மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

பாடம் ஏழு – சபை

எபே. 3:9-11—தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே, 10உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக, 11இயேசு கிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த பரம இரகசியத்தினுடைய பொருளாட்சி இன்னதென்று எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு.

வெளியே அழைக்கப்பட்ட கூட்டம்

“சபை” என்று மொழிபெயர்க்கப்படும் கிரேக்க வார்த்தை எக்லிசியா ஆகும், இது இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது: எக், “வெளியே” மற்றும் கலியோ, “அழைக்கப்பட்ட.” இந்த இரண்டு வார்த்தைகளை ஒன்று சேர்க்கும்போது, “அழைக்கப்பட்ட சபையார்” அல்லது “அழைக்கப்பட்டவர்களின் கூட்டம்” என்று அர்த்தம். ஆகவே, இந்த வார்த்தையின் எழுத்துரீதியான அர்த்தத்தின்படி, சபை என்பது தேவனால் உலகத்தைவிட்டு வெளியே அழைக்கப்பட்டோரின் கூட்டமாகும்.
பண்டைய காலங்களில் நகரத் தலைவன் சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மக்களை சபையாராக, ஒரு கூட்டமாக ஒன்றுகூடும்படி அழைப்பதுண்டு. இப்படிப்பட்ட கூடுகையைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தையே எக்லிசியா (அப். 19:41). நாம் இங்கு வலியுறுத்தும் குறிப்பு, எக்லிசியா என்ற வார்த்தை, வேதாகம வழக்கின்படி, சபை என்பது வெளியே அழைக்கப்பட்ட கூட்டத்தார் என்று குறிக்கிறது. சபை என்பது தேவனின் குறிக்கோளுக்காக அவருக்கென்று உலகத்தைவிட்டு வெளியே அழைக்கப்பட்ட கூட்டமாகும். எக்லிசியா என்பதை “சபை” என்று மொழிபெயர்க்காமல், “கூட்டத்தார்” என்று மொழிபெயர்ப்பது அதிக சிறந்தது. பிரதரன் போதகர்கள் இதை வலியுறுத்தினார்கள், அதோடு பிரதரன் மத்தியிலுள்ள சபையார் பிரதரன் அசெம்ப்ளி (கூட்டத்தார்) என்று அழைக்கப்பட்டனர். கூட்டத்தார் என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்துவது சரியே நான் ஒத்துக்கொள்கிறேன். (The Conclusion of the New Testament, pp. 2215-2216)

தேவனுடைய வீடு

1 தீமோத்தேயு 3:15, எபிரெயர் 3:6, மற்றும் 1 பேதுரு 4:17 ஆகியவை, சபை தேவனுடைய வீடு என்று வெளிப்படுத்தும் மூன்று வசனங்கள் ஆகும். 1 தீமோத்தேயு 3:15இல், “தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது” என்று பவுல் கூறுகிறான். தேவனின் வாசஸ்தலமாக, சபை தேவனின் வீடாகவும் அவரது குடும்பமான அவரது வீட்டாராகவும் இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் ஆலயமும் தேவனுடைய மக்களும் இரண்டு தனித்தனி காரியங்கள், ஆனால், புதிய ஏற்பாட்டிலுள்ள நிறைவேற்றத்தில் வாசஸ்தலமும் குடும்பமும் ஒன்று. தேவனின் புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியின்படி, தேவனுடைய வீடு அவரது குடும்பமாக இருக்கிறது…சபை தேவனுடைய வீடு என்று பேசும் மற்றொரு வசனம் எபிரெயர் 3:6 ஆகும். இந்த வசனம், “கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரன்…நாமே அவருடைய வீடாயிருப்போம்” என்று கூறுகிறது. (The Conclusion of the New Testament, p 2227)

தேவனுடைய இராஜ்ஜியம்

எபேசியர் 2:19, “ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே சக குடிமக்களும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து” (கிரே.) என்று கூறுகிறது. சக குடிமக்கள் என்ற பதம், தேவனுடைய இராஜ்ஜியத்தைச் சுட்டிக்காட்டுகிறது. யூத மற்றும் புறவின விசுவாசிகள் எல்லாரும் தேவன் தம் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் ஒரு கோளமாகிய தேவனுடைய இராஜ்ஜியத்தின் குடிமக்கள். ஒருவன் ஒரு விசுவாசியாக இருக்கும்பட்சத்தில், அவன் தேவனுடைய இராஜ்ஜியத்தின் குடிமகனாக இருக்கிறான். இந்தக் குடியுரிமையில் உரிமைகளும் பொறுப்புகளும் உண்டு, இவை இரண்டும் எப்போதும் சேர்ந்தே செல்கின்றன. நாம் இராஜ்ஜியத்தின் உரிமைகளை அனுபவிக்கிறோம், நாம் இராஜ்ஜியத்தின் பொறுப்புகளைச் சுமக்கிறோம். (The Conclusion of the New Testament, p 2235)

கிறிஸ்துவின் சரீரம்

சபை கிறிஸ்துவின் சரீரம் என்று எபேசியர் 1:22 மற்றும் 23 வெளிப்படுத்துகின்றன. “எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.” சபை ஒரு நிறுவனம் அல்ல, மாறாக அது, தலையின் வெளியாக்கத்திற்காக, மறுபடிஜெநிப்பிக்கப்பட்டு தேவனுடைய ஜீவனைப் பெற்றிருக்கிறவர்களாகிய எல்லா விசுவாசிகளாலும் கட்டியமைக்கப்பட்ட ஜீவாதார சரீரமாகும். சரீரம் என்பது தலையின் நிறைவு, இந்த நிறைவே தலையின் வெளியாக்கம். (The Conclusion of the New Testament, p. 2245)

கிறிஸ்துவின் நேர்பாதி

எபேசியர் 5:22-23இல் பவுல் தான் கூறிய புத்திமதியில், சபையைக் கிறிஸ்துவின் நேர்பாதி என்று கூறுகிறான். சபை உண்மையில் கிறிஸ்துவின் ஒரு பகுதி என்பதை இது வெளிப்படுத்துகிறது, ஏனெனில், எப்படி ஏவாள் ஆதாமிலிருந்து வந்து, ஆதாமுக்கென்று இருந்தாளோ, அது போலவே, சபை கிறிஸ்துவிலிருந்து வருகிறது, கிறிஸ்துவுக்கென்று இருக்கிறது (ஆதி. 2:21-23).

சபை கிறிஸ்துவின் நேர்பாதி என்பது, அன்பில் காணும் திருப்தியையும் இளைப்பாறுதலையும் மறைவாகக் காட்டுகிறது. ஒவ்வொரு கணவனுக்கும் திருப்தியும் இளைப்பாறுதலும் தேவை, இவை அன்பில் காணப்படுகின்றன. (The Conclusion of the New Testament, pp. 2275-2276)

புதிய மனிதன்

எபேசியர் 2:15, “சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி” என்று கூறுகிறது. எபேசியர் 4:24, “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று கூறுகிறது. மேலும், கொலோசெயர் 3:10, “தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே” என்று கூறுகிறது. சபை அழைக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடுதல் என்பது சபையின் ஆரம்ப அம்சம். இந்த அம்சத்திலிருந்து நாம் தேவனுடைய வீடு மற்றும் தேவனுடைய இராஜ்ஜியம் என்ற அம்சங்களைக் காண முன் செல்ல வேண்டும். இவை இந்த ஆரம்ப அம்சத்தைவிட உயர்ந்தவை, ஆனால், சபை கிறிஸ்துவின் சரீரம் என்ற அம்சத்தின் அளவுக்கு உயர்வானவை அல்ல. இருப்பினும், புதிய மனிதன் கிறிஸ்துவின் சரீரத்தைவிட இன்னும் உயர்வானது. இவ்வாறு, சபை என்பது விசுவாசிகளின் மன்றமோ, பரலோக இராஜ்ஜியத்தின் குடிமக்களோ, தேவனுடைய பிள்ளைகளாலான வீட்டாரோ, கிறிஸ்துவுக்கான ஒரு சரீரமோ மட்டுமல்ல. இன்னும் அதிக உயர்வான அம்சத்தில், சபை தேவனுடைய நித்திய குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான புதிய மனிதன். சபை கிறிஸ்துவின் சரீரம் என்பதில் வலியுறுத்தல் ஜீவன்மீதே இருக்கிறது, இப்படியிருக்க, சபை புதிய மனிதன் என்பதில் வலியுறுத்தல் நபர்மீது இருக்கிறது. கிறிஸ்துவின் சரீரமாக, சபைக்கு கிறிஸ்து அதன் ஜீவனாக தேவை. புதிய மனிதனாக, சபைக்கு கிறிஸ்து அதன் நபராக தேவை. ஜீவன் இல்லாத உடல், ஒரு உடல் அல்ல, அது ஒரு பிணம். எனினும், உடல் அசையும்போது, அது ஜீவனால் அல்ல, மாறாக அந்த நபரால் தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே, புதிய மனிதனில் கிறிஸ்துவை நம் நபராக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கூட்டு நபராக இந்தப் புதிய மனிதன், பூமியில் இயேசு வாழ்ந்ததுபோன்ற ஒரு வாழ்க்கையை, அதாவது, தேவனை வெளிக்காட்டுகிற, தேவனை நிஜமானவராக மனிதன் உணர்ந்தறியும்படிச் செய்கிற ஒரு சத்தியத்தின் வாழ்க்கையை வாழ வேண்டும். (The Conclusion of the New Testament, pp. 2301-2302)

பொன் குத்துவிளக்குகள்

வேதத்தில் அதிமுக்கிய சின்னங்களில் ஒன்று, குத்துவிளக்குகள் பற்றிய குறிப்பு. வெளிப்படுத்தல் 1:12, “அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளை…கண்டேன்.” வெளிப்படுத்தல் 1:20 “நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்” என்று கூறுகின்றன. எனவே, சபை குத்துவிளக்கால் அடையாளப்படுத்தப்படுகிறது.

பொன் குத்துவிளக்கு பற்றிய வெளிப்பாடு யாத்திராகமம், சகரியா, வெளிப்படுத்தல் ஆகியவற்றில் காணப்படுகிறது. யாத்திராகத்தில் குத்துவிளக்கு கிறிஸ்துவை மூவொரு தேவனின் ஊனுருவாக அடையாளப்படுத்துகிறது. சகரியாவில் குத்து விளக்கு தேவனின் சாட்சியான இஸ்ரயேல் தேசத்தை அடையாளப்படுத்துகிறது. வெளிப்படுத்தலிலுள்ள குத்துவிளக்குகள் இயேசுவின் சாட்சிக்காக தேவனின் ஜீவிக்கும் ஊனுருவாக சபையை அடையாளப்படுத்துகின்றன. ஆகவே, குத்துவிளக்கு என்பது, கிறிஸ்து, இஸ்ரயேல் தேசம், சபை ஆகியவற்றின் ஒரு சின்னம். மேலும்,…குத்துவிளக்கு மூவொரு தேவனின் ஊனுருவை அடையாளப்படுத்துகிறது. கிறிஸ்துவிலும், இஸ்ரயேலிலும், சபையிலும், பொன் குத்துவிளக்கு என்பது மூவொரு தேவனுடைய ஊனுருவின் உருவோவியம். (The Conclusion of the New Testament, pp. 2327-2328)

References: The Conclusion of the New Testament, msgs 207—220; Life-study of Ephesians, msg. 74

கிறிஸ்துவின் சரீரம்
சபை—அவளுடைய பொதுவான வரையறை
824

1 கிறிஸ்துவின் சரீரம்
பிதாவின் வாழ்விடம்;
அழைக்கப்பட்டோர் கூட்டம்
தேவ-மனு இனம்,
படைப்பின்முன் தெரிந்தார்
கல்வாரியில் மீட்டார்
சபையின் சுபாவம் நிலை
பூமியல்ல பரம்.

2 உயிர்ப்பின் புது சிருஷ்டி,
புதிய மனிதன்,
ஆவியில் ஸ்நானம் செய்து
வாக்கால் சுத்தம் செய்தார்.
கிறிஸ்துவே அவள் ஜீவன்
தலை, உள்ளடக்கம்,
பகைவர் பாதங்கள்கீழ்,
பரமேறினாள்.

3 கிறிஸ்துவல்லால் வேறு
அஸ்திபாரம் இல்லையே;
கிறிஸ்துபோல் அவளுடைய-
தெல்லாம் தெய்வீகம்;
கல்வாரியில் ஆவியால்
அங்கங்கள் பங்குற்று,
உயிர்ப்பில் கட்டப்படுவார்,
பொன், வெள்ளி, மணியாய்.

4 தேவன் கர்த்தர் ஆவி ஒன்றே-
சாராம்சம் ஒன்றே;
விஸ்வாசம், நம்பிக்கை,
ஸ்நானம், சரீரம் ஒன்றே;
அவளுள் மூவோர் தேவன்,
அங்கங்கள் ஓர் மெய்யே;
விஸ்வாசத்தால் ஒன்றானோம்,
நம்பிக்கை காண்பிப்போம்.

5 தேசங்கள் கோத்திரங்கள்
எங்கிலுமிருந்து
அங்கங்கள் நாம் ஒன்றானோம்,
வேற்றுமையின்றியே;
உயர்ந்தான் தாழ்ந்தான் இல்லை,
யூதன் கிரேக்கன் இல்லை;
ஆண்டான் அடிமை இல்லை;
கிறிஸ்துவே எல்லாமும்.

6 உலகளாவியது
ஓர் சரீரம், ஐக்கியம்;
ஊர் ஒன்றுக்கு ஒரே
வெளியாக்கமே உண்டு;
ஒருமை காக்க உள்ளூர்
தளத்தில் நிற்கின்றோம்,
ஓர் மனம் காக்க சரீர
ஐக்கியத்தில் உள்ளோம்.

7 புது எருசலேமின்
மாதிரி சபைகள்;
அம்சங்கள், விவரங்கள்
ஒன்றாகக் காண்கின்றோம்;
விளக்குத் தண்டுகளில்,
தேவன் ஒளி உள்ளே;
கிறிஸ்து விளக்காய்,
மகிமை சாயல் வீசுவார்