேற்றியிருக்கிறார் (அப். 2:17, 21). முழு மனுகுலத்தின்மேல் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டிருப்பதால், ஒரு கதறலே போதுமானது.

நான் ஒரு மனிதனிடம் பிரசங்கிக்கும்போது, பரிசுத்த ஆவி அவன் மேல் இருக்கிறார் என்று நான் எப்போதும் விசுவாசிக்கிறேன். ஆவியானவர் அவிசுவாசிகளின் இருதயங்களுக்குள் இருக்கிறார் என்று நான் கூறவில்லை, ஆனால் அவர் அவர்களுக்கு வெளியே இருக்கிறார். அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவர் காத்துக்கொண்டிருக்கிறார், கிறிஸ்துவை அவர்களின் இருதயங்களுக்குள் கொண்டுவர காத்துக்கொண்டிருக்கிறார். சுவிசேஷத்தைக் கேட்கிறவரின் இருதயத்துக்குள் நுழைய பரிசுத்த ஆவி காத்துக் கொண்டிருக்கிறார். அவர் வெளிச்சத்தைப் போலிருக்கிறார். ஜன்னல்கதவுகளைச் சிறிதே திறந்தாலும், வெளிச்சமானது உள்ளே பாய்ந்து, உட்புறத்தைப் பிரகாசிப்பிக்கும். இருதயத்திலிருந்து தேவனிடம் ஒரு கதறல் இருக்கக்கடவது, அந்த நொடிப்பொழுதில் ஆவியானவர் உள்ளே நுழைந்து, உணர்த்துவித்தல், மனந்திரும்புதல், விசுவாசித்தல் என்னும் தம் மறுசாயலாக்கும் வேலையை—புதிய பிறப்பு என்னும் அற்புதத்தை—ஆரம்பிப்பார்.

ஆ, நம் தேவன் செய்யக் கூடியது அற்புதமானது! அவர் இரக்கத்தோடு செயல்படத் தயாராக உள்ள ஒரு ஜீவிக்கிற தேவன். மனிதர்கள் தாங்கள் இருப்பதை விடச் சற்று சிறப்பாக இருக்க முடிந்தாலும், அது உதவாது, அவர்கள் மிக மோசமாக இருந்தாலும், அது தடுக்காது. அவர் பார்ப்பதெல்லாம், “உண்மையும் நன்மையுமான இருதயத்தைத்தான்.” மேலும், மனிதரின் இருதயங்களைத் தேவன் பக்கமாய் நகர்த்த, பரிசுத்த ஆவி வல்லமையாக இருக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (CWWN, vol. 40, “What Shall This Man Do?” pp. 30, 36-41, 45)

References: CWWN, vol. 40, “What Shall This Man Do?” ch. 3; CWWL, 1994-1997, vol. 5, “A Word of Love to the Co-workers, Elders, Lovers, and Seekers of the Lord,” ch. 2

IF YOU ARE TIRED OF THE LOAD OF YOUR SIN

Gospel—Persuasion – 1038

  1. If you are tired of the load of your sin,
    Let Jesus come into your heart;
    If you desire a new life to begin,
    Let Jesus come into your heart.
  2. Just now, your doubtings give o’er;
    Just now, reject Him no more;
    Just now, throw open the door;
    Let Jesus come into your heart.
  3. If ’tis for purity now that you sigh,
    Let Jesus come into your heart;
    Fountains for cleansing are flowing near by,
    Let Jesus come into your heart.
  4. If there’s a tempest your voice cannot still,
    Let Jesus come into your heart;
    If there’s a void this world never can fill,
    Let Jesus come into your heart.