மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

Jump to section

பாடம் ஒன்று – பதனிடப்பட்ட மூவொரு தேவன்

1 கொரி. 15:45—கடைசி ஆதாம் ஜீவன்-தரும் ஆவியானார்.

மத். 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து.

தேவன் ஒருவராக இருத்தல்

தேவன் ஒப்பற்ற ரீதியில் ஒருவரே என்று வேதவாக்கியங்கள் பல சம்பவங்களிலும், பல வழிகளிலும் கூறுகின்றன. தேவன் ஒருவரே என்று நமக்குத் திட்டமும் தெளிவுமாகக் கூறுகின்ற பல பகுதிகள் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு இரண்டிலுமே உள்ளன. 1 கொரிந்தியர் 8:4, “ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லை” என்று கூறுகிறது, ஏசாயா 45:5, “நானே கர்த்தர், வேறொருவரில்லை; / என்னைத்தவிர தேவன் இல்லை” என்று கூறுகிறது. இதே போன்ற வார்த்தைகளை ஏசாயா 45:6, 21-22; 46:9; 44:6, 8 ஆகிய பகுதிகளிலும் காணலாம்.

தேவனுக்கு மூன்று என்ற அம்சம் இருத்தல்—பிதா, குமாரன் மற்றும் ஆவியானவர்

“பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” என்று மத்தேயு 28:19இல் கர்த்தர் கூறுகிறார். இங்கு கர்த்தர் மூன்று என்ற அம்சத்தைக் குறித்து தெளிவாகப் பேசுகிறார்—பிதா, குமாரன், ஆவியானவர். ஆனால், பிதா, குமாரன், ஆவியானவரின் நாமத்தைக் குறித்து அவர் இங்கு பேசும்போது, இங்கு பயன்படுத்தப்படும் நாமம், மூல படிவத்தில் ஒருமையில் இருக்கிறது. பிதா, குமாரன், ஆவியானவர் மூன்று பேர் என்றாலும், நாமம் ஒன்றுதான் என்பதே இதன் அர்த்தம்.

பிதா, குமாரன், ஆவியானவர் நித்தியத்திலிருந்து நித்தியம் வரை, ஒரே சமயத்தில் உடனிருத்தல்

பிதா, குமாரன், ஆவியானவர் அனைவரும் நித்தியமாயிருத்தல்

மூவரும்—பிதா, குமாரன், மற்றும் ஆவியானவர்—நித்தியமானவர்கள் என்பதை ஏசாயா 9:6, எபிரெயர் 1:12, மற்றும் 9:14இல் நாம் காணலாம்.

பிதா, குமாரன், ஆவியானவர்
ஒரே சமயத்தில் உடனிருத்தல்

“நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்கு சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” என்று யோவான் 14:16-17 கூறுகிறது. பிதா ஆவியானவரை அனுப்புமாறு தாம் பிதாவிடம் ஜெபிக்கப்போவதாக குமாரன் இந்த இரண்டு வசனங்களில் கூறுகிறார். ஆகவே, பிதா, குமாரன், ஆவியானவர் ஒரே சமயத்தில் ஒன்றாக இருக்கின்றனர்.

பிதா, குமாரன், ஆவியானவர் ஒருவருவக்குள் ஒருவர் இருத்தலும், பிரிக்க முடியாதவர்களாக இருத்தலும்

“நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறார்” என்று யோவான் 14:10 கூறுகிறது. பிதா புறம்பான விதத்தில் குமாரனோடு வருவதில்லை, மாறாக, அவர் குமாரனில் வருகிறார் என்று இது சுட்டிக்காட்டுகிறது. மேலும் யோவான் 8:29, “என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார்…அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை” என்று கூறுகிறது. லூக்கா 4:1ம்கூட, “இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய்” என்று கூறுகிறது. குமாரன் பூமியில் வாழ்கிறபோது, பிதா ஆவியானவர் ஆகிய இருவரும் அவரோடு இருக்கின்றனர் என்று இந்த வசனங்கள் நிரூபிக்கின்றன; இந்த மூவரும் பிரிக்கமுடியாதவர்கள்.

இந்த மூவரும்—பிதா, குமாரன், ஆவியானவர்—ஒன்றாயிருத்தல்
குமாரன் பிதாவாக இருத்தல்

ஏசாயா 9:6,”நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; / நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; / …அவர் நாமம்/ …வல்லமையுள்ள தேவன், / நித்திய பிதா”… என்று கூறுகிறது. ஆம், அவர் ஒரு பாலகன், எனினும் அவர் வல்லமையுள்ள தேவன்…குமாரன் நித்திய பிதாவாக இருக்கிறார்.

குமாரன் (கடைசி ஆதாம்)
ஜீவன்-தரும் ஆவியாக ஆகுதல்

“கடைசி ஆதாம் ஜீவன்-தரும் ஆவியானார்” என்று 1 கொரிந்தியர் 15:45 கூறுகிறது. நிச்சயமாக, கடைசி ஆதாம் மாம்சமான கர்த்தராகிய இய‍ேசுவே; நிச்சயமாக ஜீவன்-தரும் ஆவி பரிசுத்த ஆவியே. பரிசுத்த ஆவி அல்லாத வேறொரு ஜீவன்-தரும் ஆவி இருக்கவே முடியாது. ஆகவே, கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியாக உள்ளார் என்றும் இந்த வசனம் தெளிவாகக் கூறுகிறது.

கர்த்தர் (குமாரன்) ஆவியானவராக இருத்தல்

“கர்த்தரே ஆவியானவர்” என்று இரண்டு கொரிந்தியர் 3:17 கூறுகிறது. இங்கு பேசப்பட்டிருக்கும் “கர்த்தர்”, நிச்சயமாக கர்த்தராகிய இயேசுவே, அதோடு, ஆவியானவர் நிச்சயமாக பரிசுத்த ஆவியே. நம் கர்த்தர் பரிசுத்த ஆவியாக இருக்கிறார். அவர் பிதாவாக இருக்கிறார், அவர் ஆவியானவராகவும் இருக்கிறார். அவர் எல்லாமுமாக இருக்கிறார்! (Truth Lessons—Level One, vol. 1, pp. 16-21)

ஜீவன்-தரும் ஆவியாக ஆவதில்
மூவொரு தேவனின் படிகள்

ஜீவன்-தரும் ஆவியாக இருக்கப் பதனிடப்படுவதில், மூவொரு தேவன் பல்வேறு முக்கியப் படிகளை எடுத்தார். முதலில், அவர் மாம்சமானார். தேவனாக, அவர் மனித கன்னிகையின் கருவறைக்குள் நுழைந்தார், ஒன்பது மாதங்கள் அந்தக் கருவறைக்குள் தங்கினார். இவ்வாறு, அவர் மனுஷீகத்தைத் தம் தங்குமிடமாக, தம் குடியிருப்பாக எடுத்துக்கொண்டார். நிச்சயமாக, அவரது மாம்சமாகுதல் ஒரு வழிமுறைதான். இரண்டாவது, அவர் பூமியிலே வாழ்ந்து, நடந்து, முப்பத்து மூன்றரை ஆண்டுகள் மனித வாழ்க்கை என்னும் நீண்ட “சுரங்கப்பாதையினூடாக” கடந்துசென்றார். இதுவும்கூட ஒரு வழிமுறைதான். மூன்றாவதாக, அவர் மரணத்திற்குள் நுழைந்து மரணத்தினூடாகக் கடந்துசென்றார், இதில் கல்லறையும் பாதாளமும்கூட சம்பந்தப்பட்டுள்ளது. நான்காவதாக, மூன்று நாட்களுக்குப் பின்னர், அவர் மரணம் மற்றும் பாதாளத்தைவிட்டு வெளியே நடந்து வந்து, உயிர்த்தெழுதலுக்குள் பிரவேசித்தார். அவரது மரணமும் உயிர்த்தெழுதலும்கூட ஒரு வழிமுறைதான். அவரது மரணத்திற்குப் பிறகும் உயிர்த்தெழுதலிலும், அவர் தம் சீஷர்களைச் சந்திக்க வந்தார் (யோ. 20:19, லூக். 24:36).

கர்த்தரின் உயிர்த்தெழுதலுக்குப்பிறகு, அவர் சீஷர்களோடு நாற்பது நாட்கள் தங்கினார் (அப். 1:3), அந்த நாட்களில் அவர் தம் பிரசன்னத்தை அவர்களுக்குக் காண்பிப்பதும் மறைப்பதுமாக இருந்தார். பின்னர், அவர் அவர்களை எருசலேமுக்கு நடத்தி, ஒலிவ மலையிலிருந்து மூன்றாம் வானத்திற்கு பரமேறினார் (வவ. 12, 9). அவரது பரமேறுதல்மூலம், கர்த்தராகிய இயேசு தம் வழிமுறையை முழுமையாக்கினார். அவரது பரமேறுதல் மூவொரு தேவனின் முழுநிறைவேற்றத்தில் கடைசி படியாக இருந்தது. மூன்று பேரும்—பிதா, குமாரன், ஆவியானவர்—கர்த்தரின் பரமேறுதலில் முழுவதும் முழுநிறைவேற்றமடைந்தனர்.

முழுநிறைவேற்றம் என்பது ஒரு வழிமுறை முழுமையடைந்துவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டுதல்

முழுநிறைவேற்றம் என்ற வார்த்தை, ஒரு வேலை அல்லது ஒரு வழிமுறை முழுமையடைந்து விட்டது அல்லது முடிந்துவிட்டது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இதை விளக்க சமையலை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தலாம். சமையல் என்ற வழிமுறை தொடங்கும் முன், எல்லா மளிகை பொருட்களும் வேகாமல் பச்சையாக இருக்கின்றன. இரண்டு மணிநேரம் சமைத்த பிறகு, அதே மளிகை பொருட்கள் ஒரு விருந்தாக முழுநிறைவடைகின்றன. தம் மாம்சமாகுதலுக்குமுன் தேவன் “வேகாமல் பச்சையாக” இருந்தார், அதாவது, மனுஷீக சுபாவம் இல்லாமல், தெய்வீக சுபாவம் உடையவராக இருந்தார். மாம்சமாகுதல், மனித வாழ்க்கை, சிலுவைமரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் ஆகியவற்றின்மூலம், தேவன் பதனிடப்பட்டு முழுநிறைவடைந்தார். இப்போது, அவர் இனியும் “வேகாத பச்சை” தேவன் அல்ல; அவர் தெய்வீகம், மனுஷீகம், மனித வாழ்க்கை, சகலத்தையும்-உள்ளடக்கிய மரணம், உயிர்த்தெழுதலின் வல்லமை, விஞ்சும் பரமேறுதல் ஆகியவற்றை உடைய முழுநிறைவடைந்த, முழுமையடைந்த மூவொரு தேவன். இந்த எல்லா மூலக்கூறுகளும் அல்லது மூலப்பொருட்களும் பதனிடப்பட்டு முழுநிறைவடைந்த மூவொரு தேவனில் உள்ளன.

கூட்டு ஆவியானவர் முழுநிறைவடைந்த மூவொரு தேவனாக இருத்தல்

மாம்சமாகுதல், சிலுவைமரணம், உயிர்த்தெழுதல் ஆகிய படிகள் மூலம், மூவொரு தேவன் கூட்டு, சகலத்தையும்-உள்ளடக்கிய, உள்வசிக்கும் ஆவியாயிருக்க முழுநிறைவடைந்திருக்கிறார் (யாத். 30:25). இந்த ஆவியானவர் பதனிடப்பட்டு, முழுநிறைவடைந்த மூவொரு தேவனே. யாத்திராகமம் 30இல் ஒரு தைலம் தயாரிக்கப்பட்டது, இந்தத் தைலம் கூட்டுத் தைலம் என்று அழைக்கப்பட்டது, காரணம், அது நான்கு வெவ்வேறு சுகந்தவர்கங்களை எண்ணையோடு கூட்டிணைத்துத் தயாரிக்கப்பட்டது (வவ. 22-25). இந்தக் கூட்டுத் தைலம் கிறிஸ்துவின் மனுஷீகம், சகலத்தையும்-உள்ளடக்கிய மரணம், கிறிஸ்துவின் எல்லாம்-வல்ல உயிர்த்தெழுதல், கிறிஸ்துவின் விஞ்சும் பரமேறுதல் ஆகியவற்றைத் தம்மோடு கூட்டியிணைக்கப்பெற்ற மூவொரு தேவன் என்ற கூட்டு ஆவியின் மாதிரியாகும். இந்தக் கூட்டு ஆவி முழுநிறைவடைந்த மூவொரு தேவனே. (CWWL, 1990, vol. 1, “The Triune God to Be Life to the Tripartite Man,” pp. 266-267, 269)

References: Truth Lessons—Level One, vol. 1, lsn. 2; CWWL, 1990, vol. 1, “The Triune God to Be Life to the Tripartite Man,” ch. 5

மறைபொருளே, பிதா, சுதன், ஆவி
தேவனை அனுபவித்தல்—திரியேகத்துவத்தால்

608
1 மறைபொருளே, பிதா, சுதன், ஆவி,
நபரில் மூன்று, சாரத்தில் ஒன்று.
தேவன் குமாரனில் ஆவியாய் நம்முள்
வந்தார் நமக்கெல்லாமாய்! மகிமை!
திரியேகர் நமக்கெல்லாமாயினார்
அற்புதமே, ஆச்சர்யமே!
தீராதென்றும் இத்தெய்வீகக் கொடை
மகிமையே, மாமேன்மையே.

2 என்னே செழிப்பான ஊற்று நம் தந்தை.
வற்றா அவர் செல்வங்கள் நம் பங்கு!
என்றும் இன்புற்று நாம் துய்த்திட வேண்டும்
என்பதவர் வாஞ்சை—என்னே பாக்யம்!

3 பிதாவின் வெளிப்பாடான குமாரன்,
மாந்தரிடை வந்தார் மாம்சத்திலே!
மீட்பின் பணி பூரணமாய் முடித்தார்,
பாவிகள் நாம் தேவனோடொன்றானோம்.

4 குமாரன் உருமாறி ஆவியானார்
நம்முள் வந்தார் ஜீவ நிரப்பீடாய்,
நம் ஆவி ஆவியானவரோடொன்றாய்
கலந்திணைதல் என்னே ஆச்சரியம்!

5 தேவனை நாளும் தொட்டனுபவிக்க
தேவன் இன்று ஆவியாக உள்ளார்!
தேவனோடு நாம் ஒரே ஆவியானோம்,
ஜீவனில் வேற்றுமையேதும் இல்லை!

 

Jump to section