மேய்த்துப்பேணுதல்

திரட்டு 1

உயர்வான சுவிசேஷம்

பாடம் இரண்டு – கிறிஸ்துவே மனித வாழ்வின் அர்த்தம்

கொலோ. 3:4—நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.

யோ. 5:24—என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பியவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

தேவனுக்கு நாம் தேவைப்படுதலும்,
நமக்குக் கிறிஸ்து தேவைப்படுதலும்

தேவனுக்கு மனிதன் தேவை, மனிதனுக்குக் கிறிஸ்து தேவை. மனிதன் இல்லாமல் தேவனால் தம் குறிக்கோளை நிறைவேற்ற முடியாது. மனிதன் இல்லாமல், தேவன் எதுவும் செய்ய முடியாது. மற்றொரு பக்கத்தில், “கிறிஸ்து இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது” என்று நாமும் கூற வேண்டும். நாம் இல்லாமல், தேவனால் ஒன்றும் செய்ய முடியாது, கிறிஸ்து இல்லாமல், நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தேவனுக்கு நாம் தேவை, நமக்குக் கிறிஸ்து தேவை. நாம் இங்கு தேவனுக்காக இருக்கிறோம், கிறிஸ்து இங்கு நமக்காக இருக்கிறார்.

நாம் தேவனுக்காக இல்லாமலும், கிறிஸ்து நமக்காக இல்லாமலும் இருந்தால், நாம் துயரமாகவும், பரிதாபகரமாகவும் இருப்போம். வருந்தும்விதமாக, இதுவே இன்றைய உலகத்தின் நிஜமான சூழ்நிலை. உலகத்தில் உள்ள மக்கள் தேவனுக்காக இல்லை, அதோடு, தங்களுக்காக அவர்களிடம் கிறிஸ்துவும் இல்லை. அவர்கள் தாங்களாகவே, தங்களையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நாம் தேவனுக்காக இருக்கிறோம், கிறிஸ்துவும் நமக்காக இருக்கிறார் என்பதில் கிறிஸ்தவர்களான நாம் வித்தியாசமானவர்களாக இருக்கிறோம்.

கிறிஸ்துவை நம் ஜீவனாக
எடுத்துக்கொள்ளுதல்

மனுஷீகமாகப் பேசினால், நாம் பல காரியங்களைச் செய்வதற்குத் திறமையற்றவர்களாக இருக்கக்கூடும், ஆனாலும், நாம் எல்லாரும் சுவாசிக்கவும், பருகவும், புசிக்கவும் முடியும். சிறு குழந்தைகளுக்குக் கூட இந்தக் காரியங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்பது தெரியும். ஒருவரும் அவர்களுக்குப் போதிக்கத் தேவையில்லை. அது போலவே, ஆவிக்குரிய மண்டலத்தில் நாம் திறனற்றவர்களாக இருக்கிறோம், ஆனாலும், நம்மால் கிறிஸ்துவைச் சுவாசிக்கவும் (யோ. 20:22), கிறிஸ்துவைப் பருகவும் (4:14; 7:37), கிறிஸ்துவை நம் உணவாக எடுத்துக்கொள்ளவும் முடியும் (6:35, 51, 57). கிறிஸ்து காற்றாக, சுவாசமாக இருக்கிறார்; கிறிஸ்து தண்ணீராக, பான-மாக இருக்கிறார்; கிறிஸ்து அப்பமாக, உணவாக இருக்கிறார். ஆகையால் நாம் எல்லாரும் கிறிஸ்துவை உள்ளே எடுத்துக்கொள்ள முடியும். நாமா-கவே அவரை வெளிக்காட்ட வேண்டும், அல்லது நாமாகவே அவருக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கம் நம்மைக் குறித்து தேவனுக்கு இல்லை. கிறிஸ்துவை நம் ஜீவனாக எடுத்துக்கொள்வதன்மூலம் நாம் அவரை வெளிக்காட்டவும், அவருக்காக காரியங்களைச் செய்யவும் வேண்டும் என்பதே தேவனின் நோக்கம் (கொலோ. 3:4; யோ. 6:57; 14:19).

இரண்டு பெரிய தவறுகள் உள்ளன—ஒன்று உலக மக்களால் செய்யப்படுகிறது, மற்றொன்று கிறிஸ்தவர்களால் செய்யப்படுகிறது. தேவனுக்காக ஒன்றையும் செய்யாததே உலக மக்கள் செய்யும் பெரிய தவறு. மறுபக்கத்தில், கிறிஸ்தவர்கள் தாங்களாகவே தேவனுக்காக ஏதேனும் செய்ய முயல்கின்றனர். இதுவும்கூட ஒரு பெரிய தவறு. நாமாகவே அல்ல, மாறாக, கிறிஸ்துவை நம் ஜீவனாக எடுத்துக்கொள்வதன்மூலம் தேவனுக்காக ஏதோவொன்றைச் செய்வதே நமக்கான சரியான வழி. கர்த்தராகிய இயேசு, “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது” (யோ. 15:5) என்று கூறினார். ஆயினும், அப்போஸ்தலனாகிய பவுல் “என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பலனுண்டு” என்று கூறினான் (பிலி. 4:13). கிறிஸ்து இல்லாமல், நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், கிறிஸ்துவுடன், கிறிஸ்துவில் நாம் எல்லாவற்றையும் செய்ய முடியும். யோவான் 14:20இல் கர்த்தர் சீஷர்களிடம், “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” என்று கூறினார். ஆகவே, கிறிஸ்து இல்லாமல் நாம் இல்லை. நம்மிடம் கிறிஸ்து இருக்கிறார், நாம் கிறிஸ்துவில் இருக்கிறோம்.

இன்றைய மனித சமுதாயத்தில், மாயையும் அவலநிலையுமே தவிர வேறொன்றுமில்லை, காரணம், மக்கள் தவறான வழியில் இருக்கின்றனர். அவர்களுக்கும் தேவனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனினும், கிறிஸ்தவர்கள் தாங்களாகவே தேவனுக்காக ஏதோவொன்றைச் செய்ய முயற்சிக்கின்றனர். இப்போது, இந்த யுகத்தின் முடிவில், கர்த்தர் முக்கியமாக இளைய தலைமுறையின் மூலம் ஏதோவொன்றை மீட்டுத்திருப்பப் போகிறார். எனவே,…நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை உங்கள் ஜீவனாக எடுத்துக்கொள்வதன்மூலம் எவ்வாறு தேவனுக்காக இருப்பது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் உங்களிடம் கேட்டால், நீங்கள் இங்கே படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் அல்லது வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கூறக்கூடாது. மாறாக, “நான் இங்கே… தேவனுக்காக இருக்கிறேன்” என்று நீங்கள் கூற வேண்டும். வாலிபர்கள் இங்கே என்ன செய்துகொண்டிருக்கின்றனர்? அவர்கள் இங்கே தேவனுக்காக இருக்கின்றனர்! எந்த விதத்தில்? கிறிஸ்துவைத் தங்கள் ஜீவனாக எடுத்துக்கொள்வதன் மூலமாகவே! அவர்கள் கிறிஸ்துவைச் சுவாசிக்கின்றனர், கிறிஸ்துவைப் பருகுகின்றனர், கிறிஸ்துவைப் புசிக்கின்றனர் என்பதே இதன் அர்த்தம்.

நாம் இல்லாமல், தேவனால் ஒன்றும் செய்ய முடியாது, கிறிஸ்து இல்லாமல், நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. கிறிஸ்துவை நம் ஜீவனாக எடுத்துக்கொள்ள வேண்டிய நாம், தேவனுக்குப் பாத்திரங்களாக இருக்கிறோம். கிறிஸ்துவை நம் ஜீவனாக எடுத்துக்கொள்வதற்கு நாம் ஏற்றவர்கள் என்பது என்னே அற்புதம்! மிருகங்கள் கிறிஸ்துவை ஜீவ-னாக எடுத்துக்கொள்வதற்காக சிருஷ்டிக்கப்படவில்லை, ஆனால், நாம் அதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டோம். நாம் எல்லோரும் கிறிஸ்துவை எடுத்துக்கொள்வதற்குத் தகுதி பெற்றிருக்கிறோம். (CWWL, 1971, vol. 1, “The Life for the Preaching of the High Gospel,” pp. 421-423)

கிறிஸ்து நம் ஜீவனாக இருப்பதற்கான தேவை

எந்த ஒரு காரியத்தைச் செய்வதற்கும், நமக்கு அதற்கு ஏற்ற ஜீவன் தேவை. ஒரு நாய்க்குக் குரைக்கிற ஜீவனான நாயின் ஜீவன் இருப்பதால் அது குரைக்கிறது. ஒரு பூனைக்கு எலியைப் பிடிக்கிற ஆற்றல் இருக்கிறது, காரணம் அந்தப் பூனையின் ஜீவனில் அந்த ஆற்றல் இருக்கிறது, ஆனால் நமக்கு அந்த ஆற்றல் இல்லை. அது போலவே, நாம் தேவனை வெளிக்காட்டவும் தேவனின் அதிகாரத்தைப் பயிற்சி செய்யவும் விரும்பினால், இதைச் செய்வதற்கான ஜீவன் நமக்குத் தேவை. மனித ஜீவன் தேவனை வெளிக்காட்டவும் ஏற்றதல்ல, தேவனின் அதிகாரத்தைப் பயிற்சிசெய்யவும் ஏற்றதல்ல. தேவனை வெளிக்காட்டுவதற்கும், தேவனைப் பிரதிநிதிப்படுத்துவதற்கும் ஆற்றலுள்ள வேறொரு ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கே மனித ஜீவன் ஏற்றது. நாய் ஜீவன், பூனை ஜீவன் போன்ற மிருக ஜீவன்களெல்லாம், அல்லது பறவை ஜீவனும்கூட வேறொரு ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்றதல்ல. தேவன் அவற்றை அவ்விதமாகச் சிருஷ்டிக்கவில்லை. ஆனால், நாம் இன்னொரு ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் விதமாக தேவன் நம்மைச் சிருஷ்டித்திருக்கிறார். இந்த ஜீவன் சாட்சாத்து தேவனுடைய நித்திய ஜீவனாகும், அது கிறிஸ்துவே.

நமக்குள் சாட்சாத்து தேவனை நம் ஜீவனாகவே பெற்றுக்கொள்ள, ஒரு பெற்றுக்கொள்ளும் உறுப்பான மனித ஆவியுடன் நம்மை தேவன் சிருஷ்டித்தார். மனித ஜீவன் தேவனை வெளிக்காட்டும் திறனற்றது, தேவனின் அதிகாரத்தைப் பயிற்சிசெய்வதற்கும் அது ஏற்றதல்ல. ஆனால், மனித ஜீவன் ஒரு காரியத்திற்கு, அதாவது, திறனுள்ள ஜீவனை—நித்திய ஜீவனை—பெற்றுக்கொள்வதற்கு ஏற்றது (1 யோ. 1:2). “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்” (5:12).

கிறிஸ்துவுக்கு நம்மைத் திறந்து கொடுத்தலும், அவரை நம் ஜீவனாகப் பெற்றுக்கொள்ளுதலும்

கிறிஸ்து இல்லாமல் எல்லாம் மாயையே. மனிதன் பிரபஞ்சத்தின் அர்த்தமாக இருக்கிறான், கிறிஸ்து மனித வாழ்வின் அர்த்தமாக இருக்கிறார். மனிதன் பிரபஞ்சத்தின் அர்த்தமாக இருக்கிறான் என்றபோதும், கிறிஸ்து இல்லாமல் மனிதனிடம் உட்பொருளோ நிஜமோ இல்லை. கிறிஸ்து இல்லாமல், மனிதன் ஒரு வெறுமையான பாத்திரம் மட்டுமே. ஒரு வெறுமையான பாத்திரமாய் இருக்கும் மனிதனுக்கு உட்பொருளான கிறிஸ்து தேவை. இதனால்தான், நாம் நம்மைக் கிறிஸ்துவுக்குத் திறந்துகொடுத்து, அவரை நம் ஜீவனாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்களை எந்நேரமும் திறந்துகொடுத்து, அவரது நாமத்தை நோக்கிக் கூப்பிட வேண்டும். மதத்திற்குரிய அல்லது, ஆவிக்குரிய எதையும் உங்கள் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். அப்போது நீங்கள், அவர் உடனடியான, தற்போதைய, இந்நாள்வரையுள்ள, கணந்தோறுமான கிறிஸ்து என்பதைப் பார்ப்பீர்கள். அவர் இக்கணப் பொழுதிலுள்ள கிறிஸ்து. உங்களை மக்கள் நிராகரித்து, உங்களைத் துன்பப்படுத்துகிற அந்தக் கணத்தில், அவர் கிறிஸ்துவாக இருக்கிறார். உங்கள் மனதில் பல உபதேசங்களை வைத்துக்கொள்ளாதீர்கள். உபதேசங்கள் வேலை செய்வதில்லை. கிறிஸ்து மட்டுமே வேலை செய்கிறார். இந்தக் கிறிஸ்து, ஜீவிக்கிற கிறிஸ்து. அவர் உபதேசரீதியான கிறிஸ்துவோ போதனைகளிலுள்ள கிறிஸ்துவோ அல்ல, மாறாக, அவர் ஜீவன்-தரும் ஆவியாக இவ்வளவு தற்போதைய, நிஜமான, நடைமுறைக்குரிய கிறிஸ்துவாக இருக்கிறார் (1 கொரி. 15:45). எளிமையாக அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

அவர் எந்நேரமும் நம்முடன் இருக்கிற ஜீவிக்கும் ஆவியானவர். அவர் தற்போதைக்குரியவர், மேலோங்குகிறவர், கிடைக்கக்கூடியவர், உடனடியானவர். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதும் காரியமல்ல, நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பதும் காரியமல்ல, நீங்கள் ஒருவரோடு இடைபட்டாலும் சரி அல்லது நீங்கள் மற்றவரால் கையாளப்பட்டாலும் சரி, உங்களையும் உங்கள் காரண காரியங்களையும் குறித்து மறந்துவிடுங்கள்; எளிமையாக அவருக்குத் திறந்து, “ஆ, கர்த்தராகிய இயேசுவே” என்று கூப்பிடுங்கள். அவரை அனுபவித்துமகிழுங்கள். அவரே உங்கள் ஜீவன், உங்கள் உள்ளடக்கம். அவரே உங்கள் மனித வாழ்வின் பொருள். (CWWL, 1971, vol. 1, “The Life for the Preaching of the High Gospel,” pp. 433-436)

Reference: CWWL, 1971, vol. 1, “The Life for the Preaching of the High Gospel,” chs. 3, 4

கர்த்தர் நீரென் ஜீவன்
சபை—அவள் கட்டப்படுதல்

841*
1.கர்த்தர் நீரென் ஜீவன்,
என்னில் வாழ்கின்றீர்;
தேவ பூரணம்
என்னுள் தருகின்றீர்,
உம் தூய சுபாவத்தால்
தூய்மையாகின்றேன்,
உம் உயிர்த்தெழுதல்,
வெற்றி நல்குதே.

2.என்னுள் ஒளி வீசும்,
பாயும் உம் ஜீவன்,
ஆவியில் உம்மோடு
ஐக்கியம் தந்து,
உம் கோரிக்கைகளும்,
உம் நிரப்பீடும்,
உம் சுத்திகரிப்பும்
என்னுள் கொணரும்.

3. அபிஷேக ஆவி
உள் பரவுவார்,
என் ஆவி ஆத்மாவை
நீர் நிரப்புவீர்;
உம் ஜீவனால் என்னை
முதிரப்பண்ணி,
மறுசாயலாக்கி
உமக்கொப்பாக்கும்.

4. வளமாகப் பொங்கிப்,
பாயும் உம் ஜீவன்,
புத்துணர்வு ஊட்டி
ஆற்றலளிக்கும்.
சாவை வெல்லும் ஜீவன்!
சோர்வும் பலமே!
துக்கம் பாட்டானது,
கட்டவிழ்ந்தன.

5. கர்த்தாவே, என்னை நான்,
உமக்களிப்பேன்,
என்னில் உம் வாஞ்சை
முற்றும் நிறைவேற.
என்னைச் சீரமைக்க
இனிப் போராடேன்;
என்னில் நீர் செய்வதைத்
தடை செய்திடேன்.

6. வீண் முயற்சிகளினின்று
ஓய்வேன் நான்,
உம் ஜீவன் மறு
சாயலாக்கும் என்னை;
கட்டும் சுத்தரோடு
உம் வெளிப்பாடாய்,
உம்மைக் காணும்வரை,
உம் மகிமைக்காய்.