மேய்த்துப்பேணுதல்
திரட்டு 2
இரட்சிக்கப்பட்ட பிறகு
பாடம் ஐந்து – கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுதல்
2 தீமோ. 2:22—அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.
ரோ. 10:13—ஏனெனில் “கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.”
கூப்பிடுதல் என்றால் ஒரு நபரைப் பெயர்சொல்லி சத்தமாகக் கூவியழைப்பதாகும்
நாம் கர்த்தரின் நாமத்தைக் கூப்பிடுவதின் அர்த்தம் என்னவென்பதைக் கற்க வேண்டும். கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவதும் அவரிடம் ஜெபிப்பதும் ஒன்றே என்று சில கிறிஸ்தவர்கள் நினைக்கின்றனர்…ஆம், கூப்பிடுதல் ஒருவிதமான ஜெபம்தான், காரணம், அது நம் ஜெபத்தின் ஒரு பகுதி, ஆனால் கூப்பிடுதல் வெறுமனே ஜெபித்தல் அல்ல. கூப்பிடு என்ற எபிரெய வார்த்தைக்கு, “கூவியழைத்தல்,” “நோக்கிக் கதறுதல்” அதாவது உரத்த சத்தமிடுதல் என்று அர்த்தம். கூப்பிடு என்ற கிரேக்க வார்த்தைக்கு, “ஒரு நபரை அழைத்தல்,” “ஒரு நபரைப் பெயர் சொல்லிக் கூப்பிடுதல்” என்று அர்த்தம். வேறு வார்த்தைகளில், ஒரு நபரை அவருடைய பெயரைச் சொல்லி சத்தமாகக் கூப்பிடுவதாகும். ஜெபம் அமைதியாக இருக்கலாமென்றாலும், கூப்பிடுதல் கேட்கும்படி இருந்தாக வேண்டும். [எனவே, கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுவதென்றால், “ஆ கர்த்தராகிய இயேசுவே! “என்று, கேட்கும் விதத்தில் அவரைக் கூப்பிடுவதாகும்.]
கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுதலின் குறிக்கோள்
இரட்சிக்கப்பட
நாம் ஏன் கர்த்தரின் நாமத்தைக் கூப்பிட வேண்டும்? இரட்சிக்கப்படும்படி மனிதர்கள் கர்த்தரின் நாமத்தைக் கூப்பிடவேண்டும் (ரோ. 10:13).
துயரம், பிரச்சனை, வருத்தம், வேதனை
ஆகியவற்றிலிருந்து விடுபட
துயரத்திலிருந்து (சங். 18:6; 118:5), பிரச்சனையிலிருந்து (சங். 50:15; 86:7; 81:7), வருத்தம் மற்றும் வேதனையிலிருந்து (சங். 116:3-4) விடுவிக்கப்படுவது, கர்த்தரைக் கூப்பிடுவதற்கான இன்னொரு காரணம்.
கர்த்தரின் இரக்கத்தில் பங்குபெற
சங்கீதம் 86:5, கர்த்தர் நல்லவரும், மன்னிக்கிறவரும், தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர் மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறார் என்று கூறுகிறது. நாம் கர்த்தரின் மிகுந்த இரக்கத்தில் பங்குபெறுவதற்கான வழி, அவரை நோக்கிக் கூப்பிடுவதே. நாம் எவ்வளவாய் அவரை நோக்கிக் கூப்பிடுகிறோமோ, அவ்வளவாய் அவரது இரக்கத்தை அனுபவித்துமகிழ்கிறோம்.
கர்த்தரின் இரட்சிப்பில் பங்குபெற
கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவதன் மூலம் அவரது இரட்சிப்பில் நாம் பங்குபெறலாம் என்று சங்கீதம் 116 கூறுகிறது. “இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, யெகோவாவின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுவேன்” (வ. 13, எபி.). இந்த ஒரே சங்கீதத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுதல் நான்கு முறை குறிப்பிடப்பட்டுள்ளது (வவ. 2, 4, 13, 17). இங்கு, கூப்பிடுதல் கர்த்தரின் இரட்சிப்பில் பங்குபெறும் குறிக்கோளுக்காக இருக்கிறது…கர்த்தரின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுவதே இரட்சிப்பின் கிணறுகளிலிருந்து தண்ணீர் மொண்டுகொள்வதற்கான வழி (ஏசா. 12:2-4).
ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள
கர்த்தரின் நாமத்தைக் கூப்பிடுவதற்கான மற்றொரு காரணம், ஆவியானவரைப் பெறுவதற்காகும் (அப். 2:17, 21). பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட, அதிசிறந்த அதிஎளிதான வழி, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைக் கூப்பிடுவதே. ஆவியானவர் ஏற்கெனவே பொழிந்தருளப்பட்டுவிட்டார். நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவதின் மூலம் அவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும், அவ்வளவே. நாம் இதை எந்த நேரத்திலும் செய்ய முடியும். நீங்கள் கர்த்தரின் நாமத்தைப் பலமுறை கூப்பிட்டால், நீங்கள் ஆவியானவரால் நிரப்பப்படுவீர்கள்.
திருப்திக்காக ஆவிக்குரிய தண்ணீரைப் பருகவும் ஆவிக்குரிய உணவைப் புசிக்கவும்
ஏசாயா 55:1, “ஆ! தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்” என்று கூறுகிறது. கர்த்தரைப் புசிப்பதற்கும், பருகுவதற்கும் வழி என்ன? இதே அதிகாரத்தின் 6ஆம் வசனத்தில் ஏசாயா வழியைக் கொடுக்கிறான்: “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.” எனவே, கர்த்தரைத் தேடுவதும் அவரது நாமத்தை நோக்கிக் கூப்பிடுவதுமே, நம் திருப்திக்காக ஆவிக்குரிய தண்ணீரைப் பருகுவதற்கும், ஆவிக்குரிய உணவைப் புசிப்பதற்குமான வழி.
கர்த்தரின் ஐஸ்வரியங்களை அனுபவித்துமகிழ
எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மை நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும் ஐசுவரியமானவராக இருக்கிறார் என்று ரோமர் 10:12 கூறுகிறது. கர்த்தர் ஐசுவரியமானவர், அவர் தம்மை நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும் ஐசுவரியமானவர். கர்த்தரின் ஐசுவரியங்களை அனுபவித்துமகிழ்வதற்கான வழி, அவரை நோக்கிக் கூப்பிடுவதே.
நம்மையே கிளர்ந்தெழுப்ப
கர்த்தரின் நாமத்தைக் கூப்பிடுவதன் மூலம், நாம் நம்மையே கிளர்ந்தெழுப்ப முடியும். ஏசாயா 64:7: “உமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனும், உம்மைப் பற்றிக்கொள்ளும்படிக்கு தன்னையே கிளர்ந்தெழுப்புகிறவனும் ஒருவனும் இல்லை” (எபி.) என்று கூறுகிறது. நாம் உற்சாகம் குன்றி சோர்வாக உணரும்போது, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைக் கூப்பிடுவதின் மூலம் நம்மை நாமே தூக்கிநிமிர்த்தி, கிளர்ந்தெழுப்ப முடியும்.
கர்த்தருடைய நாமத்தை நோக்கிக்
கூப்பிடுவதை நடைமுறைப்படுத்துதல்
இப்போது நாம், கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவது எப்படி என்று பரிசீலிக்க வேண்டும். முதலாவது, நாம் அவரைச் சுத்த இருதயத்திலிருந்து கூப்பிட வேண்டும் (2 தீமோ. 2:22). ஊற்றாகிய நம் இருதயம், கர்த்தரைத் தவிர வேறெதையும் தேடாமல் தூய்மையாக இருக்க வேண்டும். இரண்டாவது, நாம் தூய்மையான உதடுகளோடு கூப்பிட வேண்டும் (செப். 3:9; எபி.). நாம் நம் பேச்சைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், ஏனெனில் வீண்பேச்சைவிட நம் உதடுகளை அதிகமாகக் களங்கப்படுத்துவது வேறெதுவுமில்லை. கவனக் குறைவான பேச்சினால் நம் உதடுகள் தூய்மையற்றதாக இருந்தால், கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவது நமக்குக் கடினமாக இருக்கும். தூய்மையான இருதயத்தோடும் தூய்மையான உதடுகளோடும்கூட, திறந்த வாயும் நமக்குத் தேவை (சங். 81:10; ஒப். வ. 7). கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவதற்கு நாம் நம் வாயை விரிவாகத் திறக்க வேண்டும். மேலும், நாம் கூட்டாகக் கர்த்தரைக் கூப்பிட வேண்டும். இரண்டு தீமோத்தேயு 2:22, “அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு” என்று கூறுகிறது. கர்த்தரின் நாமத்தைக் கூப்பிடும் குறிக்கோளுக்காக நாம் ஒன்றாகக்கூடி வர வேண்டும். சங்கீதம் 88:9, “கர்த்தாவே, அனுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்” என்று கூறுகிறது. ஆகவே, நாம் அனுதினமும் அவரது நாமத்தைக் கூப்பிட வேண்டும். கர்த்தரின் நாமத்தைக் கூப்பிடும் இந்தக் காரியம் ஓர் உபதேசமல்ல. இது மிகவும் நடைமுறைக்குரியது. நாம் இதை தினமும், கணந்தோறும் பயிற்சிசெய்ய வேண்டும். சுவாசிப்பதை நாம் ஒருபோதும் நிறுத்தக் கூடாது. சுவாசம் நின்றுவிட்டால் என்ன நடக்கும் என்பது நாம் யாவரும் அறிந்ததே. மேலும், சங்கீதம் 116:2, “என் வாழ்நாளெல்லாம் அவரை நோக்கிக் கூப்பிடுவேன்” (எபி.) என்று கூறுகிறது. நாம் உயிரோடிருக்குமளவும் கர்த்தரின் நாமத்தைக் கூப்பிட வேண்டும். கர்த்தரின் மக்கள் பலர், விசேஷமாகப் புதியவர்கள், கர்த்தரை நோக்கிக் கூப்பிடும் இந்தப் பயிற்சியை ஆரம்பிப்பார்கள் என்று நான் எதிர்நோக்குகிறேன். நீங்கள் இதைச் செய்தால், கர்த்தரின் ஐசுவரியங்களை அனுபவித்துமகிழ இதுவே அதிசிறந்த வழி என்பதைப் பார்ப்பீர்கள். (Life-study of Genesis, pp. 334, 341-344)
References: Life-study of Genesis, msg. 25; CWWL, 1972, vol. 1, “The Lord’s Recovery of Eating,” chs. 3, 4; Acts 2:21, footnotes 1, 2, Recovery Version; Calling on the Name of the Lord
இயேசுவின் பெயர் இனிமை
கர்த்தரைத் துதித்தல்—அவரது பெயர் – 66
1 இயேசுவின் பெயர் இனிமை
விஸ்வாசியின் காதில்!
துக்கம் நீக்கும், காயம் ஆற்றும்,
பயத்தைப் போக்குமே.
(ஒவ்வொரு பத்தியின் கடைசி இரண்டு வரிகளை மீண்டும் பாடவும்)
2 உடைந்த நெஞ்சம், ஆவியை
அது ஆற்றிடுமே;
வாடும் ஆன்மாவிற்கும் மன்னா
களைத்தோர்க்கும் ஓய்வு.
3 பாறை உம்மேல் கட்டுகிறோம்;
கேடயம், மறைவிடம்;
அது தீரா கிருபையின்
பொக்கிஷசாலையே.
4 இயேசென் மீட்பர், மேய்ப்பர், நண்பர்,
இராஜா, தீர்க்கதரிசி;
கர்த்தர், ஜீவன், வழி, இலக்கு,
எம் துதியை ஏற்பீர்
5 எம் உள்ளச் செயல் தளர்வே,
நினைவும் குளிர்வே;
ஆனால் உம்மைக் காணும்போதோ,
எம் துதி நிறைவே.
6 அந்நாள்வரை ஒவ்வோர் மூச்சும்
உம் அன்பைச் சாற்றுவோம்;
சாவை வெல்லும் ஆசீர் பேரில்
வெற்றி பெற்றிடுவோம்.