மேய்த்துப்பேணுதல்
திரட்டு 6
சபை வாழ்க்கை
பாடம் ஒன்று – ஒரு மாபெரும் பரம இரகசியம்— கிறிஸ்துவும் சபையும்
எபே. 5:32—இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப் பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
ஒரு மாபெரும் பரம இரகசியம்—
கிறிஸ்துவும் சபையும்
கொலோசெயர் 2:2 தேவனுடைய பரம இரகசியமாகிய கிறிஸ்துவைப் பற்றியும், எபேசியர் 3:5இல் கிறிஸ்துவின் பரம இரகசியமாகிய சபையைப் பற்றியும் பவுல் பேசுகிறான். “இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப் பற்றியும் சபையைப் பற்றியும் சொல்லுகிறேன்” என்று எபேசியர் 5:32இல் பவுல் கூறுகிறான். கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாக இருப்பதால், மாதிரியாகக் காட்டப்படுகிறபடி, கிறிஸ்துவும் சபையும் ஒரே ஆவியாக இருக்கின்றனர் என்ற உண்மையே (1 கொரி. 6:17) மாபெரும் பரம இரகசியம். கிறிஸ்துவிலிருந்து வெளிவருகிற கிறிஸ்துவின் இணைபாதியாகிய சபைக்குக் கிறிஸ்துவைப் போன்று அதே ஜீவனும் சுபாவமும் இருக்கிறது, அது கிறிஸ்துவுடன் ஒன்றாயிருக்கிறது என்பது நிச்சயமாக ஒரு மாபெரும் பரம இரகசியம். (The Conclusion of the New Testament, p. 2276)
தேவனுடைய பரம இரகசியம்—கிறிஸ்து
புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்படும் தேவனுடைய பொருளாட்சியில் பிரதானமாக இரண்டு பரம இரகசியங்கள் உள்ளன. கொலோசெயர் புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்ட முதல் பரம இரகசியம், தேவனுடைய பரம இரகசியமாகிய கிறிஸ்து. கொலோசெயர் 2:2இல் “தேவனுடைய பரம இரக- சியமாகிய கிறிஸ்துவின் முழு அறிவை” (கிரே.) பற்றிப் பவுல் பேசுகிறான். கிறிஸ்து தேவனுடைய பரம இரகசியம். தம்மில் தேவன் ஒரு பரம இரகசியம். அவர் நிஜமானவர், ஜீவிக்கிறவர், சர்வ வல்லமையுள்ளவர்; எனினும், அவர் காணப்பட முடியாதவர். தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டிராததால், அவர் ஓர் பரம இரகசியம். இந்தப் பரம்புதிரான தேவன் கிறிஸ்துவில் ஊனுருகொண்டுள்ளார். எனவே, கிறிஸ்துவே தேவனுடைய பரம இரகசியம். கிறிஸ்து தேவன் மட்டுமல்ல, அவர் ஊனுருவெடுத்த தேவன், விளக்கப்பட்ட தேவன், விவரிக்கப்பட்ட தேவன், வெளிக்காட்டப்பட்ட தேவன். ஆகையால், கிறிஸ்து காணக் கூடியவராக்கப்பட்ட தேவன். “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று கர்த்தராகிய இயேசு கூறினார் (யோ. 14:9). தேவனுடைய பொருளாட்சியில் முதல் பரம இரகசியம், தேவனின் பரம இரகசியமாக, வெளிக்காட்டப்பட்ட தேவனாகிய, கிறிஸ்துவே.
கிறிஸ்துவின் பரம இரகசியம்—சபை
எபேசியர் புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டு, அதில், விசேஷமாக அதிகாரம் 3இல் விவரிக்கப்படும் இரண்டாம் பரம இரகசியம் கிறிஸ்துவின் பரம இரகசியமாகும். கிறிஸ்து ஒரு பரம இரகசியம் எபேசியர் 3:5இல் கிறிஸ்துவின் பரம இரகசியம் என்ற பதத்தைப் பவுல் பயன்படுத்துகிறான். மேலும், “புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” என்று கொலோசெயர் 1:27 கூறுகிறது. விசுவாசிகளாக நாம் கிறிஸ்துவை நம்மில் குடியிருக்கப் பெற்றிருக்கிறோம். ஆனால் நாம் பெற்றிருக்கிற இந்தக் கிறிஸ்து ஒரு பரம இரகசியம். கிறிஸ்து நம்மில் வாழ்கின்றபோதிலும், அவர் நம்மில் இருக்கிறார் என்பதை உலக மக்கள் உணர்ந்தறியவில்லை. அவர்களுக்கு, இது ஒரு பரம இரகசியம். ஆனால் கிறிஸ்து பரம்புதிரானவராக இருந்தாலும், சபை கிறிஸ்துவின் வெளியரங்கமாக இருக்கிறது. கிறிஸ்துவின் சரீரமாக சபையானது கிறிஸ்துவின் வெளியாக்கமாகும். நாம் சபையைக் காணும்போது, நாம் கிறிஸ்துவைக் காண்கிறோம். நாம் சபைக்குள் வரும்போது, நாம் கிறிஸ்துவுக்குள் வருகிறோம். நாம் சபையைத் தொடர்புகொள்ளும்போது, நாம் கிறிஸ்துவைத் தொடர்புகொள்கிறோம். சபை உண்மையில் கிறிஸ்துவின் பரம இரகசியமாகும். (The Conclusion of the New Testament, p. 2054)
ஆதாமும் ஏவாளும்—
கிறிஸ்து மற்றும் சபையின் ஒரு முழுச் சித்திரம்
வேதத்திலுள்ள முதல் தம்பதியாகிய ஆதாமும் ஏவாளும் கிறிஸ்து மற்றும் சபையின் ஓர் உட்கருத்துவாய்ந்த மற்றும் முழுமையான சித்திரத்தை வழங்குகின்றனர். ஆதியாகமத்தின்படி, தேவன் ஆணையும் பெண்ணையும் ஒரே நேரத்திலும், ஒரே விதத்திலும் சிருஷ்டிக்கவில்லை. முதலில், தேவன் நிலத்தின் தூசியிலிருந்து மனிதனின் சரீரத்தை உருவாக்கினார். பின்பு அவர் அவனது நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதினார், மனிதன் ஜீவிக்கிற ஆத்துமாவானான் (ஆதி 2:7). தேவன் மனிதனைச் சிருஷ்டித்த பிறகு, “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்று அவர் கூறினார் (வ. 18). விலங்குகளும் பறவைகளும் ஆதாமிடம் கொண்டுவரப்பட்டன, ஆதாம் அவற்றுக்குப் பெயரிட்டான். ஆனால் ஆதாமுக்கோ “ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.” (வ. 20). ஓர் இணைபாதியைப் பெறுவதற்கான, தன்னுடன் பொருந்துகிற ஒருவரைப் பெறுவதற்கான வாஞ்சை ஆதாமுக்குள் இருந்தது. கால்நடைகள், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றிடையே ஆதாமுக்கு ஏற்ற இணைபாதி எதுவும் இல்லை. இத்தகைய ஓர் இணைபாதியை உற்பத்திச்செய்வதற்கு, “கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார்” (வ. 21). ஆதாம் நித்திரையிலிருந்தபோது, கர்த்தர் ஆதாமின் விலா எலும்பில் ஒன்றை எடுத்து, ஒரு பெண்ணைக் கட்டுமானம் செய்வதற்காக அதைப் பயன்படுத்தினார் (வ. 22). ஜீவன், சுபாவம், மற்றும் உருவில் பெண் ஆணைப்போலவே இருந்தாள். ஆகையால், தேவன் அந்தப் பெண்ணை ஆதாமிடம் கொண்டுவந்தபோது, “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்” (வ. 23) என்று ஆதாம் ஆர்ப்பரித்தான். கடைசியாக தான் தன் இணைபாதியைக் கண்டுகொண்டதை ஆதாம் அறிந்தான்.
ஒரு மனிதனும், அவனது மனைவியும் ஒரே மாம்சமாக இருக்கின்றனர் என்று ஆதியாகமம் 2:24 சுட்டிக்காட்டுகிறது. ஒரு கணவனையும், மனைவியையும் இரண்டு தனி நபர்களாக நாம் கருதக் கூடாது, மாறாக ஒரு முழுமையான நபராக, ஒரு முழு அலகின் இரண்டு பாதிகளாகக் கருத வேண்டும். ஒரு முழுமையான அலகாக, ஒரு கணவனும் மனைவியும், ஒரே வஸ்துவாகிய கிறிஸ்து மற்றும் சபையின் ஓர் ஆச்சரியமான சித்திரமாக இருக்கின்றனர். (Life-study of Ephesians, pp. 445-446)
சபையின் அஸ்திபாரம்—
கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு
மத்தேயு 16இல், கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களை செசரியா பிலிப்பு மாவட்டத்திற்குள் அழைத்து வந்து, “மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று அங்கு அவர்களிடம் கேட்டார் (மத். 16:13). அவர்கள் பதிலளித்தபின், “நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?” என்று அவர் தொடர்ந்து கேட்டார் (வ. 15). பிதாவிடமிருந்து ஒரு வெளிப்பாட்டைப் பெற்று, சீமோன் பேதுரு, பதிலளித்து, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று கூறினான் (வ. 16).
எபேசியர் 5:32இன்படி, கிறிஸ்து மற்றும் சபை என்ற இரண்டு பகுதிகளடங்கிய ஒரு மாபெரும் பரம இரகசியம் இருக்கிறது. கிறிஸ்துவைப் பற்றி பிதா கொடுத்த வெளிப்பாடு இந்த மாபெரும் பரம இரகசியத்தின் முதல் பாதியாக மட்டுமே இருப்பதால், அதைத் தொடர்ந்து, கர்த்தர் சபையைப் பற்றிப் பேசினார்: “மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்” (மத். 16:18). சபை கிறிஸ்துவினுடைய ஒன்றாகவும், கிறிஸ்துவுக்கான ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்பதை இது பலமாகச் சுட்டிக்காட்டுகிறது. முதலில், கிறிஸ்து இனங்காணப்பட்டு, அறியப்பட்டு, உடமையாக்கப்பட்டார். பின்பு கர்த்தர், “இந்தப் பாறை” மீது தாம் தம் சபையைக் கட்டப்போவதாகக் கூறினார். இந்தப் பாறை என்பது கிறிஸ்துவை மட்டுமல்லாமல், பிதாவிடமிருந்து பேதுரு பெற்றுக்கொண்ட கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டையும் குறிக்கிறது. சபை கிறிஸ்துவைப் பற்றிய இந்த வெளிப்பாட்டின்மீது கட்டப்படுகிறது. எனவே, இங்கு “பாறை” என்பது வெறுமனே கிறிஸ்து மட்டுமல்ல; இது கிறிஸ்துவை உணர்ந்தறிவதும், அறிவதும், அனுபவமாக்குவதும், உடமையாக்குவதும் ஆகும். (Life-study of Mark, pp. 143-144)
தெய்வீக வெளிப்பாட்டின் நிறைவு—
கிறிஸ்துவும் சபையும்
புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள், குறிப்பாக, பவுல் தேவனுடைய பொருளாட்சியைப் பற்றிய ஒரு முழு வெளிப்பாட்டை நமக்குத் தரும்படி, தேவனுடைய பரம இரகசியமாகிய கிறிஸ்து, மற்றும் கிறிஸ்துவின் பரம இரகசியமாகிய சபை குறித்து தேவனுடைய வார்த்தையை முழுமையாக்கியதைப் பார்க்கிறோம். பவுல் தேவனுடைய பரம இரகசியமாகிய கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டைப் பெற்றான். கொலோசெயர் 2:2இல் அவன், “கிறிஸ்துவாகிய தேவனுடைய பரம இரகசியத்தின் முழு அறிவு” (கிரே.) குறித்து பேசுகிறான். எபேசியர் 3:4இல் பவுல் கிறிஸ்துவின் பரம இரகசியத்தைப் பற்றி பேசுகிறான். கொலோசெயர் 2:2இலுள்ள தேவனுடைய பரம இரகசியம் கிறிஸ்து, இப்படியிருக்க எபேசியர் 3:5இலுள்ள கிறிஸ்துவின் பரம இரகசியம் சபை. தேவனுடைய பொருளாட்சியைக் குறித்த வெளிப்பாட்டையும் பவுல் பெற்றான் (2 கொரி. 13:14, எபே. 3:14-19). ஆகையால், தேவனுடைய வார்த்தையை நிறைவுசெய்தல், கிறிஸ்து மற்றும் சபை என்ற மாபெரும் பரம இரகசியத்தையும், (எபே. 5:32), தலையாகிய கிறிஸ்துவைப் பற்றிய முழு வெளிப்பாட்டையும் (கொலோ. 1:25-27, 2:18, 3:11) சரீரமாகிய சபையைப் பற்றிய முழு வெளிப்பாட்டையும் உள்ளடக்குகிறது (எபே. 3:3-6). (The Conclusion of the New Testament, pp. 9-10)
References: The Conclusion of the New Testament, msgs. 1, 190, 213; Life-study of Ephesians, msgs. 29, 53; Life-study of Mark, msg. 16
பாவ சுபாவத்தில் மரித்திருந்தோம்
சபை—ஒரே புதிய மனிதனாக
1232
1 பாவ சுபாவத்தில் மரித்திருந்தோம்.
முற்றும் முரணான லோகத்தில்;
தேவன் நம்மை உயிர்த்தெழுப்பி,
கர்த்தரோடமரப் பரமேற்றிட்டார்.
இயேசு சேர்க்கின்றார் நம்மை ஒன்றாய்,
வந்து, காண்பீர் தூயோர் ஓர்மனம்.
அவர் அன்பு பிணைக்கும் நம்மை,
கர்த்தரின் முழுமையின் வளர்த்திக்காய்.
2 பரிசுத்தரோடு அறிகின்றோம்,
தேவ மா பரிமாணங்களை.
கிறிஸ்தின் அன்பின் அறிவு விஞ்சும்.
நம் தேவனின் நிறைவால் நிறைகின்றோம்.
3 தேவத் திட்டம் இப்போதறிந்தோம்,
மா இரகஸ்யம் காட்சியானதே:
கிறிஸ்து, சபை, ஒன்றாய்க் கண்டு நாம்,
எதிரியை வெட்கப்படுத்துகின்றோம்.
4 இதற்காய் வேண்டுவோம் பிதாவை-
ஆற்றலூட்டும் உள்-மனிதனை;
வீடமைத்திடும் எம் உள்ளத்தில்,
உம் திட்டத்தில் வேர்கொள்ளச்செய்யும் அன்பில்.
5 சரீரத்தில் சீராய்ப் பொருந்தி,
அங்கங்களாய்க் கிறிஸ்தைப் பகிர்வோம்;
அளவின்படி செயல்பட்டு,
அன்பில் வளர்ந்து, சரீரம் கட்டுவோம்.
6 அவர் நோக்கத்திற்காய் ஒன்றானோம்,
ஒரே புதிய மனிதனாய்.
சபையிலும், இயேசு கிறிஸ்திலும்,
அவர்க்கே மகிமை என்றென்றும்-ஆமென்.