மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

Jump to section

பாடம் பதினாறு – காலை புத்துயிருக்கான பரிசுத்த வார்த்தை

2 கொரி. 4:16—ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.

எபே. 6:17-18—தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தை… 18எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி எடுத்துக்கொள்ளுங்கள்.

1 கொரி 14:4, 26—தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபையைக் கட்டியெழுப்புகிறான். 26சகோதரர்களே, அப்படியென்றால் என்ன? ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நிய பாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான்? சகலமும் கட்டியெழுப்புதலுக்காகச் செய்யப்படக்கடவது.

புத்துயிரடையவும், தீர்க்கத்தரிசனமுரைக்கவும் பிரயாசப்படுதல்

ஒவ்வொரு நாள் காலையிலும்
புத்துயிரடைந்து, புதிதாக்கப்படுதல்

இன்று நம் இரட்சிப்பு மறுஜென்ம முழுக்கின் மூலமும் பரிசுத்த ஆவியின் புதிதாக்குதலின் மூலமும் நடைபெறுகிறது என்று தீத்து 3இல் பவுல் கூறுகிறான் (வ. 5). இங்குள்ள இரட்சிப்பு…எல்லா வகையான கஷ்டங்கள், சோதனைகள், சிக்கல்கள், எல்லா பலவீனம், விரக்தி, இச்சை ஆகியவற்றிலிருந்து தினமும் விடுவிக்கப்படுகிற அனுதின இரட்சிப்பாகும். நமக்கு இரட்சிப்பு தினம் தினம் தேவை. ஒவ்வொரு நாளும் நாம் கர்த்தரால் இரட்சிக்கப்பட வேண்டும். இந்த இரட்சிப்பு, முதலில் மறுஜென்ம முழுக்கின் மூலமும், பின்னர், பரிசுத்த ஆவியின் புதிதாக்குதல் மூலமும் நிகழ்கிறது.

பரிசுத்த ஆவி உள்ளாக நம்மைக் கழுவும்போது, அது புதுப்பித்தலை நடப்பிக்கிறது. இதுவே அதிகாலையில் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கான முதல் பாடம். நானே இவ்விதமாகத்தான் பயிற்சி செய்கிறேன். காலையில் நான் எழுந்திருக்கும்போது…நான் தேவனை நோக்கி என் வாயைத் திறக்கும் முன்பாக எந்தவொரு மனிதனை நோக்கியும் என் வாயைத் திறக்கமாட்டேன். “கர்த்தாவே, நான் உம்மை நேசிக்கிறேன்! கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மிடம் வருகிறேன்!” என்று கூறுவேன். ஒவ்வொரு நாள் காலையிலும், நான் செய்வதெல்லாம் இரண்டு காரியங்கள்தான்: கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுவதும் அவரது வார்த்தையை ஜெப-வாசிப்பு செய்வதுமே. இந்த இரண்டும் ஒரு கிறிஸ்தவனுக்கான காலை நேரப் பயிற்சிகளாகும். ஒவ்வொரு நாள் காலையிலும் நீங்கள் இந்த இரண்டு காரியங்களையும் பயிற்சி செய்தால், நீங்கள் நிச்சயமாக புத்துயிரடைவீர்கள். நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கும் உதயகால வெளிச்சத்தைக் கொண்ட உதிக்கும் சூரியனாக ஆவீர்கள்.

கிறிஸ்தவர்களாகிய நாம் உலகத்திலுள்ள மக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதை உங்களுக்குக் காண்பிக்க இவற்றையெல்லாம் கூறியிருக்கிறேன். உலகப்பிரகாரமான மக்கள் காலையில் அதிகபட்சம் தியானம் செய்கின்றனர், அல்லது சிந்திக்கின்றனர். ஆனால், நாம் செய்வது தியானம் அல்ல. நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறோம், அவரது வார்த்தையை ஜெப-வாசிப்பு செய்கிறோம். இது கர்த்தரைக் கொண்டு நம்மை நிரப்புகிறது, உள்ளிலிருந்து நம்மைப் புத்துணர்வூட்டுகிறது. அதே நேரத்தில், நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது, பரிசுத்த ஆவி வருகிறார், காரணம், இன்று கர்த்தராகிய இயேசுவே பரிசுத்த ஆவி. நாம் ஒவ்வொரு நாள் காலையிலும் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது, கர்த்தராகிய இயேசு வந்திருக்கிறார் என்று உள்ளாக ஓர் ஆழமான உணர்ந்தறிதல் ஏற்படுகிறது. நாம் உண்மையில் அவரைக் கண்டுகொண்டோம். இறுதியில், நம் முழு நபரும் மாற்றப்படும். புத்துயிரடைதல் என்பதன் அர்த்தம் இதுவே.

இந்தப் புத்துயிரடைதல் நாம் நம்மை தினமும் கழுவுவது போன்றதாகும்; ஒருவன் இதை ஒரே முறையாக செய்துமுடித்துவிடுவதில்லை. ஒரு தினசரி கழுவுதல் இருந்தாக வேண்டும். இயற்கை விதியின்படி, சூரியன் இருபத்து நான்கு மணி நேரத்தற்கு ஒரு முறை உதிக்கிறது. நாம் சூரியனுடன் நகரும்போது, இருபத்து நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை நாமும் உதிக்க வேண்டும். மேலும், சூரியன் தன் வல்லமையில் பிரகாசிக்கும் விதமாக நாமும் பிரகாசமாக இருக்க வேண்டும். நாம் ஆவிக்குரியரீதியில் இதைப்போல இருந்தால், நிச்சயமாக ஒவ்வொரு நாளும் நாம் ஒரு புதுப்பிக்கப்பட்ட வாழ்க்கை வாழுவோம். பவுலின் வார்த்தைகளின்படி, நம் உள்ளான மனிதன் நாள்தோறும் புதுப்பிக்கப்படும் (2 கொரி. 4:16). உள்ளான மனிதன் என்பது நமக்குள் உள்ள நம் மறுபடிஜெநிப்பிக்கபட்ட ஆவியை அடையாளப்படுத்துகிறது. உள்ளான பகுதிகள் யாவற்றோடும்கூட இந்த ஆவி, உயிர்த்தெழுந்த ஜீவனின் நிரப்பீட்டின்மூலம் நிகழும் அனுதின வளர்ச்சிதைமாற்றத்தால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. (CWWL, 1989, vol. 1, “The Organic Practice of the New Way,” pp. 521-523)

பிரகாசித்தலைப் பெற்றுக்கொள்வதும்
சபை கூடுகைக்காக தீர்க்கத்தரிசனம் உரைப்பதும்

கடந்த சில ஆண்டுகளில், காலை புத்துயிரடைதலுக்காக வார்தையின் ஒரு பகுதியை எவ்வாறு பயன்படுத்துவது என்று ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறோம். காலை புத்துயிருக்கான பரிசுத்த வார்த்தையிலிருந்து சில பகுதிகளை ஜெப வாசிப்பு செய்வதையும் வாசிப்பதையும் நடைமுறைப்படுத்துதல், பல பரிசுத்தவான்களுக்கு மாபெரும் உதவியாக இருந்திருக்கிறது. அவர்கள் காலை புத்துயிருக்கான பரிசுத்த வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்ததுமுதல், அவர்களது ஆவிகள் கிளர்ந்தெழுப்பப்பட்டிருக்கின்றன, அவர்களது எண்ணங்கள் தூண்டப்பட்டிருக்கின்றன, இப்போது அவர்கள் புசித்து, ஜீரணித்து, வேறு வார்த்தைகளில் கூறி, ஜெபவாசிப்பு செய்வதற்கு சில காரியங்களோடு அவர்கள் பேசுவதற்கு ஒரு கருப்பொருள் இருக்கிறது.

வேதத்தை வாசிப்பதில் மிக உதவிகரமான வழி, அதை வேறு வார்த்தைகளில் பேசுதலே. சங்கீதம் 119:105ஆம் வசனம், “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” என்று கூறுகிறது, அதே சங்கீதத்தின் 130ஆம் வசனம், “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து” என்று கூறுகிறது. வார்த்தைக்குள் நுழைந்து அதன் பிரகாசிக்கும் வெளிச்சத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி வார்த்தையை வேறு வார்த்தைகளைக் கொண்டு பேசிப் பார்த்தலே ஆகும்…இது வேதத்தைப் புரிந்துகொள்ளவும், ஒளியைப் பெறவும், தீர்க்கத்தரிசனம் உரைக்கவும் நமக்கு உதவுகிறது.

பழைய ஏற்பாட்டில், வார்த்தையைத் தியானிக்கும் பயிற்சி பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது…ஆனால் புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாட்டுக்குரிய விதத்தில் வேதவாக்கியங்களை தியானம் செய்வது குறித்து குறிப்பு இல்லை…இன்று புறம்பானரீதியில் நம் கரங்களில் வேதம் இருப்பது மட்டுமல்லாமல், நமக்குள் உள்வசிக்கும் ஆவியானவரும் இருக்கிறார். நாம் வார்த்தையை ஜெப-வாசிப்பு செய்யும்போது, நாம் நம் ஆவியை இயக்குகிறோம், அப்போது, உள்வசிக்கும் ஆவியானவர் நம் ஜெப-வாசிப்பால் கிளர்ந்தெழுப்பப்படுகிறார்…”ஆதியிலே. ஆ கர்த்தாவே, ஆதியிலே வார்த்தை இருந்தது. ஆமென். அந்த வார்த்தை. அல்லேலூயா வார்த்தை!” என்று நாம் சொல்லும்போது, இது நம் ஆவியைக் கிளர்ந்தெழுப்புகிறது. அப்போது, உள்வசிக்கும் ஆவியானவர் நமக்குள் துள்ளியெழுகிறார், அப்போது அகத்தூண்டுதல் ஏற்படுகிறது. நாம் பெறும் அகத்தூண்டுதல்களை எழுதி வைத்துக்கொள்ள ஒரு சிறிய குறிப்பேட்டை வைத்துக்கொள்வது எப்போதும் நல்லது. ஓர் அகத்தூண்டுதலைப் பெற்றுக்கொண்ட உடனேயே நாம் ஏதோவொன்றை எழுதி வைக்க வேண்டும், நிறைய எழுத நேரம் இல்லாதபோது, ஒரு நினைவுபடுத்துதலாக ஒரே ஒரு முக்கியமான வார்த்தையை மட்டுமே கூட எழுதிவைத்துக்கொள்ளலாம். அதன்பிறகு, நாம் தீர்க்கத்தரிசனம் உரைப்பதைப் பயிற்சி செய்ய, நாம் பெற்றுக்கொண்ட அகத்தூண்டுதலிலிருந்து மூன்று நிமிடங்களுக்கு மிகாத ஒரு தீர்க்கத்தரிசனத்தைத் தொகுப்பது நல்லது. நம் தீர்க்கதரிசனம் மூன்று நிமிடங்களுக்கு மேலாக நீடித்தால், நாம் அதைச் சுருக்கிக்கொள்ளலாம். அது மிக சுருக்கமாக இருந்தால், நாம் ஏதோவொன்றைச் சேர்த்துக்கொள்ளலாம். பயிற்சிசெய்யவும் கற்றுக்கொள்ளவும் நாம் மற்ற பரிசுத்தவான்களோடு சேர்ந்து வேலைசெய்யலாம்.

நாம் தீர்க்கதரிசனம் உரைப்பதற்காக எழுதி வைத்துள்ள செய்திகளை ஜெபிப்பதன் மூலமும் நாம் பயிற்சிசெய்ய வேண்டும். நாம் தீர்க்கதரிசனம் உரைப்பதற்காக ஒரு செய்தியை எழுதிய பிறகு, நாம் எழுதியதை ‍ஜெப-வாசிப்பு செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம், அது நம் ஆள்தத்துவத்தின் கட்டமைப்பாக மாறும். பிறகு நாம் கூடுகைக்குச் சென்று தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தீர்க்கதரிசனம் மிக நன்மையானதாக இருக்கும் என்ற உறுதி எனக்கு இருக்கிறது.

இறுதியாக, நாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் படி, ஆவியானவரின் உள்நிரப்புதலையும் உன்னதத்திலிருந்து வரும் வல்லமையாக ஆவியானவரின் வெளியூற்றுதலையும் நாமெல்லாரும் நாட வேண்டும் (அப். 6:10, 7:55, 4:31). இதற்காக நாம் ஜெபிக்க வேண்டும். நாம் கூடுகைகளில் இருக்கும்போது கூட, ஒருபக்கம், நாம் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கிறோம், மறுபக்கம், ஆவியானவரைக் கொண்டு நாம் நிரப்பப்படவும், நம் வல்லமை மற்றும் அதிகாரமாக இருக்க ஆவியின் வெளிஊற்றுதலைப் பெறவும் ஜெபிக்க வேண்டும். (CWWL, 1991-1992, vol. 2, “The Practice of the Church Life according to the God-ordained Way,” pp. 603-606)

References: CWWL, 1989, vol. 1, “The Organic Practice of the New Way,” ch. 4; CWWL, 1991-1992, vol. 2, “The Practice of the Church Life according to the Godordained Way,” ch. 9; A Time with the Lord; Pray-reading the Word

கர்த்தா உம் பிரசன்னம் வாழ ஏங்குவேன்
ஏக்கங்கள்—கர்த்தரின் பிரசன்னத்தில் வாழ்வதற்காக
389

1 கர்த்தா உம் பிரசன்னம் வாழ ஏங்குவேன்,
காலை முதல் மாலை என் உலகம் நீர்;
என் உள்ளத்தில் ஓய்வோ த்ருப்தியோ வேண்டாம்
நீரில்லா எதையும் நான் நேசிக்கையில்.
கணமும் தினமும், துன்ப வலியில்,
லோகம் ஆறுதல் தர முடியாதே
ஏக்கம் அழுகையும் எனைச் சூழ்கையில்
என் ஏக்கம் நிறுத்தும், கண்ணீர் துடையும்.

2 நல்வாழ்வுக்கு ஏங்கி கனா காண்கையில்
வேண்டுமே என் ப்ரிய நாதா அதில் நீர்;
வேண்டாமே நானாய்த் தேர்ந்தெடுப்பதென்றும்
வேண்டாம் என்றும் நீரன்றி ஓர் மகிழ்ச்சி
நிசப்த இராவில் தனித்திருக்கையில்,
சேரும் என்னண்டையில் கர்த்தர் இயேசுவே;
தினம் விடியலில் என் தூக்கத்திலே
மென் குரலில் என் செவியைத் திறப்பீர்.

3 உம் தூய வார்த்தை வாசிக்கும்போதெல்லாம்
எவ்வரியிலும் உம் மாட்சி வீசட்டும்
நான் காணட்டும் என்னே இரட்சகர் என்றும்,
என்னே பெரும் இரட்சை எனதே என்றும்
கதியின்றி உம் ஆசனம் சேர்கையில்
செவிகொடுத்து உம் க்ருபை அருளும்
என் குறையால் ஜெபம் கேட்காவிடினும்
நீக்காதீர் முகமும், உம் பிரசன்னமும்.

4 பரத்தின் ஆசீர் நினைக்கும்போதெல்லாம்
என் உள்ளம் உம் அண்டை சேர ஏங்கட்டும்;
இங்கு என் நம்பிக்கை உம் வருகையே
அங்கும் என் மகிழ்ச்சி உம் பிரசன்னமே.
கர்த்தா உம் பிரசன்னம் வாழ கற்பியும்
காலை முதல் மாலை என் உலகம் நீர்;
என் உள்ளத்தில் ஓய்வோ த்ருப்தியோ வேண்டாம்
நீரில்லா எதையும் நான் நேசிக்கையில்.

Jump to section