மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

Jump to section

பாடம் ஐந்து – தெய்வீக மற்றும் நித்திய ஜீவன்

1 யோ. 1:2—அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

ரோ. 8:2—கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

நித்திய ஜீவன்

நித்திய ஜீவன் என்பது, காலத்தைப் பொருத்தவரை மட்டுமல்ல, தரத்தைப் பொருத்த வரைகூட நித்தியமானது. இந்த ஜீவன் அதன் கோளத்தைப் பொருத்த வரையும்கூட நித்தியமானது. எனவே, நித்திய என்ற வார்த்தை மூன்று காரியங்களைக் குறிக்கிறது: காலம், இடம், தரம். நேரம் என்ற மூலக்கூறைப் பொருத்தவரை, இந்த ஜீவன் என்றென்றும் நீடிக்கிறது. இடம், கோளம் ஆகியவற்றை பொருத்தவரை, இந்த ஜீவன் பரந்தகன்றது, வரம்பற்றது. தரத்தைப் பொருத்தவரை, நித்திய ஜீவன் குறைபாடோ குறைவோ இல்லாமல், பூரணமானது, முழுமையானது. நித்திய ஜீவனின் கோளம் அல்லது களம் முழுப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்குகிறது. நித்திய ஜீவன் என்பது ஜீவனின் முழுக் களத்தையும் கொண்டிருக்கும் அளவுக்கு மிகவும் பரந்தகன்றது. ஜீவன் என்ற களத்தில் இருப்பதெல்லாம் இந்த நித்திய ஜீவனில் உள்ளடங்கியுள்ளது. எனினும், நம் மனித ஜீவன் மிகவும் வித்தியாசமானது. நம் ஜீவன் தற்காலிகமானது மட்டுமல்ல, அது வரம்புக்குட்பட்டதும்கூட. ஆனால், நித்திய ஜீவன் தற்காலிகமானதுமல்ல வரம்புக்குட்பட்டதுமல்ல; மாறாக அது நேரத்தைப் பொருத்தவரை என்றென்றுமுள்ளது, இடத்தைப் பொருத்தவரை வரம்பற்றது. மேலும், நம் ஜீவனில் பல குற்றம் குறைகள் உண்டு. எனினும், தெய்வீக ஜீவனில், நித்திய ஜீவனில் குற்றமுமில்லை குறையுமில்லை.
அழிக்கப்படமுடியாதது

நித்திய ஜீவன் அழிக்கப்படமுடியாத ஜீவன் (எபி. 7:16). இந்த ஜீவனை எதுவும் அழிக்கவோ கரைக்கவோ முடியாது. நித்தியமான, தெய்வீகமான, சிருஷ்டிக்கப்படாத ஜீவனாகவும், மரணம் மற்றும் பதாளத்தின் பரீட்சையினூடாகக் கடந்து சென்றிருக்கிற உயிர்த்தெழுந்த ஜீவனாகவும், இது முடிவில்லா ஜீவன் (அப். 2:24, வெளி. 1:18). சாத்தானும் அவனைப் பின்பற்றுபவர்களும் இந்த ஜீவனைச் சிலுவையில் அறைந்ததன்மூலம் அதைத் தாங்கள் தீர்த்துகட்டிவிட்டதாக நினைத்தனர்…எனினும், சிலுவைமரணம் இந்த ஜீவன் பெருக்கமடைய, விருத்தியடைய அதிசிறந்த வாய்ப்பை வழங்கியது. இந்த ஜீவன் வரம்பற்றது என்பதால், அது மேற்கொள்ளப்படவோ, கீழ்ப்படுத்தப்படவோ, அழிக்கப்படவோ முடியாது. பிதா நித்திய ஜீவனின் ஊற்றாக இருக்கிறார்; பிதாவால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இந்த ஜீவனில் பங்குபெற்று இதனை அனுபவித்து மகிழும்படியாக பிதாவிலிருந்தும் பிதாவோடும் குமாரன் நித்திய ஜீவனின் வெளியாக்கமாக வெளியரங்கமானார். நித்திய ஜீவனின் இந்த அம்சங்களை ஆராய முயற்சிப்பதற்குப் பதிலாக, அவற்றை ஓர் ஆவிக்குரிய போஜனத்தின் “உணவு வகைகளாக” அனுபவித்துமகிழ வேண்டும். நித்திய ஜீவன் தேவனின் ஜீவனாகும், அது தேவ குமாரனே, அது நித்தியத்தில் பிதாவுடன் இருந்தது. (Life-study of 1 John, pp. 33-35)

தெய்வீக ஜீவன்
மனிதனின் மூன்று பகுதிகளுக்குள் பகிர்ந்தளிக்கப்படுதல்

தெய்வீக ஜீவன் மனிதனின் மூன்று பகுதிகளுக்குள்ளும் பகிர்ந்தளிக்கப்படுவதை ரோமர் 8 வெளிப்படுத்துகிறது. 2ஆம் வசனம் ஜீவ ஆவியின் பிரமாணத்தைக் குறித்துப் பேசுகிறது. 6ஆம் வசனம் ஆவியின் மீது பொருத்தப்பட்ட மனம் ஜீவன் என்று கூறுகிறது. கிறிஸ்து உங்களில் இருந்தால், சரீரம் மரித்ததாக இருக்கிறது, ஆனால், ஆவி ஜீவனாயிருக்கிறது என்று 10ஆம் வசனம் கூறுகிறது. கிறிஸ்து இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியவருடைய ஆவி, நமக்குள் உள்வசிக்கும் தம் ஆவியின்மூலம் நம் சாவுக்கேதுவான சரீரங்களுக்கு ஜீவன் தருவார் என்று 11ஆம் வசனம் கூறுகிறது. இவ்வாறு, 2ஆம் வசனம் தெய்வீக ஜீவனைக் குறித்து பேசுகிறது, 10ஆம் வசனம் நம் ஆவி ஜீவனாக இருக்கிறது என்று கூறுகிறது, 6ஆம் வசனம் நம் மனம் ஜீவனாயிருக்க முடியும் என்று கூறுகிறது, 11ஆம் வசனம் நம் சரீரத்திற்கும்கூட ஜீவன் வழங்கப்பட முடியும் என்று கூறுகிறது. 8ஆம் வசனம் தேவனைக் குறித்தும், 9ஆம் வசனம் தேவனுடைய ஆவி மற்றும் கிறிஸ்துவின் ஆவியைக் குறித்தும், 10ஆம் வசனம் கிறிஸ்துவைக் குறித்தும் பேசுகிறது…மூவொரு தேவன் மனிதனின் மூன்று பகுதிகளுக்குள் பகிர்ந்தளிக்கப்படுகிறார் என்று இந்த வசனங்கள் காட்டுகின்றன.

ஜீவ ஆவி

ரோமர் 8:2 ஜீவ ஆவியைப் பற்றி பேசுகிறது. ஜீவ ஆவி என்பது இணை வார்த்தைகளைக் கொண்ட ஒரு சொற்றொடர், ‍உண்மையில், ஆவியானவரே ஜீவன் என்பதே இதன் அர்த்தம். வேத்தில் இதுபோன்ற சொற்றொடர்கள் பல உள்ளன. தேவ ஆவி என்றால், ஆவியானவர் தேவன் என்று அர்த்தம்; தேவனுடைய ஜீவன் என்றால், ஜீவன் தேவனே என்று அர்த்தம்; கிறிஸ்துவின் ஆவி என்றால், ஆவியானவர் கிறிஸ்துவே என்று அர்த்தம்; தேவனுடைய அன்பு என்றால், அன்பு தேவனே என்று அர்த்தம்.

இது மின்சாரத்தின் மின்னோட்டம் போன்றது. உண்மையில், அந்த மின்னோட்டம் மின்சாரமே. இது மின்சாரத்திலிருந்து வேறுபட்ட ஏதோவொன்றல்ல; இது நகர்ந்துகொண்டிருக்கிற மின்சாரமே. மின்சாரம் பாய்ந்தோடும்போது, நகர்வில் இருக்கும் போது, அதுவே மின்சாரத்தின் மின்னோட்டமாக இருக்கிறது. இந்த மின்னோட்டம் ஜீவ ஆவிக்கு ஒப்பிடப்படலாம். ஜீவ ஆவி என்றால், ஆவியானவரே ஜீவன் என்று அர்த்தம். ஆவியானவர் நகர்ந்துகொண்டிருக்கிற ஜீவன், அதாவது, நகர்ந்துகொண்டிருக்கிற மூவொரு தேவன்.

நம் ஆவிக்குள் பகிர்ந்தளிக்கப்படுதல்

இப்படிப்பட்ட தெய்வீக ஜீவன், நம் ஆவிக்குள் முதலில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. கிறிஸ்து நம்மில் இருப்பதால் நம் ஆவி ஜீவனாக இருக்கிறது என்று ரோமர் 8:10 கூறுகிறார். இதற்குக் காரணம், சாட்சாத்து கிறிஸ்துவே இந்த ஜீவன், இந்த ஜீவன் நம் ஆவியில் இருக்கிறது. எனவே, நம் ஆவி ஜீவனாயிருக்கிறது. இது மிகப் பலமான குறிப்பு. 10ஆம் வசனம், கிறிஸ்து நமக்குள் இருப்பதால், ஜீவன் நமக்குள் இருக்கிறது என்று கூறவில்லை. அதற்குப் பதிலாக, நம் ஆவி ஜீவனாயிருக்கிறது என்று அது கூறுகிறது. இன்று நம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஆவி ஜீவனாயிருக்கிறது.

நம் மனதிற்குள் பகிர்ந்தளிக்கப்படுதல்

ஆவியில் பொருத்தப்பட்ட மனம் ஜீவன் என்று ரோமர் 8:6 கூறுகிறது. நம் ஆவி ஜீவனாயிருப்பது மட்டுமல்ல, நம் மனம்கூட ஜீவனாயிருக்க முடியும். ஆனால், இந்த மனம் ஆவியின்மீது பொருத்தப்பட வேண்டும். இந்த மனம் ஆவியின் மனமாக மாற, அது ஆவியைக் கொண்டு மூழ்கடிக்கப்பட்டு, பூரிதமாக்கப்பட்டு, உட்செலுத்தப்பட வேண்டும். இறுதியில், ஆவி நம் மனதின் ஆவியாகி விடுகிறது. இது எபேசியர் 4:23இல் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் மனம் ஆவியின்மீது பொருத்தப்பட்டிருப்பதால், நம் ஆவி நம் மனதைப் பூரிதமாக்கி, நம் மனதை ஆவியின் மனதாக ஆக்குகிறது. இறுதியில், நம் ஆவி நம் மனதின் ஆவியாக ஆகிறது. இந்த ஆவி கலந்திணைந்த ஆவியாக இருக்கிறது. இது நம் ஆவி ஜீவன்-தரும் ஆவியாகிய கிறிஸ்துவோடு கலந்திணைவதாகும்.
நம் மனம் நம் ஆவியோடு ஒன்றாயிருப்பதால், நம் ஆவியோடு சேர்க்கப்பட்டு, இணைக்கப்பட்டு, அதைக்கொண்டு பூரிதமாக்கப்பட்டு, உட்செலுத்தப்படுவதால், நம் மனமும் ஜீவனாயிருக்கிறது. இப்படிப்பட்ட மனம் மற்றவர்களுக்கு ஜீவனைப் பகிர்ந்தளிக்கும்படி செயல்பட முடியும். நம் இயற்கை மனதால், நாம் மற்றவர்களுக்கு ஜீவனைப் பகிர்ந்தளிக்க முடியாது. இந்த மனம் ஜீவனாக இல்லை. ஆனால், நம் மனம் நம் ஆவியோடு இணைக்கப்படும்போது, ஜீவனாயிருக்கிற நம் ஆவியைக்கொண்டு பூரிதமாக்கப்படும்போது, இப்போது நம் மனமும் ஜீவனாகிறது.

நம் சரீரத்திற்குள் பகிர்ந்தளிக்கப்படுதல்

கிறிஸ்து இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய சாட்சாத்து தேவனுடைய ஆவி, நமக்குள் உள்வசிக்கும் ஆவியானவர் மூலம் நம் சாவுக்கேதுவான சரீரத்திற்கு, நம் மரித்துக்கொண்டிருக்கும் சரீரத்திற்கு ஜீவன் தருகிறார் என்று ரோமர் 8:11 கூறுகிறது. இந்த வசனத்திலுள்ள சாவுக்கேதுவான என்ற வார்த்தை மரணம் என்னும் கருத்தை மட்டுமல்ல, பெலவீனம் என்னும் கருத்தையும் மறைவாகக் காட்டுகிறது. சாவுக்கேதுவான சரீரம் பெலவீனமான சரீரமாகும், மரித்துக் கொண்டிருக்கும் சரீரமாகும். நம் விழுந்து போன சரீரத்தை, ரோமர் 7 இந்த மரணத்தின் சரீரம் என்று அழைக்கிறது (வ. 24). இப்படிப்பட்ட பெலவீனமான, மரித்துக் கொண்டிருக்கும், சாவுக்கேதுவான சரீரத்திற்குக்கூட, அதாவது, ஒரு மரண சரீரத்திற்குக்கூட ஜீவன் வழங்கப்பட முடியும்.
ரோமர் 8:2இல் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வீக ஜீவன், 10ஆம் வசனத்தில் நம் ஆவிக்குள் உட்பகிரப்பட்டு, அல்லது, பகிர்ந்தளிக்கப்பட்டு, 6ஆம் வசனத்தில் நம் மனதிற்குள் பரவுகிறது என்று நாம் பார்க்க முடியும். பின்னர், 11ஆம் வசனத்தில் அது நம் சாவுக்கேதுவான சரீரத்திற்குள் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவ்வாறு, தெய்வீக ஜீவன் நம் ஆள்தத்துவத்தின் மூன்று பகுதிகளுக்குள்ளும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. (CWWL, 1979, vol. 1, “Basic Lessons on Life,” pp. 559-561, 563-564)

References: Life-study of 1 John, msg. 4; CWWL, 1979, vol. 1, “Basic Lessons on Life,” ch. 13

ஜீவ ஊற்றென் ஆவியினின்று பாயுதே
தேவனை அனுபவித்தல்—ஜீவனாக

1191
1 ஜீவ ஊற்றென் ஆவியினின்று பாயுதே
பாயும் மூவொரு தேவனே;
தந்தை தேவன் ஊற்று, சுதன் கிறிஸ்து சுனை,
ஆவி ஜீவன் என்னுள் பாய்ச்சுகின்றார்.

ஜீவ ஓட்டம் என் அருஞ்செல்வம்,
ஆத்ம வாழ்வைக் கிடத்துகின்றேன்;
ஜீவ ஓட்டமே ஆழமாக்கும்;
ஜீவனேயே கிரீடமாய் சூட்டும்.

2 பசும்புல்லில் மேய்த்து, அமர் நீரில் ஆற்றி;
இயேசென்னை நடத்துகின்றார்;
ஓய்ந்தது போராட்டம்; நின்றது முயற்சி;
ஓட்டத்தில் பூரண ஆசீர்.

3 அதி தூயகத்தில், அவர் சந்நிதிக்கு,
இயேசென்னை அழைத்தார் ஓர் நாள்;
அல்லேலூயா! அன்பர் சத்தம் “நிலைத்திரு:
நான் திராட்சை நீ கிளை என்னில்.”

 

Jump to section