மேய்த்துப்பேணுதல்

திரட்டு 1

உயர்வான சுவிசேஷம்

பாடம் ஆறு – கிறிஸ்து தேவனே

எபி.1:8—குமாரனை நோக்கி: “தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய இராஜ்ஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.”

வேதத்தையும் தேவனையும் புரிந்துகொள்வதற்கான திறவுகோல், இயேசு கிறிஸ்து என்ற நபரே…பல வரலாற்று ஆசிரியர்கள் அவரை மாபெரும் தலைவராகக் கருதியிருக்கின்றனர், பல சமூக சீர்திருத்தவாதிகள் அவரை மனுக்குலத்தின் ஒரு போதகராகக் கருதியிருக்கின்றனர். மகா அலெக்ஸாண்டர், ஜூலியஸ் சீசர் மற்றும் சார்லிமாக்னே என்பவர்களுக்குச் சமமாக நெப்போலியன் தன்னை வரிசைப்படுத்தி உயர்த்திக்கொண்டான், ஆனாலும், அவர்கள் எல்லாரைப் பார்க்கிலும் இயேசு உயர்ந்தவர், அவர் வேறு வகையைச் சார்ந்தவர் என்பதை அவன் ஒப்புக்கொண்டான். ஆரம்பக்கால மார்க்ஸிஸ்டுகள், அவர் தேவன் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்தனர், ஏங்கல்ஸ் என்பவன் இயேசு வாழ்ந்ததைக்கூட மறுத்தான். ஆனால், பின்பு ஐரோப்பிய வரலாறு மற்றும் கலாச்சாரத்திலிருந்து இயேசுவை அழிப்பதற்கு எடுத்த முயற்சிகள் எல்லாம் பலனற்றது, முட்டாள்தனமானது என்றும், “இயேசு மிகப் புனிதமான மனிதப் பண்புகளின் ஓர் உதாரணம்” என்றும் மார்க்ஸிஸ்டுகள் ஒப்புக்கொண்டனர்.

கிறிஸ்துவின் சொந்த பிரகடனங்கள்

தேவனின் நாமம் “நான் இருக்கிறேன்” என்பதாகும் (3:14) என்று யாத்திராகமம் புத்தகம் நமக்குக் கூறுகிறது. “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்பே, நான் இருக்கிறேன்” என்று இயேசு கூறியபோது, யூதர்கள் அவர்மேல் கல்லெறியும்படி கற்களை எடுத்தனர், ஏனெனில் அவர் தன்னை தேவன் எனச் சொல்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்தனர் (யோ. 8:58-59). மாபெரும் நானே இருக்கிறேனாக, இயேசு, நித்தியமான, என்றென்றும்-இருக்கிற தேவன்.

கிறிஸ்துவின் அற்புதங்கள்
அவர் தேவன் என்று நிரூபித்தல்

கிறிஸ்துவின் தெய்வத்தன்மைக்கு இன்னொரு சான்று, அவர் பூமியில் செய்த அற்புதங்கள். அவரது காலத்தில், கற்றுத் தேர்ந்த யூத மத போதகர்களில் ஒருவனாகிய நிக்கொதேமு என்பவன், கிறிஸ்துவுடனே தேவன் இருந்திருக்காவிட்டால் அவர் செய்த அற்புதங்களைப்போல வேறொருவனாலும் செய்ய முடியாது என்று அறிக்கை செய்தான் (3:2). அவரது மூன்றரை ஆண்டு கால ஊழியத்தில், அவர் குஷ்டரோகிகளைச் சுகமாக்கினார் (லூக். 5:12-13), முடவர் (மத். 11:5), ஊமையர் (மாற்கு 7:37), மற்றும் குருடர் (மத். 9:27-30) ஆகியோரை குணப்படுத்தினார், மரித்தோரையும் எழுப்பினார் (யோவான் 11:43-44). அவர் பிசாசுகளைத் துரத்தினார் (மத். 8:28-32), புயலை அடக்கினார் (வவ. 23-27). அவர் ஐந்து அப்பம், இரண்டு மீன்களைக் கொண்டு ஐயாயிரம்பேரை போஷித்தார் (14:15-21). அவர் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினார் (யோவான் 2:1-11), கடல்மீது நடந்தார் (மத். 14:25). அவருக்கு இயற்கை மேல் வல்லமையும், பிசாசுகள்மீது அதிகாரமும் இருந்தது. அவர் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கொண்டுவர, இந்த வல்லமையையும் அதிகாரத்தையும் பயிற்சிசெய்தார், இந்த வல்லமையையும் அதிகாரத்தையும் தம் சீஷர்களுக்குக்கூட கொடுத்தார். பழைய ஏற்பாட்டிலுள்ள சில தீர்க்கதரிசிகளால் அற்புதங்களைச் செய்ய முடிந்தது, ஆனால், இயேசு செய்த அற்புதங்களைப்போல ஒருவரும் செய்ய முடியவில்லை. இயேசுவினால் மரித்தோரை உயிரோடு எழுப்ப முடிந்தது, ஏனென்றால் அவர் தேவனாக இருக்கிறார், அவரிடம் ஜீவ வல்லமை இருக்கிறது. அவர், தாமே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாக இருப்பதாகப் பறைசாற்றினார் (யோ. 11:25). அவர் தாம் இயற்கைமீதும் சாத்தான்மீதும் கர்த்தராக இருப்பதை நிரூபித்தார். இந்த அற்புதங்கள் அவரது மகிமையை வெளியரங்கமாக்குகின்றன (யோ. 2:11), அவர் தேவனுடைய குமாரன் என்பதை நிரூபிக்கின்றன என்று யோவான் சுவிசேஷம் கூறுகிறது (20:30-31).

கிறிஸ்துவின் வார்த்தைகள்
அவர் தேவன் என்று சாட்சிபகிர்தல்

கிறிஸ்து அதிகாரத்துடனும், ஜீவனுடனும் பேசினார் (மத். 7:28-29; யோ. 6:63). பல தலைசிறந்த உலகத் தலைவர்கள் ஞான வார்த்தைகளைத் தங்களுக்குப் பின்வரும் தலைமுறைக்கு விட்டுச் சென்றனர், ஆனால், கிறிஸ்து தமது வார்த்தைகள் மூலம் பலரின் வாழ்வைப் பாதித்த அளவுக்கு வரலாற்றில் வேறு எவரும் இதுவரை பாதித்ததில்லை.

தான் உலகத்தின் ஒளி என்று காந்தியால் கூற முடியவில்லை, அரிஸ்டாட்டில்கூட தானே வழி, நிஜம், ஜீவன் என்று கூற முடியவில்லை. உலகத்தின் தலைசிறந்த தத்துவவாதிகள், அதிகபட்சம், தாங்கள் மற்றவர்களுக்கு வழி காட்டினதாக மட்டுமே கூற முடியும், தாங்கள்தான் வழி என்று அவர்களால் ஒருபோதும் கூற முடியாது. ஆனால், கிறிஸ்து தாமே வழி, நிஜம், ஜீவன் என்று கூறினார். ஒருமுறை ஒரு பிரெஞ்சு தத்துவவாதி, சுவிசேஷங்களின் பதிவேடு போலியாக இருந்தால், அந்தப் பதிவேடுகளைப் போலியாக உருவாக்கினவர் சாட்சாத்து கிறிஸ்துவாக இருக்கத் தகுதியானவர் என்று கூறினார்.

கிறிஸ்துவின் மரணம்
அவர் தேவனென்று நிரூபித்தல்

கிறிஸ்து தம் மரணம் நிகழ்வதற்கு முன்பே தம் சீஷர்களிடம் அதை முன்னறிவித்தார்… (மத். 16:21) …அவரது மரணம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் மூலம் முன்னுரைக்கப்பட்ட மேசியாவைக் குறித்த தீர்க்கதரிசனங்களின் துல்லியமான நிறைவேற்றமாகும். பழைய ஏற்பாட்டில் சங்கீதம் 22:15-18 கிறிஸ்துவின் மரணக் காட்சியை விவரிக்கிறது: “என் பெலன் ஓட்டைப்போலக் காய்ந்தது, என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத் தூளிலே போடுகிறீர், நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; என் கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். என் வஸ்திரங்களைப் பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப் போடுகிறார்கள்.” இது, இன்ன விதத்தில் மேசியா மரிக்கவிருந்தார் என்பதைப் பற்றிய ஒரு தெளிவான விவரணமாகும். நாம் சுவிசேஷங்களின் பதிவேட்டை வாசித்தால், துல்லியமாக இவ்விதத்தில்தான் கிறிஸ்து மரித்தார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். கிறிஸ்து சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கரங்களும், பாதங்களும் உண்மையில் துளைக்கப்பட்டன. இரத்தமும் தண்ணீரும் வெளியேறியதன் காரணமாக ஏற்பட்ட நீர்ப்போக்கு நிச்சயமாக அவரது நாவு அவரது தாடையுடன் ஒட்டிக்கொள்ளும்படியும், அவரது எலும்புகள் தெளிவாகத் தெரியும்படியும் செய்திருக்கும். மத்தேயு 27:35 கூறுகிறது: போர்வீரர்கள் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தபோது, “அவருடைய வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, சீட்டுப்போட்டார்கள்,” அது பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசன வார்த்தைகளின் ஒரு நேரடி நிறைவேற்றமாகும்.

கிறிஸ்து மரித்த நேரமும், விதமும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பழைய ஏற்பாட்டிலுள்ள மாதிரிகளில் முன்குறித்துக் காட்டப்பட்டிருக்கின்றன (யாத். 12:3, 5-6)…கிறிஸ்து மரித்தபோது, அவர், “எல்லாம் முடிந்தது” என்று கூறினார் (யோ. 19:30)…கிறிஸ்துவின் மரணம் கிறிஸ்துவின் முடிவல்ல; மாறாக அது அவரது வேலைக்கு ஒரு முழுமையாக்குதலாக இருந்தது…கிறிஸ்துவின் மரணம் இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவங்களை அரங்கேற்றின, இது அவரது மரணத்தின் இயற்கைக்கு அப்பாற்பட்ட சுபாவத்தைப் பிரதிபலிக்கிறது. (மத். 27:45, 51-53)…கிறிஸ்து எல்லாப் பாவிகளுக்குமான பதிலீடாக மரித்தார் என்று வேதம் கூறுகிறது (1 பேது. 3:18)…கிறிஸ்துவினுடைய மீட்கும் மரணத்தின் நித்திய வீரியம், கிறிஸ்துவே தேவன் என்பதற்கு ஒரு சான்றாகும்…(எபி. 9:12, 14).

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
அவர் தேவன் என்று நிரூபித்தல்

கிறிஸ்து…கல்லறையில் இருந்தது எழுபத்திரண்டு மணி நேரத்திற்கும் குறைவே. மூன்றாம் நாளில் கிறிஸ்து கல்லறையைவிட்டு எழும்பி வந்தார் (மத். 28:1-6). இது எந்த வரலாற்று ஆசிரியர்களும் கவிழ்த்துப்போட முடியாத ஒரு வரலாற்று உண்மை. அவர் ஒரு சரீரத்தோடு உயிர்த்தெழுந்து, தம் சீஷர்களுக்கு நாற்பது நாளளவும் அநேக முறை காட்சியளித்தார் (1 கொரி. 15:4-7; அப். 1:3). தற்கால விமர்சகர்கள் பலர், உயிர்த்தெழுதலை, ஆரம்ப கால சீஷர்கள் புனைந்துரைத்த ஒரு கற்பனை அல்லது கதை என்று புறக்கணித்துவிட்டனர். ஆனால், கிறிஸ்து உயிர்த்தெழுந்தபிறகு பலர் அவரைப் பார்த்தனர் என்ற உண்மை, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுடன் நடந்த அவர்களது சந்திப்பு அவர்கள் வாழ்க்கைகளில் ஆழமான மாற்றங்களைக் கொண்டுவந்தது என்ற உண்மை, உயிர்த்தெழுதல் ஒரு புனைந்துரைத்தல் அல்ல என்பதற்கு ஒரு பலமான நிரூபணமாகும். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு முன்பு சீஷர்கள் பயத்துடனும், நம்பிக்கையிழந்தும் இருந்தனர்; பேதுரு மூன்றுமுறை கர்த்தரை மறுதலிக்கவும்கூட செய்தான் (லூக். 22:54-62). உயிர்த்தெழுதலுக்குப் பிறகோ அதே நபர்கள் தைரியமானவர்களாக, வலுவானவர்களாக மாறினார்கள். பெந்தெகொஸ்தே நாளில் மூவாயிரத்திற்கும் மேற் பட்ட மக்களிடம் பேசுவதற்கு முதலாவதாக எழுந்து நின்றது பேதுருவே (அப். 2:14). எந்த ஒரு புனைந்துரைத்தலும் இப்படிப்பட்ட வாழ்க்கையையே மாற்றிவிடும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியாது; ஒரு வகையான மதரீதியான பிரம்மையில் சீஷர்கள் இருந்திருக்கவும் முடியாது, ஏனென்றால் எல்லாரும் தெளிவாகப் பேசினர், பொறுப்புடன் நடந்துகொண்டனர். ஆதி சபை, தங்களையே வஞ்சித்துக்கொண்ட பித்துப்பிடித்தவர்கள் நிறைந்த சமுகமாக இருக்கவில்லை, மாறாக, அது ஒரு நேர்த்தியான, நேர்மையான, தெளிந்த-மனமுள்ள விசுவாசிகளாலான ஒரு குழுவாக இருந்தது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், மனுக்குலத்தின் வரலாற்றில் மாபெரும் வரலாற்று உண்மையாகும்.

இயேசுவை தேவன் என்று விசுவாசித்தல்

ஒரு நபர் [கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை] நோக்கிக் கூப்பிட்டு அவரில் விசுவாசிக்கிறபோது (ரோ. 10:9), இப்படிப்பட்டவனுக்குள் கிறிஸ்து ஜீவன்தரும் ஆவியாக நுழைந்து, அவனது வாழ்வை மாற்றுகிறார். இன்றைக்கு நீங்கள் அவரில் விசுவாசிப்பதன் மூலம் அவரை அனுபவமாக்க முடியும். நீங்கள் உங்கள் இருதயத்தை அவருக்குத் திறந்தால், தம் இராஜ்ஜியத்தை உங்களுக்குள் அமைக்க அவர் உங்களுக்குள் வருவார். நீங்கள் இருளின் இராஜ்ஜியத்திலிருந்து ஒளியின் இராஜ்ஜியத்திற்குள் கொண்டு வரப்படுவீர்கள் (கொலோ. 1:13). கிறிஸ்து உங்களுக்குள் புதிய ஜீவனாக இருப்பார் (கொலோ. 3:4) நீங்கள் கிறிஸ்துவில் ஒரு புது நபராக இருப்பீர்கள் (2 கொரி. 5:17). (Christ Is God, pp. 1-2, 8, 10-13, 16-22, 25-26)

References: Christ Is God; CWWN, vol. 27, “The Normal Christian Faith,” chs. 4, 5; CWWL, 1983, vol. 1, “The Five Great Mysteries in the Bible,” ch. 3

 

மகிமைக் கிறிஸ்து என் இரட்சகர்

கிறிஸ்துவை அனுபவித்தல்—ஜீவனாக – 501*

 

1    மகிமைக் கிறிஸ்து என் இரட்சகர்,
மெய் தெய்வீகப் பிரகாசமே;
வரம்பில்லா நித்திய தேவன்,
வரம்புள்ள மாந்தன் ஆனார்.

கிறிஸ்துவே மாதேவனின் வெளிப்பாடு,
பேர்ஐஸ்வர்ய சம்பன்னர்!
மானிடத்தோடிணை தேவன்
என்னுள் எல்லாமாய் உள்ளார்.

2    தேவனின் பூரணம் வாழும்;
தேவ மாட்சி வெளியாக்கினீர்;
மாம்சத்தில் மீட்பைத் தந்தீரே;
ஆவியாய் என்னோடொன்றானீர்.

3    பிதாவின் எல்லாம் உமதே;
ஆவியாய் நீர் எல்லாம் எனக்கே;
ஆவி உம்மை நிஜமாக்க,
அனுபவிக்கின்றோம் உம்மை.

4    உம் வார்த்தையால் ஜீவாவி
உம்மை என்னுள் கொணர்கின்றார்.
உம் ஆவி தொட்டார், சொல் பெற்றேன்,
உம் ஜீவன் என்னுள் பெற்றேன்.

5    ஆவியில் உம் மாட்சி கண்டு,
கண்ணாடியாய்ப் பிரதிபலிப்பேன்,
உம்போல் மறுசாயலாவேன்,
உம்மை வெளிப்படுத்துவேன்.

6    உம் வெற்றி, பரிசுத்தம்
எம் பங்காக வழி வேறில்லை;
இப்படி ஆவியில் வாழ்வோம்;
மகிமை ஜீவன் தொடுவோம்.

7    எல்லாப் பகுதியும் ஆவி,
பரவி நிரப்புகின்றார்,
பழையன கழித்தென்னைச்
சுத்தர்களோடு கட்டுவார்.