மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

Jump to section

பாடம் இரண்டு – சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்து

கொலோ. 2:6, ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, 7நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.

எல்லாவற்றின் நிஜமாகிய கிறிஸ்து

வேதத்தின்படி, நாம் பார்க்கிற, தொடுகிற, அனுபவித்துமகிழ்கிற எல்லாப் பெளதிகக் காரியங்களும், பொருள்ரீதியான காரியங்களும் நிஜமானவை அல்ல. அவை உண்மையின் வெறும் நிழலேயன்றி, சித்திரமேயன்றி ஒன்றுமல்ல. நாம் நாள்தோறும் பல பொருள்ரீதியான காரியங்களைத் தொடர்புகொள்கிறோம்: நாம் உணவு உண்ணுகிறோம், தண்ணீர் பருகுகிறோம், உடை உடுத்துகிறோம்; நம் வீடுகளில் வாழ்கிறோம், நம் வாகனங்களை ஓட்டுகிறோம். இவை‍யெல்லாம் நிஜமல்ல என்பதை நீங்கள் நன்றாக உணரவும், நினைவில்கொள்ளவும் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவை வெறும் நிழல்களே, சித்திரங்களே. நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவு, நிஜமான உணவு அல்ல, மாறாக, அது நிஜத்தின் சித்திரமே. நாம் பருகும் தண்ணீர் நிஜமான தண்ணீரல்ல. நம் கண்களுக்கு முன்பாக உள்ள ஒளி நிஜமான ஒளி அல்ல, மாறாக, அது வேறொன்றைக் குறிக்கும் ஒரு சித்திரமே.

அப்படியென்றால், அந்த நிஜமான காரியங்கள் எவை? சகோதர சகோதரிகளே, நிஜமான காரியங்கள் வேறொன்றுமல்ல, அது சாட்சாத்து கிறிஸ்துவே என்று நான் உங்களுக்கு தேவனுடைய கிருபையால் சத்தியமாகச் சொல்லுகிறேன். கிறிஸ்துவே நமக்கு நிஜமான உணவு. கிறிஸ்துவே நமக்கு நிஜமான தண்ணீர். கிறிஸ்துவே நமக்கு நிஜமான ஒளி. கிறிஸ்துவே நமக்கு எல்லாவற்றின் நிஜம். நம் பெளதிக ஜீவன்கூட, நிஜமான ஜீவன் அல்ல. அது கிறிஸ்துவைக் குறிக்கும் ஒரு சித்திரம் மட்டுமே. கிறிஸ்துவே நமக்கு நிஜமான ஜீவன். உங்களிடம் கிறிஸ்து இல்லை என்றால், உங்களிடம் ஜீவன் இல்லை. “நான் உயிரோடுதான் இருக்கிறேன்; என் சரீரத்தில் ஜீவன் இருக்கிறது” என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால், இது நிஜமான ஜீவன் அல்ல என்பதை நீங்கள் உணர்ந்தாக வேண்டும். இது நிஜமான ஜீவனை, அதாவது, சாட்சாத்து கிறிஸ்துவைக் குறிக்கிற வெறும் ஒரு நிழல் மட்டுமே.

கிறிஸ்துவை நாம் அனுபவிப்பதின் அளவு

எது நல்ல தேசமான கானான்? இந்தத் தேசம் சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்துவே என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். இது கிறிஸ்து மட்டுமல்ல, இது சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்து. உங்களிடம் கிறிஸ்து இருக்கிறாரா என்று நான் உங்களிடம் கேட்டால், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம், என்னிடம் அவர் இருக்கிறார்; என்னிடம் கிறிஸ்து இருக்கிறார்” என்று நீங்கள் பதிலளிப்பீர்கள். ஆனால், உங்களிடம் எப்படிப்பட்ட கிறிஸ்து இருக்கிறார் என்று நான் உங்களைக் கேட்பேன். உங்கள் அனுபவத்தில் உங்களிடம் சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்து இல்லை, ஒரு மிகச்சிறிய கிறிஸ்து மட்டுமே, ஓர் ஏழ்மையான கிறிஸ்து மட்டுமே இருக்கிறாரோ என்று நான் அஞ்சுகிறேன்.

நான் உங்களுக்கு ஒரு கதையை, ஒரு நிஜமான கதையைச் சொல்லுகிறேன். நான் இரட்சிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே, வேதத்தைப் படித்தேன், அப்போது, பஸ்கா ஆட்டுக்குட்டி கிறிஸ்துவின் மாதிரி என்று போதிக்கப்பட்டேன். நான் இதை அறிந்தபோது, எவ்வளவாய்க் கர்த்தரைத் துதித்தேன். “கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன். நீரே ஆட்டுக்குட்டி; நீரே எனக்காக ஆட்டுக்குட்டியாக இருக்கிறீர்” என்று நான் வியந்து கூறினேன். ஆனால் ஆட்டுக்குட்டியை தேசத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்வேன். ஒரு சிறிய ஆட்டுக்குட்டியை ஒரு மாபெரும் நிலத்துடன் நீங்கள் எந்த விதத்தில் ஒப்பிட முடியும்? ஆட்டுக்குட்டி என்பது என்ன? அது கிறிஸ்து என்று நீங்கள் கூற வேண்டும். ஆனால், அது ஒரு சிறிய கிறிஸ்து என்று நான் உங்களுக்குக் கூறுவேன். தம் மக்களைக் குறித்து, தேவனின் இலக்கு அது அல்ல. “நல்லது, உங்களிடம் ஆட்டுக்குட்டி இருக்கும் வரை, அது போதுமானது” என்று தேவன் அவர்களுக்கு ஒருபோதும் கூறவில்லை. இல்லை. அவர்களை தேசத்திற்குள் கொண்டு வருவதே தாம் அவர்களுக்கு ஆட்டுக்குட்டியைக் கொடுத்ததற்கான காரணம் என்பதே இதிலிருந்து தேவன் அவர்களுக்குக் கூறியது. பஸ்கா என்பது தேசத்திற்காக இருந்தது.

உங்களிடம் கிறிஸ்து இருக்கிறாரா? ஆம், உங்களிடம் கிறிஸ்து இருக்கிறார். ஆனால், உங்களிடம் எப்படிப்பட்ட கிறிஸ்து இருக்கிறார், ஆட்டுக்குட்டியா அல்லது தேசமா? எகிப்திலே அந்தப் பஸ்காவின் நாளில் இஸ்ரயேல் மக்கள் எல்லாரிடமும் ஆட்டுக்குட்டி இருந்தது, ஆனால், சொல்வதற்கு வருந்துகிறேன், மிகச் சிலரே தேசத்திற்குள் நுழைந்தனர். அந்தத் தேசத்தை வெகு சிலரே உடைமையாக்கிக் கொண்டனர்.

நான் இரட்சிக்கப்பட்டு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரயேல் மக்கள் வனாந்தரத்தில் அனுபவித்துமகிழ்ந்த அந்த மன்னாவும் கூட, கிறிஸ்துவின் மாதிரி என்று போதிக்கப்பட்டேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். “கர்த்தாவே, நீரே என் உணவு; நீர் எனக்கு ஆட்டுக்குட்டி மட்டுமல்ல, என் அனுதின மன்னாவும்கூட” என்று நான் கூறினேன். ஆனால், நான் உங்களிடம் கேட்கிறேன், அந்த மன்னாவா தேவனுடைய குறிக்கோள், அதுவா இலக்கு? வனாந்தரத்தில் மன்னாவை அனுபவித்து மகிழத்தான் தேவன் தம் மக்களை எகிப்திலிருந்து விடுவித்தாரா? இல்லை. தேசமே குறிக்கோள்; தேசமே இலக்கு. நீங்கள் கிறிஸ்துவைத் தேசமாக அனுபவித்துமகிழ்கிறீர்களா? அதில் எனக்குச் சந்தேகம்தான், உங்களுக்கும் அது சந்தேகம்தான் என்று துணிந்து சொல்கிறேன். ஆட்டுக்குட்டியை உங்கள் பஸ்காவாக, கர்த்தரை உங்கள் அனுதின மன்னாவாக அனுபவித்து மகிழ்வதாக நீங்கள் கூறக் கூடும், ஆனால், தாங்கள் சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்துவைத் தேசமாக அனுபவித்துமகிழ்வதாக வெகு சிலர் மட்டுமே நிஜமாகக் கூற முடியும்.

கிறிஸ்து பூமியாக இருத்தல்,
கிறிஸ்து மண்ணாக இருத்தல்,
நாம் கிறிஸ்துவில் வேரூன்றி இருத்தல்

நாம் கிறிஸ்துவில் வேரூன்றியிருக்கிறோம் என்று கொலோசெயர் 2இல் வார்த்தை நமக்குச் சொல்கிறது (வ. 7). இப்போது நான் உங்களை இதைப் பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்: நாம் கிறிஸ்துவில் வேரூன்றியிருக்கிறோம் என்றால், நமக்குக் கிறிஸ்து என்னவாக இருக்கிறார்? ஆம், கிறிஸ்துவே பூமி; கிறிஸ்துவே மண். ஒரு செடி அல்லது ஒரு மரம் மண்ணில், நிலத்தில் வேரூன்றி இருக்கிறது. அவ்வாறே, நாமும் கிறிஸ்துவில் ‍வேரூன்றி இருக்கிறோம். கிறிஸ்துவே உங்களுக்கு அந்த மண், அந்த நிலம் என்பதை நீங்கள் ஒருபோதும் உணரவில்லையோ என்று நான் அஞ்சுகிறேன். நீங்கள் இந்த நிலத்தில் வேரூன்றியிருக்கும் ஒரு சிறிய செடி, இந்த நிலம் சாட்சாத்து கிறிஸ்துவே. ஒரு காரியத்தை நான் அறிக்கையிட்டாக வேண்டும், ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குமுன், என்னிடம் இப்படிப்பட்ட ஓர் எண்ணம் இருந்ததே இல்லை. நான் வேதவாக்கியங்களை வாசித்தேன், கொலொசெயர் புத்தகத்தில் அதிக நேரம் செலவிட்டேன். நான் அதை மீண்டும் மீண்டும் வாசித்தேன், ஆனால், ஒருபோதும் இந்த வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்து மண்ணாக, என் நிலமாகவே இருக்கிறார் என்று எனக்கு ஒருபோதும் ‍தெரியாது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தான், என் கண்கள் திறக்கப்பட்டன.

நாம் நடக்கக்கூடிய ஒரு நிலமாகக்
கிறிஸ்து இருத்தல்

கர்த்தருடைய பிள்ளைகளில் பெரும்பாலானோர், இன்னும் எகிப்திலேயே தங்கியிருக்கின்றனர் என்று நான் ஆழமாக உணர்கிறேன். அவர்கள் பஸ்காவை மட்டுமே அனுபவித்திருக்கின்றனர்; அவர்கள் கர்த்தரை ஆட்டுக்குட்டியாக மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆட்டுக் குட்டியால் இரட்சிக்கப்பட்டிருக்கின்றனர், ஆனால், அவர்கள் உலகத்திலிருந்து விடுவிக்கப்பட்டவில்லை. ஆம், சிலர் எகிப்தைவிட்டு வெளியே வந்துவிட்டனர், சிலர் உலகத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர், ஆனால், அவர்கள் இன்னும் வனாந்தரத்தில் அலைந்துதிரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் கிறிஸ்துவை இன்னும் சிறிது அதிகம் அனுபவித்து மகிழ்கின்றனர்; அவர்கள் அவரைத் தங்கள் அனுதின மன்னாவாக அனுபவித்து மகிழ்கின்றனர். தாங்கள் கிறிஸ்துவைத் தங்கள் உணவாக அனுபவித்துமகிழ்வதாக அவர்கள் பெருமைப் பாராட்ட முடிகிறது, அவர்கள் மிகவும் திருப்தியாக இருக்கின்றனர். ஆனால், சகோதர சகோதரிகளே, இது போதுமானதா? கிறிஸ்துவைத் தங்கள் அனுதின மன்னாவாக அனுபவித்து மகிழ்பவர்களை நாம் பார்க்கும்போது, நாம் மிக சந்தோஷமடைகிறோம் என்று நான் நினைக்கிறேன். “கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாள்தோறும் கர்த்தரைத் தங்கள் மன்னாவாக நிஜமாகவே அனுபவித்து மகிழும் சில சகோதர சகோதரிகள் இங்கு இருக்கின்றனர்” என்று நாம் கூறுகிறோம். ஆனால், இது தேவனுடைய குறிக்கோளிலிருந்து மிகவும் குறைவுபடுகிறது என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். நாம் கிறிஸ்துவை சிறிதளவு மட்டும் அனுபவித்துமகிழ்வதல்ல, மாறாக அவர் நமக்கு சகலத்தையும்உள்ளடக்கியவராக இருக்க வேண்டும் என்பதே தேவனின் குறிக்கோள். இந்த வசனத்தைக் கவனியுங்கள்: “ஆகையால், நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபடியே… அவருக்குள் நடந்துகொண்டு” (வ. 6). அவர் நாம் நடப்பதற்கான ஒரு கோளமாக, மண்டலமாக இருக்கிறார். அவர் ஏதோ உணவோ தண்ணீரோ மட்டுமல்ல, அவர் நாம் நடக்கக் கூடிய ஒரு மண்டலம், ஒரு நிலம். நாம் அவரில் நடக்க வேண்டும். அவரே நம் நிலம்; அவரே நம் பூமி; அவரே நம் இராஜ்ஜியம். அவரில் நடப்பீர்களாக. (சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்து, பக். 7-8, 13-14)

கிறிஸ்துவின் சகலத்தையும்-உள்ளடக்கிய மாதிரி

இந்த நிலம் கிறிஸ்துவின் முழுமையான மாதிரி, சகலத்தையும்-உள்ளடக்கிய மாதிரி. பழைய ஏற்பாட்டில் பல மாதிரிகள் உள்ளன என்பதை நாம் அறிந்திருக்கிறோம். பஸ்கா ஆட்டுக்குட்டி கிறிஸ்துவின் மாதிரி என்பது நமக்குத் தெரியும்; மன்னா கிறிஸ்துவின் மாதிரி என்பதும் நமக்குத் தெரியும். வாசஸ்தலமும்கூட, அதன் அறைக்கலன்கள், உபகரணங்கள், மற்றும் பல்வேறு பலிகளோடு கிறிஸ்துவின் மாதிரியாக இருக்கிறது. ஆனால், இந்தத் துண்டு நிலம் இல்லாமல், கிறிஸ்துவின் சகலத்தையும்-உள்ளடக்கிய மாதிரி இல்லை என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். பஸ்கா ஆட்டுக்குட்டியோ, மன்னாவோ, கூடாரமும் அதனோடு தொடர்புடைய எல்லாக் காரியங்களோகூட சகலத்தையும்-உள்ளடக்கிய மாதிரி அல்ல. பல்வேறு வகையான பலிகள் கர்த்தரால் நியமிக்கப்பட்டன, ஆனால், அவை கிறிஸ்துவின் வெவ்வேறு அம்சங்களை மட்டுமே சித்தரிக்கின்றன. கானான் தேசம் மட்டுமே, கிறிஸ்துவின் முழு மாதிரி, சகலத்தையும் உள்ளடக்கிய மாதிரி. நாமெல்லாரும் கிறிஸ்துவை நம் மீட்பராக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அது மிகவும் அற்புதம். ஆனால், கிறிஸ்து மீட்பராக சகலத்தையும் உள்ளடக்கியவர் அல்ல என்பதை நாம் உணர வேண்டும். கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாக இருக்கிறார் என்றும், கிறிஸ்து சகலத்தையும்-உள்ளடக்கியவர் என்றும் வேதத்தில் நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. எல்லாம் அவரில் இருக்கிறது, அவர் எல்லாவற்றிலும் இருக்கிறார். பழைய ஏற்பாட்டில், கானான் தேசத்தைத் தவிர வேறேந்த மாதிரியும் அவரை இப்படிப்பட்டவராகக் காட்டவில்லை. (சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்து, பக். 19-20)

References: சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்து, அதி. 1, 2; Life-study of Deuteronomy, msg. 5

என் இரட்சகரின் செல்வங்கள்
கிறிஸ்துவை அனுபவித்தல்—
அவரது செல்வங்கள்

542
1 என் இரட்சகரின் செல்வங்கள்,
ஆய்ந்தறிய முடியா!
தேவத்(து)வத்தின் நிறைவெல்லாம்,
என் அனுபவம் இன்று.

செல்வங்கள், என்னே செல்வங்கள்,
கிறிஸ்தெனக்காய் வைத்துள்ளார்!
ஆராய்ந்தறியமுடியா,
எல்லாம் எனக்கு நிஜம்!

2 என் இரட்சகரின் செல்வங்கள்,
எல்லாம் தழுவியது,
ஞானம், ஆற்றல், சுகம், தேற்றல்,
தேவன் மகிழும் வளம்.

3 தேவனின் மீட்பு, இரட்சிப்பு,
அவர் உயிர்ப்பின் ஆற்றல்,
கணந்தோறும் மேலோங்கிடும்
தூய்மை, மாட்சி ஆக்கிடும்!

4 என் இரட்சகரின் செல்வங்கள்,
எல்லாமான தேவனே!
அவர் நபர், உடைமையில்,
என் ஆவி மயங்குதே!

5 என் இரட்சகரின் செல்வங்கள்!
அதின் அகலம், நீளம்,
உயரம், ஆழம், அறியேன்,
ஆயினும் அதென் பலம்.

6 எல்லையில்லா செல்வங்களால்,
கிறிஸ்துவை நான் அறிவேன்;
வரம்பில்லா செல்வங்களைப்
பிறரோடு பகிர்வேன்.

 

Jump to section