மேய்த்துப்பேணுதல்
திரட்டு 2
இரட்சிக்கப்பட்ட பிறகு
பாடம் பத்து – அர்ப்பணம்
1 கொரி. 6:19-20—உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? 20கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால்…உங்கள் சரீரத்தில்…தேவனை மகிமைப்படுத்துங்கள்.
2 கொரி. 5:14-15—கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும், 15பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.
அர்ப்பணத்தின் அடிப்படை
கர்த்தர் விலைக்கிரயமாகத் தம் இரத்தத்தைக் கொண்டு நம்மை வாங்கியிருப்பதால் (வெளி. 5:9), நாம் அவரது விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளாகி விட்டோம் என்பதே கர்த்தருக்கு நம் அர்ப்பணத்தின் அடிப்படை. நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல, மாறாகக் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள். நம்மீது நமக்கல்ல, கர்த்தருக்கே உரிமை இருக்கிறது [1 கொரி. 6:19-20].
அர்ப்பணத்துக்கான தூண்டுதல்
கர்த்தருடைய அன்பு நம்மை நெருக்குவதாலும், நெருக்கி ஏவுவதாலும் நாம் நம்மைக் கர்த்தருக்கு அர்ப்பணிக்கிறோம். நம்மை அவருக்கு அர்ப்பணிப்பதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியாதபடிக்கு அவரது அன்பு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது. அவர் நம் நிமித்தம் மரித்ததால், நாமெல்லாரும் மரித்தோம்; ஆகையால், நாம் மரிக்க வேண்டியதில்லை. மேலும், நாம் அவருக்காக வாழ்வதற்கு அவரது ஜீவனைப் பெறுமாறு அவர் மரித்தார். இப்படிப்பட்ட அன்பு அவரை நேசிக்கவும், நம்மையே அவருக்கு அர்ப்பணிக்கவும் நம்மை நெருக்கி ஏவுகிறது, கட்டாயப்படுத்துகிறது. இந்த அர்ப்பணம் அவரது மாபெரும் அன்புக்கான நம் நன்றியறிதலாகவும், திரும்பச்செலுத்துதலாகவும் இருக்கிறது….அவரது அன்பினால் அவர் நமக்காக மரித்தார், இந்த அன்புதான் நாம் நம்மை அவருக்கு அர்ப்பணிப்பதற்கான தூண்டுதல் ஆகும். [2 கொரி. 5:14-15].
அர்ப்பணத்தின் உட்கருத்து
நாம் நம்மைக் கர்த்தருக்கு அர்ப்பணிக்கும்போது, கர்த்தருக்கு மரித்துப்போன பலிகளை ஏறெடுத்த பழைய ஏற்பாட்டில் உள்ள மக்களைப்போல் அல்லாமல், நாம் நம்மையே ஒரு ஜீவிக்கும் பலியாக அவருக்கு வழங்குகிறோம். ஏறெடுக்கப்பட்டிருக்கும் ஒரு ஜீவிக்கும் பலியாக, நாம் பரிசுத்தமாகிவிட்டோம், அதாவது, நாம் கர்த்தரின் பயன்பாட்டிற்காக அவருக்கென்று நம்மையே வேறுபிரித்துவிட்டோம், அதோடு நாம் தேவனுக்கு நற்பிரியமாக இருக்கிறோம், அவரது இதய விருப்பத்தைத் திருப்திப்படுத்துகிறோம் [ரோ. 12:1].
அர்ப்பணத்தின் குறிக்கோள்
கர்த்தருக்கு வாழ்வதே கர்த்தருக்கான நம் அர்ப்பணத்தின் குறிக்கோள். அவருக்கு வாழ்வது என்பது அவருக்காக வாழ்வதைவிட உயர்வானது. நாம் அவருக்காக வாழும்போது, நாமும் அவரும் இன்னும் இருவராக இருக்கக் கூடும், ஆனால் நாம் அவருக்கு வாழும்போது, நாமும் அவரும் ஒன்றாக வேண்டும். நாம் அவருக்கு வாழும்போது, நாம் அவரை நம் ஜீவனாக மட்டுமல்லாமல், நம் நபராகவும் எடுத்துக்கொள்கிறோம். நம் வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் அனைத்திலும், நாம் அவருடன் ஒத்துழைக்கவும், நம் வழியே அவர் தம்மையே வாழ்வதற்கு அவரை அனுமதிக்கவும் வேண்டும் [2 கொரி. 5:15; ரோ. 12: 1; 1 கொரி. 6:20].
அர்ப்பணத்தின் விளைவு
எல்லாக் காரியங்களிலும் கர்த்தரின் அதிகாரத்திற்குப் பணிந்தடங்கி, நாம் நடைமுறைரீதியில், அவரால் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளாக ஆகிறோம் என்பதே கர்த்தருக்கான நம் அர்ப்பணத்தின் முதல் விளைவு [1 கொரி. 7:22-23].
களிமண் பாத்திரம் குயவனின் கரங்களில் வனையப்படுவதுபோலவே, நாம் தேவனுடைய வனைதலின்கீழ் தேவனுடைய வேலைப்பாடாக இருக்கிறோம் (ஒப். ஏசா. 64:8). நம்மைச் சுதந்தரமாக வனைவதற்குக் கர்த்தருக்கு நம் ஒப்புதல் கிடைக்கிறது என்பது கர்த்தருக்கான நம் அர்ப்பணத்தின் இன்னொரு விளைவாகும் [எபே. 2:10].
நாம் நம்மையும், நம் அவயவங்களையும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கும்போது, இன்னொரு விளைவும் ஏற்படுகிறது; அதாவது, நாம் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, பாவத்தால் ஆளப்படாமல், பரிசுத்தப்படுதலுக்கென்று, நம் அவயவங்கள் நீதியின் ஆயுதங்களாகவும், நீதிக்கு அடிமைகளாகவும் ஆகின்றன [ரோ. 6:13-14, 19].
பழைய ஏற்பாட்டில் ஒரு தகனபலி ஏறெடுக்கப்படுவதின் விளைவு என்னவென்றால் அந்தத் தகன பலி மனிதர்களுக்கு முன்பாக சாம்பலானது, தேவனுக்கு ஒரு சுகந்த வாசனையானது. ஒரு ஜீவிக்கும் தகன பலியாகக் கர்த்தருக்கு நம்மையே நாம் வழங்கி, மெய்யாகவே கர்த்தருக்கு உண்மையாக இருந்தோமானால், நாம் மனிதர்களுக்கு முன்பாக சாம்பலைப்போலவும் தேவனுக்கு ஓர் ஆனந்த வாசனையாகவும் இருப்போம் [லேவி. 1:9].
தேவனை மகிமைப்படுத்துவதே, அதாவது தேவனின் மகிமையின் ஒரு வெளியரங்கமாக தேவன் நம்மிலிருந்து வாழ்ந்துகாட்டப்பட்டு நம் மூலம் வெளிக்காட்டப்பட அவரை நாம் அனுமதிப்பதே [1 கொரி. 6:20] கர்த்தருக்கான நம் அர்ப்பணத்தின் உச்சநிலை குறிக்கோள். (Life Lessons, vol. 2, pp. 43-47)
பலிபீடத்தின் மீதுள்ள அக்கினி தொடர்ந்து
எரிந்துகொண்டிருக்க வேண்டும்.
ஜீவனின் எந்த அனுபவத்தையும் ஒரேமுறை மட்டும் அனுபவித்து அதின் உச்சத்தை அடைவது சாத்தியமற்றது என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். நம் அனுபவம் முதிர்ச்சியின் நிலையை அடையும்வரை படிப்படியாக அதிகரித்து, முழுமையாகும்படி நாம் அதைத் தொடர்ச்சியாக நாட வேண்டும்.
நாம் முதல் முறை நம்மை அர்ப்பணிக்கும்போது, நம் அனுபவம், தாயின் கர்ப்பத்திலுள்ள கருவைப் போன்றது—காது, கண், வாய், மூக்கு ஆகியவற்றை ஒருவன் தெளிவாக வரையறுக்க முடியாது. எனினும் நாம் ஜீவனில் வளரும்போது, அர்ப்பணத்தின் அனுபவத்துடன் தொடர்புடைய இந்த ஐந்து குறிப்புகளும் படிப்படியாக நம்மில் வடிவமெடுக்கின்றன. அப்போது, நாம் தேவனால் வாங்கப்பட்டிருக்கிறோம் என்றும், நம் எல்லா உரிமைகளும் அவரது கரத்தில் இருக்கின்றன என்றும் ஒரு திட்டவட்டமான உணர்வு நமக்கு ஏற்படுகிறது. அவரது அன்பு நம் இருதயங்களைத் துளைத்திருப்பதால் நாம் அவரது அன்பின் கைதிகளாகிறோம்.
உண்மையிலேயே நாம் தேவனின் அனுபவமகிழ்ச்சிக்காகவும் திருப்திக்காகவும் பலிபீடத்தின்மேல் வைக்கப்பட்ட ஒரு பலியாகிறோம். நாம் தேவனால் முற்றும்முடிய கையாளப்பட்டவர்களாகவும் அதன்பின்பு, அவருக்காக வேலைசெய்யக் கூடியவர்களாகவும் இருப்போம். நம் எதிர்காலம் மெய்யாகவே ஒரு பிடி சாம்பலைப்போல இருக்கும். தேவனின் சித்தத்துக்கு வெளியே தப்பிப்போவதற்கான நம் வழிகள் யாவும் துண்டிக்கப்பட்டிருக்கும்; தேவன் மட்டுமே நம் எதிர்காலமாகவும், நம் வழியாகவும் இருப்பார். அந்நேரத்தில் நம் அர்ப்பணத்தின் அனுபவம் உண்மையில் முதிர்ச்சியடைந்ததாயிருக்கும். கர்த்தரின் கிருபையால், நாமெல்லாரும், சேர்ந்து நாடுவோமாக, முன்செல்வோமாக. (CWWL, 1953, vol. 3, “The Experience of Life,” pp. 45, 48)
References: Life Lessons, vol. 2, lsn. 18; CWWL, 1953, vol. 3, “The Experience of Life,” ch. 3
ஏற்பீர் எந்தன் வாழ்க்கையை,
அர்ப்பணம்—கர்த்தருக்கு யாவற்றையும் ஒப்புக்கொடுத்தல் – 445
1 ஏற்பீர் எந்தன் வாழ்க்கையை,
அர்ப்பணித்தேன் உமக்கே;
ஏற்பீர் எந்தன் நாட்களை,
ஓயா துதி பாயட்டும்,
ஓயா துதி பாயட்டும்.
2 ஏற்பீர் எந்தன் கைகளை,
உம் அன்பால் அசைந்திட;
ஏற்பீர் எந்தன் கால்களை,
உம் சேவைக்கு விரைய,
உம் சேவைக்கு விரைய.
3 ஏற்பீர் எந்தன் குரலை,
என் ராஜாவைப் பாடிட;
ஏற்பீர் எந்தன் உதட்டை,
உம் செய்தியால் நிரம்ப,
உம் செய்தியால் நிரம்ப.
4 ஏற்பீர் எந்தன் பொன் வெள்ளி;
துரும்பும் வைத்துக்கொள்ளேன்;
ஏற்பீர் எந்தன் அறிவை,
அதன் ஆற்றல் ஆளுவீர்,
அதன் ஆற்றல் ஆளுவீர்.
5 ஏற்பீர் எந்தன் சித்தத்தை,
எனதல்ல உமது;
ஏற்பீர் எந்தன் இதயம்,
உம் அரசாசனமாய்,
உம் அரசாசனமாய்.
6 ஏற்பீர் என் அன்பை, நாதா,
ஊற்றினேன் உம் பாதத்தில்.
ஏற்பீர் என்னை நான் என்றும்,
உமக்கு மட்டும் சொந்தம்,
உமக்கு மட்டும் சொந்தம்.