மேய்த்துப்பேணுதல்

திரட்டு 2

இரட்சிக்கப்பட்ட பிறகு

பாடம் இரண்டு – பழைய வாழ்க்கையைக் கழித்து நீக்குதல்

1 தெச. 1:9—ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக் குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்…அறிவிக்கிறார்களே.
லூக். 19:8—சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.

நாம் இரட்சிக்கப்பட்ட உடனே நம் ஆள்தத்துவத்தில் நமக்கு ஒரு மாற்றம் ஏற்பட்டு, நாம் ஒரு புதிய மனிதனாகிவிட்டதால், ஒரு புதிய வாழ்க்கை வாழ்வதற்கு, நாம் ஒரு புதிய ஆரம்பத்தை, ஒரு புதிய தொடக்கத்தைத் தொடங்க வேண்டும். இதன் விளைவாக, நம் பழைய வாழ்க்கையைக் கழித்து நீக்குதல் இருக்க வேண்டும்.

விக்கிரகங்களை விட்டுவிடுதல்

தேவன் பொறாமையுள்ள தேவன்; தம்மைச் சேவிக்கிற ஒருவன் எந்த விக்கிரகத்துக்கு முன்பாகவும் தலைவணங்கி, ஆராதிப்பதை அவர் சகித்துக்கொள்ளமாட்டார் (யாத். 20:5). இது ஏனென்றால், விக்கிரகங்களுக்குப் பின்னால் பிசாசுகள் மறைந்து இருக்கின்றன. ஆகையால், நாம் கர்த்தரில் விசுவாசித்து, தேவனிடம் திரும்பிய பிறகு, எல்லா அளவிலும் வடிவத்திலும் உள்ள விக்கிரகங்களையும், அவை பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், அல்லது கல் போன்ற எதினாலும் செதுக்கப்பட்டு அல்லது உருவாக்கப்பட்டிருந்தாலும், அவற்றை நாம் புறக்கணித்து, விட்டுவிட வேண்டும். பழைய ஏற்பாட்டில், தேவன் தம் மக்கள் எல்லா விக்கிரகங்களையும் தகர்த்து, எரித்துப்போட வேண்டும் என்று வற்புறுத்தினார் (உபா. 7:5). தேவனுக்குச் சொந்தமான நாமும் அதையே செய்ய வேண்டும், மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காக எந்த விக்கிரகங்களையும் ஒருபோதும் விட்டு வைக்கக் கூடாது. இது தேவனுக்கு எதிராகக் குற்றமிழைக்கிறது, மற்றவர்களைச் சீர்கெடுக்கிறது.

தீய மற்றும் அசுத்தமான காரியங்களை ஒழித்துக்கட்டுதல்

நாம் கர்த்தரில் விசுவாசித்தபின்பு, குறிசொல்லுதல் மற்றும் ஜாதகம் குறித்த புத்தகங்கள், வலுசர்ப்பத்தின் உருவங்கள் அல்லது முத்திரைகளை உடைய பொருட்கள், மற்றும் எல்லா வகையான சூதாட்ட உபகரணங்கள் போன்ற, விக்கிரக ஆராதனையோடும் தீய கிரியைகளோடும் சம்பந்தப்பட்ட எல்லாத் தீமையும் அசுத்தமுமான காரியங்களையும் நாம் ஒழித்துக்கட்ட வேண்டும். வலுசர்ப்பத்தின் உருவங்களையும் முத்திரைகளையும் உடைய பொருட்கள் ஒழித்துக்கட்டப்பட வேண்டும், ஏனெனில் வலுசர்ப்பம் பிசாசின், அதாவது சாத்தானின் ஓர் சின்னம் (வெளி. 12:9). நாம் தேவனுக்குச் சொந்தமான, தேவனை ஆராதித்து சேவிக்கிற மக்களாக இருப்பதால், நாம் அணிபவை, நம் வீடுகளில் காட்சிக்கு வைப்பவை, சேமித்துவைப்பவை ஆகியவற்றில் இந்தத் தீய மற்றும் அசுத்தமான காரியங்களின் எந்தச் சுவடும் இருக்கக் கூடாது. இதற்கு மாறாக, நம் ஆடைஅலமாரி, நம் ஆபரணங்கள், மற்றும் நம் வீட்டு அலங்கரிப்புகள் அலங்காரங்கள் ஆகியவை நாம் கர்த்தரில் விசுவாசிக்கிறோம், தேவனை நேசிக்கிறோம் என்று மக்களுக்குக் காட்டவேண்டும்.

திருப்பிச்செலுத்துதல்

சகேயு மற்றவர்களிடமிருந்து பலவந்தமாய் அபகரிக்கிற வரிவசூலிப்பவனாகவும், ஒரு பணப்பிரியனாகவும் இருந்தான். அவன் கர்த்தரைப் பெற்றுக்கொண்டபோது அவனில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டது; அவன் தன் சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கவும், மற்றவரிடமிருந்து தான் பலவந்தமாய் அபகரித்த அநீதியான பணத்தை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுக்கவும் தானாகவே முன்வந்தான். இந்தச் செயல்கள் இரட்சிப்பிற்கான நிபந்தனைகளும் அல்ல, கர்த்தரின் உடனடி கோரிக்கைகள் மற்றும் கட்டளைகளும் அல்ல, மாறாக இவை சகேயுவிடம் வந்த கர்த்தருடைய சக்திவாய்ந்த இரட்சிப்பின் அசாதாரணமான விளைவாக இருந்தன. இரட்சிப்பின் இந்தச் சம்பவத்தை ஆதாரமாகக்கொண்டு, நாம் கர்த்தரில் விசுவாசித்த பின்னர், நாம் யாருக்குத் தவறிழைத்திருக்கிறோமோ, அவர்களிடம் அநீதியாகப் பெற்ற எந்த இலாபத்தையும் கூடுமானவரை சீக்கிரமாகத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். அப்போது மட்டுமே மனிதர்களுக்கு முன்பாக சாட்சியும், நம் மனச்சாட்சியில் சமாதானமும் நமக்கு இருக்கும். நாம் ஏமாற்றிப் பெற்றவை உட்பட, மற்றவர்களுக்குத் தெரியாமல் இரகசியமாக நாம் அநீதியான இலாபமடைந்திருப்போமானால், திருப்பிச் செலுத்துவதிலும், நாம் இரகசியமாகக் கடன்பட்டிருப்பதைச் திருப்பிச் செலுத்துவதிலும், மற்றவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படுத்திவிடாமல், மற்றவர்களைச் சிக்க வைத்துவிடாமல் இருக்க நாம் ஞானமாய் நடந்துகொள்ள வேண்டும். நம் இருளான செயல்களை அறிந்தவர்களுக்கு மட்டுமே நாம் இந்தத் திரும்பச்செலுத்துதலைத் தெரியப்படுத்த வேண்டும்.

திருப்பிச் செலுத்துதலின் கோட்பாட்டின்படி, நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு, மற்றவர்களோடுடனான எந்த ஒழுக்கக்கேடான உறவுகளோடும் இடைபட இதுபோலவே, நாம் ஞானமாய் நடந்துகொள்ள வேண்டும். அப்போது மட்டுமே நாம் ஒரு நேர்மையான கிறிஸ்தவன் என்று அங்கீகரிக்கப்படத் தகுதியுள்ளவர்களாயிருக்கிறோம். (Life Lessons, vol. 1, pp. 19-21)

References: Life Lessons, vol. 1, lsn. 3; CWWL, 1950-1951, vol. 2, “The Pure in Heart,” ch. 3

எந்தன் வாழ்வில் அற்புத மாற்றம் வந்ததே
இரட்சிப்பின் நிச்சயமும், மகிழ்ச்சியும்—வாழ்வில் மாற்றம் – 309

1 எந்தன் வாழ்வில் அற்புத மாற்றம் வந்ததே
இயேசென் உள்ளத்தில் வந்ததால்!
நான் தேடின ஒளி உள்ளத்தில் வீசிற்றே
இயேசென் உள்ளத்தில் வந்ததால்!

இயேசென் உள்ளத்தில் வந்ததால்!
இயேசென் உள்ளத்தில் வந்ததால்!
வெள்ளம்போல் ஆனந்தம் உள்ளெல்லாம் பொங்குதே
இயேசென் உள்ளத்தில் வந்ததால்!

2 வழி தப்பி நான் இனி அலைவதில்லை,
இயேசென் உள்ளத்தில் வந்ததால்!
திரளான பாவமெல்லாம் கழுவினாரே
இயேசென் உள்ளத்தில் வந்ததால்!

3 அசையா நங்கூரம்போல் நம்பிக்கையுண்டு
இயேசென் உள்ளத்தில் வந்ததால்!
ஐய மேகங்கள் என் பாதை மறைப்பதில்லை,
இயேசென் உள்ளத்தில் வந்ததால்!

4 சாவின் பள்ளத்தாக்கில் எனக்(கு) ஒளி உண்டு,
இயேசென் உள்ளத்தில் வந்ததால்!
அந்த நகரத்தின் வாயில்கள் காண்கின்றேன்
இயேசென் உள்ளத்தில் வந்ததால்!

5 அந்த நகரத்தில் நான் வாழச் செல்கின்றேன்,
இயேசென் உள்ளத்தில் வந்ததால்!
முன்பே போகப்போக சந்தோஷம் சந்தோஷம்
இயேசென் உள்ளத்தில் வந்ததால்!